விளைஞ்ச பயிர்களை காத்த மாடன்

ரெங்கசமுத்திரம், நெல்லை மாவட்டம்

திருநெல்வேலியிலிருந்து முக்கூடல் வழியாக அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ளது. ரெங்கசமுத்திரம். இங்குள்ள அவுசபுரி குளக்கரையில் வீற்றிருக்கும் மாடன். மடையடிசாமி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவர் பக்தனின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு குளத்தின் கரையில் காவலாய் இருக்கிறார். அவுசபுரி குளத்தை நம்பி சாட்டுப்பத்து பகுதியில் பல ஏக்கர் பரப்பளவு நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருந்தன.

அதில் பெரும்பாலான நிலங்கள் ஊரில் பெரும் நிலக்கிழாராக இருந்த நாரம்பூ லிங்க ஐயருக்கு சொந்தமானது. அப்பகுதியில் பெரிய ஆன்மிக

வாதியாக திகழ்ந்த இவர் மந்திரங்கள் கற்றதோடு, மாந்திரீகமும் கற்றிருந்தார். மேலும், கண் திருஷ்டி, வியாபாரம் செழிக்க, தொழிலில் அபிவிருத்தி, விவசாயம் செழித்தோங்க, பிணி, பீடை அகற்றுதல் போன்ற பரிகாரங்களுக்கும் பூஜை, வழிபாடுகள் செய்து வந்தார்.

பெரும் நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள், பண்ணையார்கள் மட்டுமன்றி, நெல்லை ஜில்லா மற்றும் மலையாள நாட்டில் உள்ள தொழிலதிபர்களும் இவருக்கு நெருக்கம். இவருக்கு தோட்டம் மற்றும் வயல் வேலைகளை அப்பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன் செய்து வந்தான்.

முத்துக்கருப்பன் ஊர்க்காடு சுடலைமாடசுவாமி மீது அளவு கடந்த பக்தி கொண்டவன். அசைவ பிரியனான இவன் வெள்ளிக்கிழமையானால் பச்சரிசி சாதம் மட்டுமே உட்கொண்டு சுடலைமாடனை மனதில் நினைத்து பயபக்தியோடு, மாலையில் கோயிலுக்கு சென்று அய்யனை வணங்கிய பின்னரே அடுத்த வேளை உணவை உண்பான். எப்போதும் கோயில் திருநீறு அணிந்து தான் தனது பணிகளை செய்வான். அக்கம் பக்கம் யார், எந்த வேலை கொடுத்தாலும் தட்டாமல் செய்பவன் முத்துக்கருப்பன்.

அதனால் அவரது தந்தை இவனை வேலைக்கு அனுப்ப வேண்டும் என்றெண்ணியவர், ஐயரிடம் சென்று, ‘‘பெத்தவங்களுக்கு ஒரு வேலையும் செய்யமாட்டான். ஊரில யாரு, எந்த வேலை செய்ய சொன்னாலும் சும்மா செஞ்சிட்டு வாரான். ஊருக்கு மாரடிக்கத்தான் இவன் லாயக்கு, அதனால சாமி, நீங்க தான் இவனுக்கு புத்தி மதிக சொல்லி, நல்ல ஜோலிய கொடுங்கண்ணு,’’ கூறி, நாரலிங்க ஐயரிடம், முத்துக்கருப்பனை வேலைக்கு சேர்த்து விட்டார். அவரது தந்தை முத்துரெங்கன்.

ஐப்பசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, அடை மழைக்காலம். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மாலை நேரம் சாப்பாடு முடித்துக்கொண்டு ராத்திரி தோட்டக்காவலுக்கு புறப்பட தயாரானான் முத்துக்கருப்பன். அப்போது அவன் தாயார், ‘‘மகராசா, நல்ல மழை பெய்யுதே, இன்னைக்கு

காவலுக்கு போவாண்டாம் ராசா’’‘‘ஆத்தா, நம்ம சுடலை, என் கூட இருக்கிறார், நீ ஏன் ஆத்தா கவலைப்படுறே’’அந்த நேரம் அவரது தந்தை, ‘‘ஏலே, ஐயா கருப்பு, அந்த சாக்குபைய(கோணி) எடுத்து தலையில போட்டு போப்பா’’‘‘சரி, சரி நான் போறேன். நீ கதவ சாத்திக்க’’‘‘பயபுள்ள வரக்கெத்து கெட்டால போறேன்னு சொல்லிட்டு போறான். போயிட்டு வாரேன்னு சொல்லாம ”என்று முணுமுணுத்துக்கொண்டார் முத்து ரெங்கன்.

முத்துக்கருப்பன் தோட்டக்காடுகளை சுற்றிப்பார்த்து விட்டு வயல்காடு பக்கம் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மின்னல் தொடர்ந்து மின்னி கொண்டிருக்க, இடியும் அதிகமாக இடித்து கொண்டிருந்தது. அர்ச்சுனா, அர்ச்சுனா என்று சொல்வோர் மத்தியில் சுடலையாண்டவா காப்பாத்து, சுடலையாண்டவா காப்பாத்து என்று கூறிக்கொண்டே முத்துக்கருப்பன் அவுசபுரி குளத்தின் கரைப்பக்கம் வந்தான். குளம் நிரம்பி இருந்தது.

இருப்பினும் குளத்திற்கு மழை வெள்ளம் வேகமாக வந்து கொண்டிருந்தது. குளம் உடைந்து விடுமோ, என்று கலங்கினான். பயிரு நல்லா விளைஞ்சு அறுவடைக்கு தயாரா இருக்கு, இந்த நேரத்தில குளம் உடைஞ்சு பெருவெள்ளம் வந்தா விளைஞ்ச பயிரெல்லாம் அழிஞ்சு போகுமே, குளம் உடைந்தால் சாமி, நம்மள வச்சு பார்க்கமாட்டாரே, என்ன செய்வது என்று அச்சத்தில் இருந்தான் முத்துக்கருப்பன். அப்போது பக்கத்து தோட்டத்துக்கு சொந்தக்காரரான மாயாண்டித்தேவர் அங்கு வந்தார்.

‘‘என்னப்பா, முத்துக்கருப்பா, குளத்துக்கு ஒரு பக்கத்துல வெட்டி விடு, இல்லைண்ணா மடையை திறந்து விடு, வரத்து வெள்ளம் அதிகமாக இருக்குதுப்பா’’ என்று கூறினார். உடனே முத்துக்கருப்பன் ‘‘ஐயா, நீங்க கொஞ்ச நேரம் இங்க இருப்பீங்களா, நான் போய் சாமிகிட்ட கேட்டுட்டு வந்திடுறேன்.’’ என்று சொல்ல, சரி போயிட்டு வா என்று அவர் கூறினார். ‘‘ஐயா, நீங்க பெரிய ஆளு மழை அதிகமாகிட்டுன்னு போயிட்டீங்கண்ணா’’ என்று கேள்வி எழுப்பிய முத்துக்கருப்பனிடம், ‘‘ஏலே, எனக்கு ஒத்த நாக்கு, ஒத்த சொல்லு, வாக்கு தவறமாட்டேன்ல, நீ உன் குலசாமிய நம்புறல்ல, அந்த சாமியே வந்திருக்கிறதா நினைச்சுக்கோ போயிட்டு வா’’ என்று பதில் கூறி அனுப்பி வைத்தார் மாயாண்டிதேவர்.

ஐயரிடம் குளம் நிரம்பியதை தெரியபடுத்த முத்துக்கருப்பன் கையில் வேல் கம்புடன் புறப்பட்டு சென்றான். ஐயர் வீட்டில் இல்லை, வீட்டு முன்பு திண்ணையில் படுத்திருந்த வண்டிக்காரன் கூறினான். ‘‘முத்துக்கருப்பு, சாமி தெங்கரை தோட்டத்து வீட்டுல இருக்கிறாரு’’ என்று கூறினான். (தெங்கரை என்பது ஊருக்கு தெற்கு பக்கம் என்பதாகும்) தெங்கரை தோட்ட வீட்டிற்கு சென்றதும் சலவை தொழிலாளி ராக்கையன் நின்று கொண்டிருந்தான். நடு ராத்திரி, வெள்ளிக்கிழமை ராக்கையன் தோட்டத்து வீட்டுக்கு வந்தாலே ஏதாவது பெரியளவில பூஜை இருக்கும்.

அப்படிண்ணா, நாம எப்படி சாமிய பார்கிறது. என்று மனசுக்குள் புலம்பியவன், ஏ, ராக்கு, இப்ப சாமிய பாக்கலாம்மா, நீரு, என்ன விசயமா, சாமிய பார்க்க வந்திருக்கீங்கண்ணு சொல்லும் என்று கேட்ட அவனிடம், குளத்து நிலவரத்தை எடுத்துகூறி அது விஷயமா உடனே சாமிய பார்க்க வேண்டும் என்று முத்துக்கருப்பு கூறிக்கொண்டு இருக்கும் போது, ‘‘வெளிய என்ன சத்தம்’’ என்று குரல் கொடுத்தார் ஐயர். ‘‘சாமி, முத்துக்கருப்பு வந்திருக்கேன்.’’ என்றான். உடனே உள்ள அழைத்தார் ஐயர்.

வந்த காரணத்தை முத்துக்கருப்பு கூறக்கேட்டதும். ‘‘குளத்தை வெட்டிவிட்டா ஊருக்குள்ள பெருவெள்ளம் வந்திடும். மடையை தோண்டிவிட்டாலும் நம்ம தோட்டத்து கிணத்துக்கு சுற்றுச்சுவர் இப்பதான் கட்டியிருக்கிறோம். அது இடிஞ்சு விழுந்திடும். சரி, இப்ப அங்க யாரு இருக்கிறாருண்ணு சொன்ன,’’ என்று ஐயர் கேட்டதும். ‘‘சாமி அது நம்ம தோட்டத்துக்கு பக்கத்து தோட்டக்காரர் மாயாண்டித்தேவர்’’ ண்ணு சொன்னான் முத்துக்கருப்பு. சட்டென்று நிமிர்ந்தார் ஐயர்.

மாயாண்டித்தேவர் வசதி வாய்ப்புகள் உடையவர் அவர் இந்த நேரத்தில் அங்கு வர வாய்ப்பில்லை என்று கருதிய ஐயர் முத்துக்கருப்பு பொய் சொல்றானா? வந்தது யாராக இருக்கும் என்று சந்தேகம் கொண்டவர் உடனே வெற்றிலை எடுத்தார். மைபோட்டு பார்த்தார். அப்போது குளக்கரையில் தலையில் முண்டாசு கட்டி, முறுக்கு மீசை முகத்தோடும், அஞ்சுமணி வல்லயத்தோடும், மாயாண்டித்தேவர் ரூபத்தில் ஊர்க்காடு சுடலைமாடன் நின்று கொண்டிருந்தார். அதை ஐயர் தெரிந்து கொண்டார்.

உடனே முத்துகருப்பு பக்கம் வந்தார். உன்கிட்ட மாயாண்டித்தேவர் என்ன சொன்னார் என்று கேட்டார். ‘‘நீ வரும் வரை நான் இங்கிருந்து போகமாட்டேன் என்று என் கைமேல் அடித்து சத்தியம் செய்தது போல வாக்குறுதி தந்து அனுப்பி வைத்தார்.’’ என்று முத்துக்கருப்பு கூறியதும். ஐயர் அருகில் இருந்த சாமிக்கண்ணு ‘‘அப்ப, நீ போகிற வரைக்கும் அவரு அங்க தான் இருப்பார். அப்படி தானா, சரி உள்ளே வா’’ என்று அழைத்த வேகத்தில் நாரம்பூலிங்க ஐயர், கண் அசைக்க, சாமிக்கண்ணு, முத்துகருப்பின் மூச்சை அடக்கினான்.

முத்துக்கருப்புக்கு கொடுத்த வாக்கின்படி, சத்தியத்தை தவறாமல் சுடலைமாடன் அவுசபுரி குளத்தின் கரையில் காவலாய் நிற்கிறார். பல ஆண்டுகளை கடந்த பின்னும் இந்த குளம் இதுவரை உடைந்ததில்லை. 1992ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கூட இந்த குளம் உடைந்ததில்லை.

செய்தி:  படங்கள்: சு.இளம் கலைமாறன்

ஆர். லட்சுமிகாந்த்

Related Stories: