வாழ்த்துகளுடன் வரவேற்பு..!

இறையடியார்களிடமும் இறை நம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய  பண்புநலன்கள் குறித்து இறுதி வேதம் திருக்குர்ஆன் ஆங்காங்கே பல அத்தியாயங்களில் அழகிய முறையில் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய பண்புகளுடன் வாழ்பவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நன்மைகளையும் விவரித்துச் சொல்லியுள்ளது. ஒரிடத்தில் வேதம் கூறுகிறது- “இத்தகைய உயர்பண்புகள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்களை வானவர்கள் முகமன் கூறி வரவேற்பார்கள்” என்று. திருக்குர்ஆன் 25ஆம் அத்தியாயத்தில் இறைஅடியார்களின் பண்புகளும் நடத்தையும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அருள்மறை ஒரு பட்டியலே இட்டுள்ளது.  

Advertising
Advertising

ஒவ்வொரு பண்பு குறித்தும் விரிவான முறையில் கட்டுரைகளே எழுதலாம். எனினும் தித்திக்கும் திருமறையின் அந்த இனிய வசனங்களை மட்டும் பார்ப்போம்.

“ரஹ்மானின்- கருணைமிக்க இறைவனின் உண்மையான அடியார்கள் யார் எனில்- “அவர்கள்  பூமியில் பணிவோடு நடப்பார்கள். “அறிவீனர்கள் அவர்களிடம் உரையாடினால் உங்களுக்கு ஸலாம்- சாந்தி உண்டாகட்டும் என்று கூறிவிடுவார்கள். “இறைவனின் திருமுன் சிரம்பணிந்தும் நின்றும் இரவைக் கழிப்பார்கள். “அவர்கள் இறைஞ்சுவார்கள்:‘எங்கள் இறைவனே, நரக வேதனையை எங்களைவிட்டு அகற்றுவாயாக. அதன் வேதனையோ ஓயாது தொல்லை தரக்கூடியது. திண்ணமாக நரகம் தீய தங்குமிடமாகவும் மிகவும் மோசமான இடமாகவும் இருக்கிறது.’

“அவர்கள் செலவு செய்யும்போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இருநிலைகளுக்கு இடையில் மிதமானதாக இருக்கும். “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. “இறைவனால் தடைசெய்யப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை. “அவர்கள் விபச்சாரமும் செய்வதில்லை.... “அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. “அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால் கண்ணியமாகக் கடந்து சென்றுவிடுவார்கள். “தம் இறைவனின் வசனங்களை ஓதிக்காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும்போது அவற்றைக் குறித்துக் குருடர்களாகவும் செவிடர்களாகவும் இருப்பதில்லை.

“அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள்: ‘எங்கள் இறைவனே, எங்கள் மனைவியரையும் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக. எங்களை இறையச்சமுடையோர்க்குத் தலைவர்களாய்த் திகழச் செய்வாயாக.’இத்தகையோரே தங்களின் பொறுமை காரணமாக உயர்ந்த மாளிகைகளைப் பெறுவார்கள். மரியாதையுடனும் வாழ்த்துகளுடனும் அவர்கள் அங்கு வரவேற்கப்படுவார்கள். அவர்கள் என்றென்றும் அங்கு தங்கி வாழ்வார்கள்.

எவ்வளவு அழகானதாக இருக்கிறது அந்தத் தங்குமிடம்...! எவ்வளவு உன்னதமாக இருக்கிறது அந்த ஓய்விடம்...! (குர்ஆன் 25:63-68, 72-76) மேற்சொன்ன நற்பண்புகளை எல்லாம் கடைப்பிடித்து வாழ வேண்டும் எனில் அது சாதாரண செயல் அல்ல. உறுதியான இறைநம்பிக்கை, நிலைகுலையாத பொறுமை, அசைக்கமுடியாத மனஉறுதி இவையெல்லாம் தேவை. அதனால்தான் இறைவேதம், “இத்தகைய அடியார்கள் மறுமையில் உயர்ந்த மாளிகைகளில் மரியாதையுடனும் வாழ்த்துகளுடனும் வரவேற்கப்படுவார்கள்” என்கிறது. அந்த வரவேற்பு நமக்கும் கிடைக்க வேண்டும் எனில் இறைமறை போற்றும் இனிய பண்புகளை  அன்றாட வாழ்வில் மலரச் செய்வோம்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

Related Stories: