×

ஆவியின் கனி - 2 சந்தோஷம்

எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள் ( தெ .5:16)
மகிழ்ச்சியுடன் வாழ்வதை மனிதர்களாகிய நாம் அனைவரும் விரும்புகிறோம் அதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். லண்டன் மாநகரில் சிரிப்பு வாரம் என்ற ஒரு வாரத்தை ஆசரிக்கிறார்கள். இவ்வாரம் முழுவதும் கவலைகளை மறந்து சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது அவர்களது எண்ணமாகும். உளவியலாளர்களும் மன அழுத்தம் ஏற்படும் வேளைகளிலெல்லாம் சிரியுங்கள், அது உங்கள் கவலைகளை மாற்றும் என்கின்றனர். இவ்வாறு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக மனிதர்களாகிய நாம் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் மனதின் அழுத்தங்கள் குறையவில்லை. மனதில் மகிழ்ச்சி நிறையவுமில்லை.மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு வாழ திருமறை நல்லதொரு வழிமுறையைக் காட்டுகிறது. அவ்வழிமுறையானது, பிறருக்கு நன்மை செய்தலே ஆகும். ஆம், நன்மை  செய்வதும், மகிழ்ச்சியாயிருப்பதும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை ஆகும். ஆகவே தான், மகிழ்ச்சி யாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல் வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன் என்று திருமறை கூறுகிறது.

இங்கிலாந்து தேசத்திலே சர். பார்டல் பெரைரி (Sir Partle Frere) என்ற ஒருவர் இருந்தார். இவர் இந்தியாவில் இறைப்பணி ஆற்றிவிட்டு இங்கிலாந்து நாட்டுக்குத் திரும்பினார். அவருடைய தாயார் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து அவரை அழைத்து வரும்படி ஒரு வண்டியை அனுப்பினார். பார்டல் பெரைரியை முன்பின் பார்த்திராத வண்டிக்காரர் அந்தத் தாயிடம், அம்மா உங்கள் மகனை ரெயில்வே ஸ்டேஷனில் எப்படி நான் அடையாளம் கண்டுபிடிப்பது? என்றார். அதற்குத் தாயார், அந்த ரெயில்வே ஸ்டேஷனில் பயணிகள் இறங்கும்போது யாராவது ஒருவர் மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தால் அவர்தான் என்னுடைய மகன் என்றார். வண்டிக்காரர் ரெயில் வந்து நின்றபோது கவனித்துக் கொண்டிருந்தார். ஒருவர், வயதான ஒருவருக்கு ரெயிலை விட்டு இறங்க உதவி செய்து, அவருடைய பொருட்களை எல்லாம் இறக்கிக் கொடுத்தார். வண்டிக்காரர் அவரிடம்போய் விசாரித்தார். தாயார் சொன்னது சரியாக இருந்தது, அவர்தான் சர். பார்டல் பெரைரி, ஆம் பிறருக்கு உதவி செய்வதையே தன் அடையாளமாகுமளவுக்கு சர்.

 பார்டல் பெரைரி சேவை மனப்பான்மையில் நிறைந்திருந்தார். நாம் பிறருக்கு உதவி செய்தால் உதவி பெறுபவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நாமோ இரட்டிப்பான மகிழ்ச்சி அடைவோம். மகிழ்ச்சி மட்டுமல்லாது கடவுள் அருளும் ஆசீர்வாதங்களையும் பெறுவோம். ஏழைக்கு இரங்குகிறவர்கள், கடவுளுக்கு கடன் கொடுக்கிறார்கள் என்றும், கடவுள் அதை அவர்களுக்குத் திரும்பக் கொடுப்பார் என்றும் திருமறை கூறுகிறது. ஆகவே, ஒன்றும் இல்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள் (நெகேமியா 8:10) என்று திருமறை கூறுவதற்கேற்ப, ஒன்றுமில்லாதோருக்கு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம்.இயேசு நன்மை செய்கிறவராகச் சுற்றித்திரிந்தார். (அப்போஸ்தலர் 10: 38). ஆகவே நாமும், இயேசுவின் பண்புகளை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, அவர் போல் செயல்படும்போது நித்திய மகிழ்ச்சியை நாம் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக் களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள். நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். சஞ்சலமும், தவிப்பும் ஓடிப்போம்.நம்மால் இயன்ற நன்மைகளைச் செய்வோமாக ! கடவுள் அருளும் மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் பெறுவோமாக!

Tags :
× RELATED மருத்துவ குணம் நிறைந்த பெர்சிமன் பழ சீசன் துவங்கியது