×

விதை தெளிக்கும் ஈசன்

திருத்தெளிச்சேரி, காரைக்கால், புதுவை

புதுவை மாநிலம் காரைக்கால் நகரில் உள்ளது திருத்தெளிச்சேரி. இங்குள்ளது பார்வதீஸ்வரர் கோயில். இத்தல ஈசன் பெயர் பார்வதீஸ்வரர். அம்பாள் பெயர் பார்வதி அம்மை மற்றும் சுயம்வரதபஸ்வினி என்பதாகும்.இத்தலம் திருத்தெளிச்சேரி எனவும் காரைகோவில்பத்து எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்திற்கு திருத்தெளிச்சேரி என்று பெயர் வந்ததற்கு காரணம்,ஒரு சமயம் சோழ வள நாட்டில் மழையின்றி பஞ்சம் எற்பட்டது. ஊர் எங்கும் மக்கள் பசி பட்டினியால் தவித்தனர். அதனால் இட்சுவாகு வம்ச அரசன், பார்வதீஸ்வரரை  வழிபட்டு, பஞ்சம் நீங்கிட பரம்பொருளே மழையை பெய்விக்க வேண்டும். வேளாண்மை பெருக வேண்டும். விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்று மனமுருக வேண்டினான். அவனுடைய வேண்டுதலுக்கு மனமிறங்கிய சிவபெருமான் மழை பொழியச்செய்தார்.

அதோடு அந்த அம்மையப்பனே உழவனாக ரூபம்கொண்டு வந்தார். அவருடன் அம்பாள் பார்வதி அம்மையும் வந்தாள். அப்பன் ஏர் உழ, அம்மை தனது இடுப்பில் வைத்திருந்த ஓலைப்பெட்டியில் இருந்து விதை எடுத்து விதைத்தாள். பயிர்கள் வளர்ந்தது. வேளாண்மை சிறப்புற்றது. அம்மையப்பனே வந்து விதைத்ததால் இத்தலம் திருத்தெளிச்சேரி என அழைக்கப்படுகிறது.

இன்றும் இத்தலத்தில் ஆனி மாதம் விதை தெளி உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்திற்கு பின்னரே விவசாயிகள் விதை தெளிக்கத் தொடங்குகிறார்கள். இந்த ஆலயம் இருக்கும் பகுதிகள் மட்டுமன்றி, சுற்றுவட்டார பகுதிகளிலும் விவசாய பணியை மேற்கொள்ளும் முன்பு விதை நெல்லை கொண்டு வந்து சுவாமி சந்நதி முன்பு வைத்து வணங்கிய பின்பு எடுத்துச் செல்கின்றனர்.

கோவில்பத்து என பெயர் வரக்காரணம் திருஞான சம்பந்தர் திருநள்ளாறு தர்ப்பரண்யேஸ்வரரை தரிசித்துவிட்டு இத்தலத்தின் வழியாக சென்றார். அவர் இத்தலத்தை கவனிக்காமல் சென்றதால் இத்தல விநாயகர், திருஞானசம்பந்தரை பத்துமுறை பெயரிட்டு அழைத்தார். பத்தாவது முறை குரல் கேட்டு வந்த திருஞானசம்பந்தரிடம் இத்தல ஈசனைப்பற்றி பாடுமாறு கூற, அதன்படியே திருஞான சம்பந்தரும் பார்வதீஸ்வரரைப்பற்றி பாடினார். விநாயகர், திருஞானசம்பந்தரை பத்துமுறை கூவி, கூவி அழைத்தமையால் பத்துக்கூவி என்று அழைக்கப்பட்டது, கூவிப்பத்து என மாறி, அதுவே கோவிபத்து என்றும் கோவில்பத்து என்றும் அழைக்கப்படலாயிற்று. காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.

சு.இசக்கிமுத்து

Tags : Eason ,
× RELATED மயிலாடுதுறை அருகே நெல் விதைப்பை...