கல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்!

பிள்ளையார்பட்டி

Advertising
Advertising

தென் தமிழகத்து காரைக்குடிக்கு அருகே அமைந்துள்ள பிள்ளையார்பட்டி எனும் ஊரினையும் அங்குள்ள கற்பக விநாயகரையும் அறிந்திராதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிள்ளையார்பட்டி எனும் அவ்வூரின் பழம்பெயர் ஈக்காட்டூர் என்பதாகும். பின்னாளில் அவ்வூரில் திகழும் சிறுகுன்றத்தின் அடிப்படையில் கேரள சிங்க வளநாட்டு கல்குன்றத்து திருவீங்கைக்குடி என அப்பகுதி அழைக்கப்படலாயிற்று.

அந்தக் கல்குன்றத்தைக் குடைந்து கி.பி.6 ஆம் நூற்றாண்டில் திருவீங்கைக்குடி மகாதேவர் கோயில் என்ற ஒரு சிவாலயத்தை முற்காலப் பாண்டிய மன்னர்கள் தோற்றுவித்தனர். அந்த சிவாலயத்தின் நுழைவுப் பகுதிக்கு எதிரே குடைவரை சுவரில் செதுக்கு உருவமாக தோற்றுவிக்கப் பெற்றவர்தாம் தற்போது திகழும் கற்பக விநாயகர் ஆவார். அவர்தம் பழம் பெயரோ கல்குன்றத்து ஈங்கைக்குடி தேசிவிநாயகர் என்பதாகும். இன்று அக்குடைவரையின் பிரதான தெய்வமாக விநாயகப்பெருமான் திகழ்ந்தாலும் அக்கோயிலின் மூலவர் லிங்கப் பெருமானேயாவார்.

கல்வெட்டுக்கள் கூறும் இவ்வாலயத்து வரலாறு சுவை பயப்பதாகும். சிவபெருமானுக்காக எடுக்கப்பெற்ற இக்குடைவரைக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. நான்கு சதுரத் தூண்களும், கீழ்ப்புறம் இரண்டு அரைத்தூண்களும் விளங்க முன்மண்டபம் திகழ்கின்றது. முன்மண்டபத்தினை அடுத்து நீண்ட குடைவரையும் அதன் மேற்குப்பகுதியில் கஜப்பிருஷ்ட அமைப்பில் கிழக்கு நோக்கி அமைந்த கருவறையும் உள்ளன.

கருவறை சதுரம் அல்லது செவ்வக அமைப்பில் இல்லாமல் உட்புறம் குழைவு பெற்ற அரைவட்ட அமைப்பில் திகழ்வதே கஜபிருஷ்டமாகும். இது படுத்த நிலையில் திகழும் யானை ஒன்றின் பின்னுடல் போன்றதாகும். இக்கருவறையின் நடுவே மலையைக்குடையும்போதே அமைக்கப்பெற்ற (பிரதிட்டை செய்யப்பெறாத) லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது. இம்மூர்த்தியைத்தான் இவ்வாலயத்துக் கல்வெட்டுக்கள் ‘திருவீங்கைக்குடி மகாதேவர்’ எனக்

குறிப்பிடுகின்றன.

வடப்புற பிரதான நுழைவாயிலுக்கு எதிரே சுவரில் கல்வெட்டுக்கள் குறிப்பிடும் கல் குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர் எனப்பெறும் கற்பக விநாயகர் திருவுருவம் இடம் பெற்றுள்ளது. இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியவாறு வலக்கரத்தில் சிவலிங்கம் ஒன்றினை இப்பிள்ளையார் ஏந்தியுள்ளார். கால்களை மடித்து அமர்ந்த நிலையில் காணப்பெறும் இப்பெருமான் இடுப்பில் உதரபந்தத்தை (ஒருவகை ஆடை) தரித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கணபதித் திருமேனிகளிலேயே இச்சிற்பம்தான் மிகப்பழமையானதாகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் வடிக்கப்பெற்றதாக வல்லுநர்கள் முடிவு கண்டுள்ளனர்.

லிங்கப்பெருமான் திகழும் கருவறைக்கு வெளியே குடைவரை சுவரில் ஒருபுறம் ஹரிஹரர், கருடன் அதிகார நந்தி ஆகியோருடன் நின்ற கோலத்தில் உள்ள திருமேனியும், மறுபுறம் லிங்கோத்பவர் திருமேனியும் இடம் பெற்றுள்ளன. கருவறையின் வடப்புறச் சுவரில் ‘‘ஈக்காட்டூர் கோன் பெருந்தச்சன்’’ என்ற கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்குரிய வட்டெழுத்துக்கல்வெட்டு காணப்பெறுகின்றது. இது கொண்டு நோக்கும்போது இக்குடைவரையைத் தோற்றுவித்த தச்சனின் பெயர் ‘ஈக்காட்டூர் கோன்’ என்பதறிய முடிகிறது.

கி.பி.1200ம் காலகட்டத்தில் இக்குடைவரைக் கோயிலுக்கு வெளியே அதனுடன் இணைத்து மருதங்குடி நாயனார் திருக்கோயில் என்ற மற்றொரு சிவாலயத்தை பாண்டிய அரசர்கள் எடுத்துள்ளனர். குலோத்துங்க சோழன், மாற வர்மன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் போன்ற பல அரசர்கள் இக்கோயிலுக்கு அளித்த அறக்கொடைகள் பற்றிய பல கல்வெட்டுக்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. மாற வர்மன் சுந்தரபாண்டியன் மூன்றுமுறை இக்கணபதியார் கோயிலுக்கு வருகை புரிந்துள்ளான்.

அம்மன்னவனின் குறுநிலத்தலைவனான காங்கேயன் என்பான் கணபதியார்க்கு தன் பெயரில் காங்கேயன் சந்தி என்ற சிறப்புப் பூசைக்கு ஏற்பாடு செய்தான் என்பதை ஒரு கல்வெட்டு விவரிக்கின்றது. சிவராத்திரி விழா இக்கோயிலில் மிகச்சிறப்பாக நிகழ்ந்துள்ளது. கி.பி.1305 இல் குலசேகர பாண்டியன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் தேசிவிநாயகர் எனும் இக்குடைவரை கணபதியார்க்கு பிட்டும் பணிகாரமும் (பணியாரம்) நிவேதனம் செய்வதற்காக வரியில்லாத நிலக்கொடை அளித்துள்ளான். குடைவரைக் கல்வெட்டுக்கள் இச்செய்திகளைக் கூறி நிற்கின்றன.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருஈங்கைக்குடியின் ஒரு பகுதியான மருதங்குடியில் நகரத்தார்களைக் குடியேற்றி அப்பகுதிக்கு ராஜநாராயணபுரம் எனப்பெயரிட்டதாக அம்மன்னவன் காலத்து கல்வெட்டுச்சாசனம் கூறுகின்றது. ஈங்கைக்குடி மகாதேவர் திருக்கோயில் என்ற பெயரில் சிவாலயமாக இக்கோயில் திகழ்ந்தபோதும் கணபதிப் பெருமானுக்கு திருமேனி எடுக்கப்பெற்ற முதற்கோயில் என்பதால் இங்கு விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தரப்பெற்றதை சிலாசாசனங்கள் வழியே அறிய முடிகிறது.

முத்துசாமி தீட்சிதர் பாடியுள்ள ‘‘வாதாபி கணபதிம் பஜே’’ என்ற கீர்த்தனைப் பாடல் கொண்டும், கி.பி.630-668 வரை ஆட்சி செய்த முதல் நரசிம்ம பல்லவனின் சேனாதிபதி பரஞ்சோதி என்பார் சாளுக்கியர்களின் வாதாபி நகரை கைப்பற்றி அங்கிருந்து கொண்டுவந்த கணபதிப்பெருமான் திருமேனியே தமிழ்நாட்டுக்கு வந்த முதல் கணபதி திருமேனி என்றும், அக்காலந்தொட்டுதான் கணபதி வழிபாடு தமிழ்நாட்டிற்கு வந்தது என்றும் தொடர்ந்து பலர் கூறிவருகின்றனர். இது தவறான தகவலாகும்.

மேலும் பரஞ்சோதி எனப்பெறும் சிறுத்தொண்ட நாயனார் தம் ஊரான திருச்செங்காட்டங்குடியில் அந்த வாதாபி விநாயகரை ஸ்தாபித்ததால்தான் அக்கோயிலுக்கு கணபதீச்சரம் எனப் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.சேக்கிழார் பெருமான் சிறுத்தொண்ட நாயனார் புராணம் உரைக்கும்போது வாதாபிப்போர் பற்றி குறிப்பிட்டாலும், அவர்தம் ஊரில் கணபதீச்சரம் முன்பே திகழ்ந்த ஒரு கோயில் என்பதை குறிப்பிட்டுள்ளார். கணபதிப் பெருமான் திருமேனி அங்கிருந்து கொண்டு வந்ததாக எந்தக்குறிப்பும் இல்லை.

மேலும் அக்கோயிலில் பிற தேயத்து கணபதிப் பெருமான் திருமேனிகள் ஏதும் இல. திருவாரூர் மற்றும் திருப்புகலூர் கோயில்களில் வாதாபி விநாயகர் என்ற பெயரில் திருமேனிகள் உள்ளன. அவை சாளுக்கிய நாட்டுக் கலைப்பாணியில் திகழ்கின்றன. எப்படி இருப்பினும் திரு ஈங்கைக்குடி எனப்பெறும் பிள்ளையார்பட்டி கணபதிப்பெருமான் திருமேனிதான் தமிழகத்துத் தொன்மையான திருமேனியாகும். நரசிம்ம பல்லவனுக்கு முன்பே அறுவகை சமயங்களில் ஒன்றான கணபதி வழிபாட்டின் சிறப்புரைக்கும் காணாபத்தியம் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்ததை திருஞானசம்பந்தரின் பதிகப்பாடல்கள் வழி அறியலாம். திருப்புகலி தேவாரப் பாடலில்,

‘‘முன்னம் இரு மூன்று சமயங்கள் அவையாகிப்

பின்னை அருள் செய்த பிறையாளன்’’

- என்றும் திருப்புன் கூறி தேவாரத்தில்,

‘‘அறிவினால் மிக்க அறுவகைச் சமயம்

அவ்அவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து’’

- என்றும் குறிப்பிடுவதால் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் அறுவகைச் சமயமும் குறிப்பாக காணாபத்யமும் வழக்கில் இருந்த வழிபாட்டு நெறிகள் என்பதை அறியலாம். மேலும் கணபதி வழிபாட்டின் சிறப்பினை அப்பர் பெருமான்,

‘‘அறுமுகனோடு ஆனைமுகற்கு’’ - என்றும்

‘‘குமரனும் விக்கின விநாயகனும்’’

- என்று குறிப்பிட்டு கணபதியைப் போற்றியுள்ளார்.

‘‘ஆர்இருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயமும் வைத்தார்’’ என திருக்கழிப்பாலையில் குறிப்பிட்டு காணாபத்யம் உள்ளிட்ட அறுவகை சமயநெறி பற்றியும் உரைத்துள்ளார்.

முற்காலப் பாண்டியர்களால் ஈங்கைக்குடி கல்குன்றத்து தேசி விநாயகர் திருவடிவிலிருந்து தொடங்கிய கணபதி உருவம் அமைக்கும் நெறி, பல்லவர் எடுத்த கோயில்களிலும், சோழப் பெருவேந்தர்கள் கட்டுவித்த கோயில்களிலும், பிற மரபு மன்னர்கள் எடுத்த கோயில்களிலும் சிறந்த வளர்ச்சி நிலையை எய்திற்று. தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்த கீழ்திசை நாடுகளிலும் கணபதி வழிபாட்டு நெறி முக்கிய இடத்தைப் பெற்றது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் திகழும் பரம்பனான் ஆலய வளாகத்தில் கணபதியார்க்கு என தனித்த திருக்கோயில் ஒன்று உள்ளது. அதில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த கணபதியார் திருமேனி இடம் பெற்றுத்திகழ்கின்றது. இதுபோன்றே மலேசியாவில் கடாரம், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலும் கணபதியார் திருமேனிகள் பல கிடைத்துள்ளன.

பிள்ளையார்பட்டிக்கு அருகிலுள்ள குன்றக்குடி குடைவரையில் இரண்டு பழமையான பாண்டியர்கால விநாயகர் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை குடைவரையில் காணப்பெறும் கணபதியார் உருவம் பாண்டியர் கலையின் எழில்மிகு படைப்பாகும். இதே குடைவரையின் வெளிப்புற சுவரில் உலகப்புகழ் பெற்ற இசை இலக்கணம் கூறும் அரிய கல்வெட்டுச்சாசனம் ஒன்றுள்ளது. அச்சாசனத்துடன் அழகியதோர் கணபதிப் பெருமானின் திருவுருவமும் இடம் பெற்று காணப்பெறுகின்றது. கணபதி வணக்கத்தோடு இசை இலக்கணத்தை கற்பிக்கும் வகையில் இச்சாசனம் அமைந்துள்ளது.

பழுவேட்டரையர்களின் தலைநகரமான மண்ணு பெரு பழுவூரின் (மேல் பழுவூர்) கீழையூர் கோயிலில் சப்த மாதர்கள் எனும் எழுவர் தாய்மாருடன் திகழும் கணபதி வடிவம் தனித்தன்மை பெற்றதாகும். சோழர்கால சிவாலயங்களின் ஸ்ரீவிமானத்து தேவகோஷ்டங்களில் நர்த்தன கணபதி இடம் பெறுமாறு செய்வது சோழர் கலையின் சிறப்பாகும்.

சோழப் பெருவேந்தன் கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திர சோழன் மேலைச்சாளுக்கிய நாட்டை வென்று அங்கிருந்து கொண்டுவந்த சாளுக்கியர் கலைப்பாணியில் அமைந்த கணபதியார் சிற்பத்தை கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் வைத்தான். தற்போது அந்த அரிய சிற்பம் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் அருகே கணக்குப்பிள்ளையார் என்ற பெயரில் தனித்த சிறு கோயிலில் இடம் பெற்றுத் திகழ்கின்றது. அதுபோன்றே அப்பெரு வேந்தனின் படையினர் தற்காலத்திய பங்களாதேஷ் வரை படை எடுத்துச் சென்று அங்கிருந்த பாலர் மரபு வேந்தனை வெற்றி கண்டு, வெற்றிச்சின்னமாக அங்கிருந்து கங்கை நீரோடு கொண்டுவந்த பாலர் நாட்டு கணபதிப் பெருமானை கும்பகோணத்திலுள்ள ‘குடந்தைக்கீழ்க்கோட்டம்’ எனும் நாகேஸ்வரன் கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளான். தற்காலத்தில் அத்திருமேனி ‘கங்கை கொண்ட விநாயகர்’ என்ற பெயரில் போற்றப்பெறுகின்றது.

ஈங்கைக்குடி கல்குன்றத்து குடைவரையில் (பிள்ளையார் பட்டியில்) உள்ள தேசி விநாயகர் முன்பு தொடக்கம் பெற்ற காணாபத்திய வழிபாட்டு நெறியாக அது தழைத்துள்ளது. விக்ன விநாயகப் பெருமானை நாளும் போற்றுவோம். அவனருள் நம்மை உய்விக்கும்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related Stories: