திருமுருகனின் திருத்தலங்கள்

*பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி திருக்கோலத்தில், அதேசமயம் தம்பதி சமேதராக முருகப்பெருமானை தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம்.  இத்தலம் பல்லடம்- உடுமலைப்பேட்டை பாதையில் உள்ளது.

*பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த  ஐந்துமுக முருகப்பெருமானை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை  மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.

*பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை  வைக்கச் சொல்லி உத்தரவிடும் முருகனை  காங்கேயத்தில் தரிசிக்கலாம். முருகன் உத்தரவுப்படி வைக்கப்பட்ட பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம். இத்தலத்தை  சிவன்மலை என்றும் அழைக்கின்றனர்.

*கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில், வழக்கத்துக்கு மாறாக, இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது  ஆரோகணித்து வீற்றிருக்கிறார் முருகப் பெருமான்.

*கையில் கரும்பேந்தி அருளும் கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.

*குறமகளான வள்ளியம்மையுடன் முருகப்பெருமான் கருவறையில் வீற்றிருக்கும் அற்புத தரிசனத்தை குமரி மாவட்டம், தக்கலையிலிருந்து 5 கி.மீ்்.  தொலைவில் உள்ள குமார கோயிலில் தரிசிக்கலாம்.

*மாமல்லபுரம் - கல்பாக்கம் பாதையில் உள்ள திருப்போரூரில் என்றும் வற்றாத திருக்குளத்துடன் கூடிய ஆலயத்தில் பனைமரத்தால் ஆன சுயம்பு  மூர்த்தியான முருகப்பெருமானை தரிசிக்கலாம். சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில் முருகப்பெருமானுக்குச் சமமாக  போற்றப்படுகிறது.

*தென்காசியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய அழகே உருவான முருகனை 645  படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏறி தரிசிக்கலாம்.

*திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள விராலி மலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்தபடி  முருகப்பெருமான் அருள்கிறார். அவருக்கு இரு புறமும் வள்ளியம்மையும், தெய்வானையும் நின்றிருக்கிறார்கள்.

*அருணகிரிநாதருக்கு திருப்புகழைப் பாடும் திறமையை அருளிய முருகப்பெருமானை திருச்சிக்கு அருகே உள்ள வயலூர் திருத்தலத்தில் கண்டு  மகிழலாம்.

*திருவாரூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள எண்கண் தலத்தில், எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில்  முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

ந.பரணிகுமார்

Related Stories: