×

பிரம்மதேசம் கைலாசநாதரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பிரஹந்தநாயகி சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. பிரம்மாவின் பேரனாகிய ரோமச முனிவர், இலந்தையடிநாதர் எனும் சிவ சுயம்புலிங்கத்தை இங்கு கண்டுபிடித்து முதன் முதலில் பூஜை செய்து வழிபட்டார். இதனால் பிரம்மனின் நினைவாக இந்த ஊருக்கு பிரம்மதேசம் என்று வந்துள்ளது.

சிவபெருமானை அவமதிக்கும் வகையில் தட்சனின் யாகத்தில் பங்கேற்ற பிரம்மன் இந்த தலத்தில் தன் தவறை உணர்ந்து கைலாசநாதரை வணங்கி வழிபட்டு தீர்த்த குளம் ஒன்றை ஏற்படுத்தினார். இதனால் இந்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என விளங்குகிறது. காசிக்கு சென்று வந்த புண்ணியம் ஆதி கயிலாயங்களில் முதன்மையானதாகவும், தென்மாவட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் உள்ளது இக்கோவில்.

பிரம்மதேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கயிலாசநாதரை வலம் வருவதால் காசிக்கு சென்று சிவதரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்sகுமோ அந்த புண்ணியம் இங்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. உத்தராயணம் தட்சிணாயனம் காலங்களில் சூரியன், கயிலாசநாதர் கருவறை வந்து தனது வெம்மையான கரங்களால் இறைவனை தழுவுகிறார். அந்த நேரத்தில் இத்தல இறைவனை வழிபட்டால் வேண்டியது அனைத்தும் நினைத்தபடி கிடைக்கும்.

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது அவன் இந்த பகுதிகளை கைப்பற்றி சோழ நாட்டோடு இணைய வைத்தான். இவ்வூர் அருகில் உள்ள திருவாலிநாதர் சுவாமி கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு இந்த ஊரில் கொலுவீற்றிருக்கும் கயிலாசநாதர், பிரஹந்நாயகியின் அருளால் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்தது. இதனால் மனம் மகிழ்ந்த மன்னன், இந்த ஊரை அந்தணர்களுக்கு காணிக்கையாக கொடுத்தான்.

நான்மறைகள் ஓதிய அந்தணர்களுக்கு மன்னர், மானியமாக வழங்கியதால் ‘ராஜராஜ சதுர்வேதி மங்கலம்’ அல்லது ‘பிரம்மதாயம்’ என பெயர் கொண்டு பின்னர் பிரம்மதாயம் என்பது ‘பிரம்மதேசம்’ என்று திரிவடைந்ததாக கூறப்படுகிறது.இத்தலத்தில் சரஸ்வதிக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இங்கு தாமிரபரணி உத்தரவாகினியாக ஓடுகிறாள். அதாவது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கோவிலை வலம் வந்து வணங்குகிறாள். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதியில் தங்களது கால்களை நனைத்த பின்னரே கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

குழந்தைப்பேறு விரும்பி வரும் தம்பதியினர், இந்த ஆற்றில் குளித்த பின்னரே இலந்தையடிநாதரை தரிசிக்கச் செல்கிறார்கள். இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவும், ஐப்பசி திருக்கல்யாண விழாவும், பவித்ரோத்சவம், வசந்த திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சிவராத்திரி போன்ற விழாக்களும், தினசரி பூஜைகளும் நடந்து வருகிறது.திருநெல்வேலி நகரில் இருந்து பாபநாசம்,  அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, மன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச்  செல்லும் பேருந்துகள் மூலம் இத்தலத்தை அடையலாம்.

Tags : Brahmashtra ,
× RELATED கொரோனா ஒழிப்பு தவிர மாற்றுச் சிந்தனை...