படைத்தவனே பாதுகாப்பான்...

“வானத்தின் மீதும் அங்கு இரவில் தோன்றக்கூடியதன் மீதும் சத்தியமாக!

“இரவில் தோன்றக்கூடியது என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

“ஒளிரும் தாரகைதான் அது. இவ்வாறு சத்தியம் செய்து சொல்கிறேன்.

“ஒவ்வொரு மனிதனின் மீதும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய வானவர் நியமிக்கப்படாமல் இல்லை.

“எனவே இறைவனை மறுக்கும் மனிதன், தான் படைக்கப்பட்டிருப்பது எந்த மூலப்பொருளிலிருந்து என்பதைப் பார்த்துக்கொள்ளட்டும்.

“பீறிட்டுப் பாயும் நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டிருக்கிறான்.

“ஆணின் முதுகுந்தண்டுக்கும் பெண்ணின் நெஞ்செலும்புகளுக்கும் இடையே இருந்து வெளியாகி கருவறையில் சேர்க்கப்படுகின்ற நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டுள்ளான்.

“இவ்வாறு முதன்முறையாகப் படைக்கும் இறைவன், நிச்சயமாக அவனை மீண்டும் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவன்தான்.“அந்த மறுமை நாளில் - எந்த ஆற்றலும் அவனுக்கு இருக்காது. எந்த உதவியாளரும் இருக்கமாட்டார்.”

இவை திருக்குர்ஆனின் 86ஆம் அத்தியாயத்தின் (அத்தாரிக்) முதல் பத்து வசனங்கள் ஆகும்.

வானத்தின் மீதும் இரவில் தோன்றக்கூடியதின் மீதும் சத்தியமிட்டு இறைவன் சொல்லும் செய்திகள் என்ன?

மனிதனைப் படைத்தது இறைவன்தான். இந்த உலகில் அவனுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இறைவனே செய்துள்ளான். இதற்கு நன்றி செலுத்தும் வகையில் மனிதன் இறைவனுக்கே அடிபணிந்து வாழ வேண்டும்.இதை மனிதன் ஆணவத்துடன் மறுப்பானாகில், அவன் படைக்கப்பட்ட விதத்தையாவது சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்கிறது குர்ஆன்.

“பீறிட்டுப் பாயும் நீரிலிருந்து” என்பதற்கு இப்னு கஸீர் விரிவுரை நூல் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறது:“அதாவது அந்த நீர் விந்து ஆகும். ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் பீறிட்டுப் பாய்ந்தவாறு அது வெளிப்படுகிறது. வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனின் அனுமதியுடன் அவ்விருவரின் மூலம் குழந்தை பிறக்கிறது. அதனால்தான் ஏழாம் வசனத்தில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறியிருக்கிறான் - தாம்பத்தியத்தின் போது ஆணின் முதுகந் தண்டுக்கும் பெண்ணின் நெஞ்செலும்புகளுக்கும் இடையே இருந்து வெளியாகிக் கருவறையில் சேர்க்கப்படுகின்ற நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டுள்ளான்.”நாற்றமடிக்கும் சாதாரண ஒரு நீர்த்துளியின் மூலம் படைக்கப்பட்ட மனிதன் மகத்தான இறைவனையும் மறுமையையும் எந்த அடிப்படையில் மறுக்கிறான்? அவன் எந்த மூலப்பொருளில் இருந்து படைக்கப்பட்டுள்ளான் என்பதைப் பார்க்கட்டும். படைக்கப்பட்ட மூலப்பொருளின் பலவீனத்தை எடுத்துக்கூறி மனிதனை எச்சரித்து அவனுக்கு நேர்வழியை உணர்த்துவதே இந்த வசனங்களின் நோக்கமாகும்.

ஒன்றுமே இல்லாத பலவீனமான மூலப்பொருளில் இருந்து முதல் முறையாக மனிதனைப் படைக்க இறைவனால் முடியும் எனில் மறுமையில் மீண்டும் அவனுக்கு உயிர் கொடுத்து எழுப்பவும் இறைவனால் இயலும் என்கிற உண்மையும் உணர்த்தப்படுகிறது.

“எந்த நல்லுரையையும் செவிதாழ்த்திக் கேட்க மாட்டேன்” என்று ஆணவத்துடன் வாழும் மனிதன் நிச்சயம் மறுமையில் இறைவனின் திருமுன் வரத்தான் போகிறான். அந்த மறுமை நாளில் மனிதனுக்கு எந்த ஆற்றலும் இருக்காது. எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள் என்பதையும், இறைவன் அளிக்கும் தண்டனையிலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் அவனால் முடியாது என்பதையும் இறைவன் இந்த வசனங்களில் எச்சரித்துவிட்டான்.

- சிராஜுல்ஹஸன்

Related Stories: