உழவே தெய்வம்

ஆதி காலத்தில் பயத்தினால் இறை மற்றும் இயற்கை வழிபாடு தோன்றியது அதுவே காலப்போக்கில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் மாறியது. இயற்கையை பாதுகாக்க, ஒவ்வொரு கிராமத்திலும் கோயில்களைச் சுற்றிலும் சிறிய வனப்பகுதிகள் உருவாக்கப்பட்டன. அவையே கோயில் காடுகள் என்றும் அழைக்கப்பட்டன.

இறைவனை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறோம். அந்த எண்ணெய் எள்ளில் இருந்து கிடைக்கிறது. அரிசியால் நைவேத்தியம் செய்கிறோம். இப்படி நாம் படைக்கும் பூஜை பொருட்களிலிருந்து, உடைக்கும் தேங்காய் வரை அனைத்தும் இயற்கை விவசாயபொருட்கள்தான்.

பலதொழில்களைச் செய்து சுழன்றாலும் இறுதியில் ஏர்த்தொழிலின் பின்னாலேயே இந்த உலகம் நிற்கிறது. உழவுத்தொழிலின் மூலமாக நெல்லைப் பெற்றனர். பிறகு நெல்லை அரிசியாக்கினார்கள். நெல் முளைக்கும் பருவம். அரிசி முடியும் பருவம். எனவேதான் பழந்தமிழர் திருமணத்தின்போது வாழ்த்தும் நோக்கில் மணமக்கள் வாழ்வில் பதினாறு செல்வமும் முளைக்கட்டும் என்பதன் அடையாளமாக நெல்லைத் தூவினார்கள்.

நெல்லும் அரிசியும் தமிழரின் மங்கல அமங்கல சம்பவங்களில் தொடர்பு கொண்டது. திருமணத்தின்போது நெல்லால் வாழ்த்திய தமிழர்கள் இறப்பின்போது எல்லாம் முடிந்துவிட்டது என்பதாக இனி முளைக்காத அரிசியால் இறந்தவருக்கு வாய்க்கரிசி இட்டனர். இவற்றைக் கூர்ந்து கவனித்தால் வாழ்க்கையை (விதையால்) நெல்லால் தொடங்கி (முடிந்துபோன) அரிசியால் முடித்து வைப்பதாக அர்த்தம் வருகிறது.

சு.இளம் கலைமாறன்

Related Stories: