×

புன்னகை தவழ பேசுங்கள்

சக மனிதர்களிடம் எப்போதும் புன்னகை தவழ பேசுங்கள். உறவுகளிடமும், நண்பர்களிடமும் கர்வம் கொள்ளாதிருங்கள். மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இன்றைக்குப் பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த வகுப்புகளில் இரண்டு முதன்மையான விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் பேசுங்கள்,  தன் முனைப்பு, கர்வம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள் என்பது தான் முக்கியமான வழிகாட்டுதல்கள்.இதற்குத் தான் ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் ஒரு காசு செலவில்லாமல் இத்தகைய நற்பண்புகளை, நன்னடத்தைகளை இறைத்தூதர்(ஸல்)  நமக்குக் கற்றுத் தந்துள்ளார்.

“உங்கள் சகோதரனைப் பார்த்துப் புன்னகை செய்வதும் தர்மமே” என்பது நபிகளாரின் பொன் மொழிகளில் ஒன்று. பேச்சிலும் நடத்தையிலும் மென்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நபிகளார் கற்றுத்தந்த இனிய பாடம். “மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான்” என்பது புகழ்பெற்ற நபி மொழிகளில் ஒன்று. அடுத்து, தலைமைப் பண்பு உள்ளவர்களிடம் இருக்கக்கூடாத ஒரு குணம் கர்வம். “கர்வம் சர்வ நாசம்” என்பார்கள். கர்வம் இருக்கும் இடத்தில் அன்பு, கருணை, சகிப்புத்தன்மை போன்ற எந்த உயர்பண்பும் இருக்காது. தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையில் கர்வம் எனும் திரை விழுந்து விட்டால் அந்த அமைப்புக்கு விரைவில் மூடுவிழா உறுதியாகிவிடும்.
“யாருடைய உள்ளத்தில் துளியளவு கர்வம் இருக்கிறதோ அவர் சுவனத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார் இறைத்தூதர் அவர்கள்.
உடனே ஒரு தோழர், “இறைத்தூதர் அவர்களே, ஒருவர் அழகான உடையும் அழகான காலணியும் அணிகிறார். இவை கர்வத்தில் உட்படுமா?” என்று கேட்டார். உடனே நபிகளார், “இல்லை. இறைவன் அழகானவன். அவன் அழகை விரும்புகிறான். சத்தியத்தை மறுப்பதும் பிறரை இழிவாகக் கருதுவதும் தான் கர்வம் ஆகும்” என்று விளக்கம் அளித்தார்கள்.

அகில உலகங்களுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்தான் இறைத்தூதர் என்றாலும் தமக்கெனத் தனிமேடை, தனி இருக்கை, தனி அரியணை என்றெல்லாம் ஏற்படுத்தித் தோழர்களிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தோழர்களோடு தோழராகவே எப்போதும் இருப்பார்.ஒருமுறை நபிகளாரும் தோழர்களும் பயணம் மேற்கொண்டனர். வழியில் ஓரிடத்தில் தங்கினர். தோழர்கள் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவர் தண்ணீர் எடுத்து வந்தார். இன்னொருவர் சமையலுக்குத் தேவையான பொருள்களைத் தயார் செய்தார். நபிகளாரும் அந்தப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். தோழர்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் அடுப்பு எரிப்பதற்குத் தேவையான விறகுகளையும் சுள்ளிகளையும் சேகரித்துக் கொண்டு வந்தார்.“இறைத்தூதர் அவர்களே, இந்த வேலையை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்ள மாட்டோமா?” என்று தோழர்கள் கேட்டபோது, “நானும் உங்களில் ஒருவன்தான்” என்று அன்பொழுகக் கூறினார்கள்.

இறுதிவரை நபிகளார் அப்படித்தான் இருந்தார். வெளியூரில் இருந்து யாரேனும் நபிகளாரைச் சந்திக்க மதீனா நகர் வந்தால் திகைத்துப் போய் விடுவாராம். தோழர்கள் புடைசூழ அமர்ந்திருப்பவர்களில் யார் இறைத்தூதர் என்று வந்தவருக்குத் தெரியாதாம்.
அந்த அளவுக்கு எளிமைப்பண்பு...! யாரேனும் ஒரு தோழர் எழுந்து “இதோ, இவர்தான் இறைத்தூதர்” என்று சொன்னால் தான் தெரியும்.அண்ணலாரின் முழு வாழ்வையும் நாம் ஆய்ந்து பார்த்தால் இன்று ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் “வாழ்வியல் கலை” வகுப்பில் என்னவெல்லாம் சொல்லித் தரப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் நபிகளார் சாதாரண பாமரமக்களுக்கும் மிக எளிமையாகக்  கற்றுத் தந்துள்ளதை நாம் கண்டு கொள்ளலாம்.அந்தப் பயிற்சியின் காரணமாகத்தான் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உலகையே கட்டியாளும் கலீப்பாக்களாக (ஆட்சியாளர்களாக) உயர்ந்தார்கள்.

- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED சுந்தர வேடம்