×

ஆவியின் கனி - 3 சமாதானம்

சமாதானம் என்பதற்கு நல்லுறவு எனப் பொருளாகும். இன்றைய உலகில் மனிதர்களாகிய நாம் சந்திக்கின்ற முக்கியமானபிரச்னை சமாதானமின்மையே. உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட முதல் குடும்பத்திலேயே பகை உணர்வும், பொறாமையும் உருவாகிவிட்டது. ஆதாமீன் முதல் மகனாகிய காயீன் தன் உடன் பிறந்த சகோதரனாகிய ஆபேல் மீது பொறாமை கொண்டான். அப்பொறாமை பகையாக மாறியது. பகை கொலையாக  உருவெடுத்தது. இவை அனைத்திற்கும் காரணம் காயீன். ஆபேல் ஆகிய இருவருக்கும் இடையில் காணப்பட்ட சமாதானமின்மையே ஆகும்.

சமாதானத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த வேறொரு குடும்பத்தைப் பற்றியும் திருமறையில் காண்கிறோம். அக்குடும்பம் ஆபிரகாமும், அவரது தலைமுறையினரும் சகமனிதர்களோடு சமாதானமான நல்லுறவு கொண்டிருந்தார்கள். அதனால் ஆண்டவருடைய ஆசீர்வாதங்களையும் பெற்று மகிழ்ந்தனர். அதைக்குறித்து தொடர்ந்து  சிந்திப்போம். ஆபிரகாமும், அவரது சகோதரனுடைய குமாரன் லோத்துவும் இணைந்து மந்தை மேய்க்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடைய ஆஸ்தியும், மந்தையும் மிகுந்தது, மந்தை மேய்ப்பர்களுக் கிடையேவாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது ஆபிரகாம் லோத்தை நோக்கி எனக்கும், உனக்கும், என் மேய்ப்பருக்கும், உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்.

நாம் சகோதரர் ( ஆதியாகமம் 13 : 8) எனக்கூறி சமாதானத்திற்கு விட்டுக் கொடுத்து, வழிவகுத்தார். அதுபோல் ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கும் சகமனிதர்களோடு சமாதானமாக வாழ்ந்தார். கேரார் என்னுமிடத்தில் ஈசாக்கு தன் மேய்ப்பர்களுடன் கிணறு தோண்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வூரைச் சேர்ந்த சிலர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று வாக்குவாதம் பண்ணினர். ஈசாக்கு அவர்களோடு வாக்குவாதம்  செய்யாமல் அவ்விடம் விட்டு புறப்பட்டு, வேறு ஒரு இடத்தில் அவர் கிணறு தோண்ட கடவுள் அவரை ஆசீர்வதித்தார். அவர் பெற்ற ஆசீர்வாதத்தை கண்ட அவரது பகைவர்கள் பின்னாட்களில் அவரிடத்தில் வந்து சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள் என்று காண்கிறோம். ஆபிரகாமின் மகன் மட்டுமல்ல, அவரது பேரனாகிய யாக்கோபும் சமாதானத்தை நாடினார்.
தனக்கும், தனது சகோதரர் ஆகிய ஏசாவுக்கும் இடையில் காணப்பட்ட பகைமாற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒருநாள் இரவு முழுவதும் கடவுளிடத்தில் மன்றாடி ஜெபித்தார். மறுநாள் தனக்கு எதிர் கொண்டு வந்த தனது சகோதரனுக்கு முன்பாக ஏழு விசை தரைமட்டும் குனிந்து வணங்கினார். மேலும், தன் சகோதரனுடைய கண்களில் தயவு கிடைக்க வேண்டுமென்பதற்காக சில பொருட்களை தன் சகோதரனுக்கு வெகுமதியாகக் கொடுத்தார். இதன் விளைவாக இருவருக்கும் இடையில் காணப்பட்ட பகைமை மறைந்தது சமாதானம் மலர்ந்தது.

இவ்வாறு ஆபிரகாமின் குடும்பம் சகமனிதர்களோடு சமாதானமாக நல்லுறவு கொண்டிருந்த காரணத்தால், கடவுள் அக்குடும்பத்தை ஆசீர்வதித்தார். எல்லா நலமும், எல்லா வளமும் பெற்று வாழ்ந்தனர். இன்றும் நாம் அவர்களை முற்பிதாக்கள் என்று அன்போடு அழைக்கிறோம். இயேசு  சமாதான பிரபு, அவர் நமக்கு நித்தியசமாதானம் கொடுப்பவர். அவர் அருளும், சமாதானம் பெற்று, சகமனிதர்களோடு சமாதானமாக நல்லுறவுடன் வாழ அழைக்கப்படுகிறோம். நமது உடன் பிறந்தோர், உறவினர்கள், நம்மோடு பணி செய்வோர். நமது இல்லங்களுக்கு அருகில் வசிப்போர் ஆகிய அனைவரிடமும், எந்த வேற்றுமையும் இன்றி எந்தவொரு பகை உணர்வுக்கும் இடம் கொடுக்காமல் சமாதானமாக வாழ்வோமாக. கடவுள் அருளும் சமாதானத்தையும், ஆசீர்வாதங்களையும் பெற்று மகிழ்வோமாக !சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள். மத்தேயு 5:9.

Rt. Rev. Dr. S.E.C. தேவசகாயம், பேராயர்,
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?