வள்ளலார் காட்டிய கருணை நெறி

இறையருளைப் பெறுவதற்கு பக்தி மார்க்கத்திலே பல வகையான விரதங்களை ஏற்படுத்தியுள்ளனர் நமது முன்னோர்கள். ஆலயங்கட்குச் செல்வது, ஆண்டவனுக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை செய்வது, தலையை மொட்டை அடித்துக் கொள்வது. அங்கப் பிரதட்சணம் செய்வது, வேல் அலகு குத்திக் கொள்வது, காவடி,எடுப்பது, உண்டியலில் காணிக்கை செலுத்துவது, சுவாமிக்குத் திருமணம் செய்வது, தீ மிதிப்பது, ஏகாதசி, கிருத்திகை, சஷ்டி, வெள்ளிக் கிழமை போன்ற சில குறிப்பிட்ட நாட்களில் பட்டினி இருப்பது, கோயில் கட்டுவது கும்பாபிஷேகம் செய்வது போன்ற பல காரியங்கள் பக்தி என்ற பெயரால் செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் செயல்கள் எல்லாம்ஆண்டவனுக்குச் சம்மதம் தானா, இவைகளால் ஆண்டவன் மகிழ்ந்து நம்முடைய பூஜையை ஏற்றுக் கொண்டு அருள் தருகின்றானா என்றெல்லாம் யாருமே எண்ணிப் பார்ப்பது இல்லை. வள்ளலார் எண்ணிப் பார்த்தார்.

Advertising
Advertising

என்ன செய்தால் இறையருளைப் பூரணமாகப் பெற முடியும் என்று ஆய்ராந்தார்கள். ஒரே ஒரு வழி தான் முடிவானதாகத் தோன்றியது. இறைவன் அருளே வடிவானவன். கருணையே அவன் தொழில். அவன் எதை விரும்புவான். இரக்கமில்லாத இந்தச் சடங்குகளையா விரும்புவான்.இல்லவே இல்லை. சிறு நெருப்பு இருக்குமேயானால் பெரு நெருப்பை அடையலாம். அதுபோல் நாம் பிற உயிர்கட்கு இரங்கிச் செய்யும் உபகாரமானது நம்மால் ஆற்றக் கூடிய சிறிய தயவு. நம்முடைய  சிறிய தயவைக் கொண்டுதான் ஆண்டவனுடைய பெருந்தயவாகிய பேரருளைப் பெற முடியும். வேறொன்றினாலும் அருளைப் பெற முடியாது என்று கண்டார் ராமலிங்கர்.

இதைச் சொல்லால் சொல்லி வைத்தால் போதாது. நம்மால் ஆன தயவு என்பது ஆதரவற்ற ஏழைகள் பசியால் வருந்தும்போது மனமிரங்கி அவர்களது பசியைப் போக்குவதும் எந்த ஜீவனுக்காவது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று அறிந்தபோது விரைந்து நம்மால் ஆன அனைத்தினையும் செய்து எவ்விதத் தந்திரத்தாலாவது அந்த ஆபத்தை நீக்குவதும், நோயால் வருந்தக் கண்ட போதும் கேட்ட போதும் அவர்களுக்குப் பிணி தீர உதவி செய்வதும் மேலும் தாகம் இச்சை எளிமை பயம் முதலிய எதனாலும் வரக்கூடிய துன்பங்களை நீக்குவதும் ஆகும் என்று உணர்த்தினார். ஜீவர்கள் மீது காட்டும் கருணையாகிய ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார். ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யக் கூடிய தவம் விரதம் தியானம் பூஜை முதலியவையெல்லாம் பிரயோஜனமில்லாத மாயா ஜாலச்செயல்களே என்றும் உணர்த்தினார்.

ஒருவன் தன்னுடைய ஆற்றலால் ஓர் ஆணைப் பெண்ணாக்கி அந்தப் பெண்ணை மீண்டும் ஆணாக்கி இறந்த பிணத்திற்கே உயிர் கொடுக்கும் வல்லபம் உடையவனாய் இருந்தாலும் மனதிலே இரக்கம் இல்லாமல் பிற ஜீவன்களைக் கொன்று மாமிசம் உண்ணும் எண்ணங் கொண்டாலே போதும் அப்படிப்பட்டவன் எவனாய் இருந்தாலும் அவனை ஞானியெனக் கூறாதேஎன்கின்றார் ராமலிங்கர்.

மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில்

கண் விழித்து வயங்கும் அப்பெண்

உருஆணை உருவாக்கி இறந்தவரை

எழுப்புகின்ற உருவனேனும்

கருவாள் நையுற இரங்காது உயிருடம்பைக்

கடிந்துண்ணும் கருத்தனேல் எங்

குருவாணை எமது சிவக் கொழுந்தாணை    

ஞானி எனக் கூறொணாதே

இறைவன் மனிதனிடமிருந்து பூஜைகளையும் விரதங்களையும் எதிர் பார்க்கவில்லை. மாறாக இரக்கம் ஒன்றையே எதிர்பார்க்கின்றான். அவன் எதிர்பார்க்கின்ற இரக்கத்தைப் பிற உயிர்கள் மீது காட்டாமல் வேறு எந்தச் செயலாலும் எந்த ஆலயத்திற்குச் சென்று எந்த ஆண்டவனை எப்படி வணங்கினாலும் கிஞ்சித்தும் அருளைப் பெற முடியாது. மனிதனிடம் இரக்கத்தை ஆண்டவன் எதிர்பார்க்கின்றான்

என்பதற்கு என்ன ஆதாரம் ?

ஒரு புலி ஆட்டைக் கடித்துத் தின்னும்போது அந்த ஆடு படும் வேதனை அந்தப் புலிக்குத் தெரியாது. ஒரு பூனை ஒரு எலியைக் கடிக்கும் போதும் அந்த எலி படும் துன்பமும் பயமும் அந்தப் பூனைக்குத் தெரியாது. ஆனால் ஒரு கோழியை, ஓர் ஆட்டை, ஒரு மாட்டை, அறுக்கும் போது அது துடிக்கின்ற துடிப்பை மனிதன் உணருகின்றான். பிற உயிர்கள் படும் துன்பத்தை உணரக் கூடிய ஓர் அறிவை எந்த மிருகத்திற்கும் வேறு எந்த ஜீவனுக்கும் தராது, அந்த அறிவை இறைவன் மனிதனுக்கு மட்டுமே தந்தான். ஏன்?

மனிதப் பிறவிக்கு அடுத்த பிறவி தெய்வப்பிறவி, மனிதன்தான் தெய்வமாகிறான். எனவே தான் தன் தொழிலை அதாவது பிற உயிர்களுக்கு

வரும் துன்பத்தை நீக்கி அந்த உயிர்களைக் காப்பாற்றும் அந்தத் தொழிலை அருள் வடிவான புனிதத் தொழிலை மனிதனிடம் எதிர்பார்த்த இறைவன் அந்தச் செயலுக்குத் தேவையான இரக்க உணர்வை ஏற்படுத்தக் கூடிய, அறிவை பிற உயிர்கள் படும் வேதனையை உணரக் கூடிய, அறிவை மனிதனுக்கு மட்டுமே (இறைவன்) தந்தான். ஆனால் மனிதனோ இந்த உண்மையை உணராமல் பிற உயிர்களைக் கொலை செய்தும் மாமிசம் உண்டும்

கடவுளுக்கு எதிரியாகி விட்டான்.

ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள ஜீவர்கள் வரை அந்த ஜீவர்கள் செய்யும் செயலுக்கு விளை என்பதில்லை. ஏனெனில் நல்லது இது கெட்டது இது என்று சிந்தித்து உணருகின்ற அறிவு அவைகட்கு கிடையாது. மனிதனால் நல்லது எது கெட்டது எது என உணர முடியும். அப்படி உணர்ந்திருந்தும் அவன் தீமைகளே செய்வானானால் பாபம் செய்தவனாகி அதற்குரிய தண்டனை பெறுகிறான். மனிதனுக்கு மட்டுமே பாவ புண்ணியங்களுண்டு மற்ற ஜீவன்கட்கு ஏன் பாவ புண்ணியங்கள் இல்லை என்றால் மற்ற ஜீவன்கட்கு ஆண்டவனால் சுதந்தரம் அளிக்கப்படவில்லை.

மனிதனுக்கு மட்டும் தன் விருப்பம் போல் செயல்படும் ஓர் அற்ப சுதந்திரம் ஆண்டவனால் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அற்ப சுதந்திரத்தால் மனிதன் தன் விருப்பம் போல் செயல்படுகிறான். உதாரணமாக ஓர் ஆட்டையோ, கோழியையோ உணவிட்டு வளர்க்கவும் சுதந்திரமுண்டு அதைக் கொல்லவும் அவனால் முடிகிறது. எனவே வளர்ப்பது புண்ணியம். அதை கொல்லும்போது கொலை பாதகம் செய்தவனாகிறான்.

பாவ புண்ணியங்கள் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்று வகையாக நம்மை அடையும் என்கிறார் நம் பெருமானார் அவர்கள் மனதினால் பாபம் செய்பவர்கள் அடுத்த பிறவியில் சண்டாள தேகம் எடுப்பார்கள் என்றும், வாக்கினால் பாவம் செய்பவர்கள் அடுத்த பிறவியில் மிருகங்களாகப் பிறப்பார்கள் என்றும், தேகத்தால் பாவம் செய்பவர்கள் அடுத்த பிறவியில் மரம் முதலிய சரீரம் எடுப்பார்கள் என்றும் வள்ளலார் தெரிவிக்கிறார். இதன்படி யார் பிற உயிர்களைக் கொலை செய்வதும் புலால் உண்பதுமாக வாழ்கின்றார்களோ அவர்கள் அடுத்த பிறவியில் கள்ளி முள்ளியாகப் பிறப்ெபடுத்தே ஆக வேண்டும்.

மேலும் இறந்து போன ஜீவனைப் பிணம் என்கிறோம். ஆடு, மாடு, கோழி, எதுவானாலும் இறந்தவுடன் அதுவும் பிணம் தான். புலி, சிங்கம், நரி, நாய் , கழுகு, காக்கை முதலிய சண்டாளப் பிறவிகட்குச் சமமாக மனிதனும் பிணம் தின்னலாமா? பிணத்தைத் தின்கிறோம் என்ற உணர்வு ஏற்படுமேயானால் மனிதன் பிணம் தின்பதை விட்டு விடுவான். சுடுகாடு என்பது பிணம் வேகும் இடம்.

எந்த வீட்டிலாவது ஆடு, மாடு, கோழி முதலிய பிணங்கள் சமைக்கப்படு மேயானால் அந்த வீடும் சுடுகாடு தானே. அந்த வீட்டில் இறைவன் வர மாட்டான் பேயும், பிசாசும் தான் குடி வரும். எனவே புலால் உண்பவர்கள் வீட்டில் எந்த பூஜை நடந்தாலும் இறைவன் ஏற்பதில்லை. அதனால்தான் புலால் உண்பவன் மட்டும் புலையனல்லன். புலால் உண்பவன் வீட்டில் உண்பவனும் புலையனே என்கிறார். எந்த உயிரையும் கொலை செய்வதும் மாமிசம் சமைப்பதும் உண்பதும் இறைவனுக்குச் சம்மதம ல்ல என உணர வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் வள்ளலார் ஒருவரே. தான் கண்ட சன்மார்க்கம் வளரா விட்டாலும் பரவாயில்லை, மக்கள் நலமாக வாழ வேண்டும் என்ற பேரிரக்கத்தினால் புலால் உண்ணக் கூடாது என்று கடுமையாகப் போதித்தார்.சிவனை வணங்குகின்ற, நெற்றியில் திருநீறு அணிகின்ற, சைவர்கட்குரிய உணவு சைவ உணவே, ஆனால் ஓட்டலில் மட்டுமே தற்போது உணவில் சைவம் உள்ளது. சைவர்கள் என்று சொல்லிக் கொள்வோம் அசைவம், புலால் உணவு கொள்கிறார்கள்.

எந்தச் சமயத்திலும் மதத்திலும் (தெரிந்த வரை ஜைனம் தவிர) புலால் உண்பதை வன்மையாகக் கண்டிக்கவில்லை. வள்ளலார் மட்டுமே தான் கண்ட சன்மார்க்கத்தின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் புலால் உண்பதை வன்மையாகக் கண்டிக்கின்றார். புலால் உண்பதால் கொலை பாவம் சேருகின்றதே, பயங்கர நோய்க்கு ஆளாகின்றார்களே, அந்த மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கம்பேரிரக்கம் வள்ளலாருடையது.

சிறிதளவுகூட பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் உள்ளன்போடு நேசிக்கின்றார்களோ அவர்கள்தாம் உத்தமர்கள் என்று கூறிய வள்ளல் பெருமானார், சாதி, மதம், சமயம், இனம் முதலிய காரணங்களால் பிளவுகள் இல்லாது அனைவரும் ஒன்றுபட்டே வாழ வேண்டும் என்று பேசிய வள்ளலார் புலால் மறுத்தவர்களை அகவினத்தார் என்றும் புலால் உண்போரைப்  புறவினத்தார் என்றும் இரண்டாகப் பிரிக்கின்றார். அத்துடன் நில்லாது புலால் உண்போருடன் நட்பு  கொள்ளாதே, நல்ல வார்த்தைகள் கூடச் சொல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கிறார். புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் எனது எலும்பெலாம் கருக  இளைத்தனன்என்கிறார்.

புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும் என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய் வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல் என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.

தொகுப்பு: மு. பாலசுப்ரமணியன்

Related Stories: