×

வேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு

தமிழுக்கு அணிகலமாக விளங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வேலாயுதத்திற்கென தனிக்கோயில் இருந்த செய்தி  குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த கோயில்களின் பெயர்கள் வரிசையாகச் சொல்லப்பட்டுள்ளது. அவை அமரர்தருக் (கற்பக)  கோயில். வெள்ளை யானைக்கோயில், பலதேவர்கோயில், சூரியன்கோயில், நிலாக்கோயில், ஊர்க்கோட்டம்,  வேற்கோட்டம், வஜ்ரக்கோட்டம்,  புறம்பணையான் கோட்டம் நிக்கந்தர் கோட்டம் என்பனவாகும். இதில் வேற்கோட்டம் என்பது வேலுக்கென தனியே அமைந்த கோயிலாகும்.மதுரையை அடுத்து அமைந்துள்ள ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையில் முன்னாளில் வேல் ஒன்று அமைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு  வந்தது. பின்னாளில்தான் அங்கு வள்ளி தெய்வயானை உடனாய முருகப் பெருமானின் திருவுருவம் எழுந்தருளி வைக்கப்பட்டது என்பது இங்கு  நினைவு கூறத்தக்கதாகும். இதனால் அக்கோயிலும் வேற்கோட்டம்  என்றே குறிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள அநேக முருகனாலயங்களில் கருவறையில் வேலாயுதத்தையே அமைத்து வழிபடுகின்றனர். அதன்மீது முருகனின்  திருவுருவத்தைக் கவசமாகச் செய்து அணிவித்துள்ளனர்.மலேசியா, சிங்கப்பூர் முதலிய இடங்களிலும் பல முருகன் ஆலயக் கருவறையில்  வேலாயுதத்தையே முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி வைத்து வழிபட்டுவருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் மூலவராக விளங்கும் முருகப்பெருமான்,  நாரதர், தெய்வயானை, சூரிய சந்திரர் கந்தர்வர்கள் சூழ சுதை வடிவமாக விளங்குகின்றார். எனவே அவருக்கு புனுகு எண்ணெய் மட்டுமே  அணிவிக்கப்படுகிறது. மற்றைய அபிஷேகங்கள் யாவும் அவர் கரத்தில் சாத்தப்பட்டுள்ள வேலுக்கே செய்யப்படுகின்றது. இதனையொட்டி இதுவும்  வேற்கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

மணிவேல்

 
‘மணிகள்’ வீரத்தின் அடையாளமாகும். வீரர்கள் தங்கள் வலது முழங்காலில் ஒரு மணியை அணிகின்றனர். இதற்கு ‘வீரகண்டாமணி’ என்பது பெயர்.  சோமாஸ்கந்தர், வீரபத்திரர், சந்திரசேகரர், பிட்சாடனர் முதலான சிவ வடிவங்களின் வலது முழங்காலில் மணியைக் காணலாம். அனுமாருக்குக்  காலிலும் வாலிலும் மணி கட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம். காளி, வீரபத்திரர் முதலிய வீரவடிவங்கள் கையில் மணியேந்துகின்றனர். மேலும்  தமது அளவற்ற வீரத்தின் அடையாளமாக வீரபத்திரர், பைரவர் முதலியோர் நீண்ட மணிகளைக் கோர்த்த மாலையை அணிந்திருக்கின்றனர்.  முருகப்பெருமான் கைமணியை ஒலித்தவாறு பவனி வருவதை இலக்கியங்கள் சிறப்புடன் குறிக்கின்றன.

வீரர்கள் ஏறிச்செல்லும் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றிற்கும் மணிகள் கட்டப்பட்டன. இவை அழகு சேர்ப்பதுடன் வீரத்தையும்  வெளிப்படுத்துகின்றன. இதையொட்டி இவை ‘மணிக்குதிரை’, ‘படுமணியானை’, ‘மணிநெடுந்தேர்’ எனப் பலவாறு குறிக்கப்படுகின்றன.ஆயுதங்களிலும் வீரத்தின் அடையாளமாக மணிகள் கட்டப்பட்டன. வில்லின் மேல் முனையிலும் தண்டிலும் மணிகள் கட்டப்பட்டிருந்ததை  இலக்கியங்களால் அறிகிறோம்.

இவ்வகையில் ஒப்பற்ற வெற்றியைத் தரும் வேலாயுதத்திலும் மணிகள் கட்டப்பட்டன. இதையொட்டி வேலாயுதம் மணிநெடுவேல், மணிவேல்,  மணிக்கதிர்வேல் என்று பலவாறு அழைக்கப்படுகிறது. கல்லாடத்தில் முருகன் ‘மணிவேல் குமரன்’ என்று அழைக்கப்படுகின்றான். வேல் விருத்தத்தில்  ‘‘தன்னிடம் கட்டியுள்ள மணியின் ஒலியால் சகல உலகங்களும் அதிரும்படியாக வேல் சுழன்று வருகிறது’’ என்று அருணகிரிநாதர் பாடிப்  பரவுகின்றார்.கொங்குநாட்டு நாட்டுப்புற தெய்வ ஆலயங்களின் முன்புறம் நடப்படும் நெடுவேல்களின் கண்டப்பகுதியில் சதுரம் அல்லது அறுகோணமாக  வெட்டிய தகட்டை இணைத்துள்ளனர். இதன் ஒவ்வொரு முனையிலும் மணி இணைக்கப்பட்டுள்ளது. காற்றில் இவை சலசலத்து ஒலிக்கின்றன.

வஜ்ரவேல்


வேல் என்பது முருகனுக்கு மட்டுமே உரிய ஆயுதமாகும். வஜ்ஜிரம் அனைத்து தேவர்களுக்கும் பொதுவாகவும் இந்திரனுக்குச் சிறப்பான ஆயுதமாகவும்  திகழ்கிறது.வழக்கத்தில் உள்ள வேலாயுதம் நிமிர்ந்த அரச இலையைப் போன்ற மேற்பகுதியையும் நீண்ட காம்பினையும் உடையதாக விளங்குகின்றது.  இது இந்திரனின் வஜ்ராயுதத்தைவிட வலிவு கொண்டது. ஆயினும் வஜ்ரவேல் என்ற ஒரு வகை வேலையும் முருகனுக்கு அமைத்திருக்கின்றனர். இது  முகப்பில் மூன்று சாய்சதுரங்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியதுபோல அமைந்து நீண்ட காம்பைக் கொண்டதாகவிளங்குகிறது.

முருகன் ஆலயங்களில் வேலாயுதம் சிறப்பாக இருந்தாலும் ‘வஜ்ஜிராயுதமே’ அத்திர தேவராகப் போற்றப்படுகிறது. முருகனின் ஆயுத புருஷனாக  வஜ்ராயுதமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. முருகனின் ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாவில் கொடியேற்றத்தின்போதும் நவசந்திகளில் பலி  சாய்க்கும்போதும் வஜ்ராயுதத்தை வலம்வரச் செய்துபூஜிக்கின்றனர். வஜ்ராயுதத்தை ஞானசக்தி என்றும் கூறுவர். திருத்தணிகையில் முருகப்பெருமான்  ஞானசக்தியை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார்.

இவரை வஜ்ரவேலர் என்றும், ஞானசக்திதரர் என்றும் அழைக்கின்றனர். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி, சிக்கல் சிங்கார வேலர் ஆகியோர்  திருக்கரத்தில் உயர்ந்த ஜாதிக்கற்கள் இழைத்த வைரவேல் (வஜ்ரவேல்) சாத்தப்படுகிறது.வஜ்ரம் என்பதற்கு உறுதியானது என்பது பொருளாகும்.  உயிர்கள் இறையருளால் பாதுகாப்புடன் வாழும் (வஜ்ரம் போல் வலிமை படைத்த) கூட்டிற்கு வஜ்ரபஞ்சரம் என்பது பெயராகும். அதுபற்றியே  உயிர்களுக்கு காவலாக நின்று காக்கும்வேலாயுதத்திற்கும் ‘வஜ்ரவேல்’ என்பது பெயராயிற்று. இது தமிழில் ‘வைரவேல்’ என்றழைக்கப்படுகிறது.

சக்திவேல்


வேலின் வகைகளில் ஒன்று சக்திவேலாயுதம். சக்தியின் வடிவம் இரண்டு சூலங்கள் எதிர் எதிராக இணைந்துள்ளது போன்றதாகும். முருகப்பெருமான்  இதனை இடது மேல்கரத்தில் ஏந்தியுள்ளார். சக்திவேல் என்ற பெயர்களை பலர் சூட்டிக்கொண்டுள்ளனர். முருகன் ஆலயங்களில் சக்திவேலை  முருகனுக்கு சாத்தும் வழக்கம் இல்லை. தணிகை முருகன் வஜ்ராயுதத்தை ஏந்தியிருந்த போதிலும் ஞான சக்திதரர், சக்திதரர் என்றே அழைக்கின்றனர்.  சிற்ப நூல்கள் முருகன் மேற்கரங்களில் ஏந்தும் ஆயுதங்களை வஜ்ர குலிசம் அல்லது வஜ்ர சக்தி என்றழைக்கின்றன.

(வஜ்ராயுதம், மேலே குறித்தபடி மூன்று சாய்சதுரங்களை அடுக்கியது போன்றதாகும். குலிசம் அல்லது சக்தி என்பது இரண்டு சூலங்களின் இணைந்த  வடிவினதாகும்.)

உத்தண்ட வேல்


நடைமுறையில் நீண்ட தடிக்கு தண்டம் என்ற பெயர் வழங்குகிறது. பகைவரை தண்டித்து உயர்ந்தவரைக் காப்பதால் வேலுக்கும் தண்டம் என்பது  பெயராயிற்று. வேலைச் சிறப்பித்துக்காட்டும் வகையில் உத்தண்ட நெடுவேல் என்றும் உத்தண்ட வேல் என்றும் அழைக்கப்பட்டது. இதையொட்டி  முருகன் உத்தண்டராயன் என்றும் உத்தண்ட வேலன் என்றும் அழைக்கப்படுகிறார். பழனி முருகனுக்குத் தண்டாயுதபாணி என்ற பெயர் வழங்குகிறது.  சக்திவேல், வஜ்ரவேல் போன்று. உத்தண்ட வேல் என்பதும் வேலின் வடிவங்களில் ஒன்றாகும். நடைமுறையில் உத்தண்ட வேலை நீண்ட தடிபோல்  அமைத்து அதன்மீது மயிலின் திருவுருவத்தை அமைத்துள்ளனர்.

வேல் உண்டாக்கிய தீர்த்தங்கள்

தென்னிந்திய திருத்தலங்களில் தெய்வங்கள் தனது படைக்கலத்தை நிலத்தில் ஊன்றி உண்டாக்கிய தீர்த்தங்கள் பலவற்றைக் காண்கிறோம்.  இவ்வகையில் சிவபெருமான் உண்டாக்கிய சூல தீர்த்தம், திருமால் உண்டாக்கிய சங்கு, சக்கர, வில்லூன்றி தீர்த்தங்கள், துர்க்கை உண்டாக்கிய கட்க  தீர்த்தம் போன்று, முருகப்பெருமான் உண்டாக்கிய தீர்த்தங்களும் பல தலங்களில் உள்ளன.சிவபூஜை செய்ய முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால்  அமைத்த தீர்த்தங்கள் வேல் தீர்த்தம் என்ற பெயரில் அமைந்துள்ளன. சென்னையை அடுத்த திருவேற்காட்டில் வேல் தீர்த்தம் சிறப்புடன்  விளங்குவதைக் காண்கிறோம்.

திருச்செந்தூர், திருத்தணி, வள்ளிமலை முதலிய இடங்களிலும் முருகப்பெருமான் வேலாயுதத்தையூன்றி உண்டாக்கிய தீர்த்தங்கள் உள்ளன.கிணறு வடிவிலான தீர்த்தங்களை அமைத்ததோடன்றி முருகன் தனது வேலால் ஆறுகளை உண்டாக்கியதையும் காண்கிறோம். திருவண்ணாமலை,  காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓடும் செய்யாறு, கன்னட நாட்டிலுள்ள குமாரதாரைமுதலியன வேலால் தோன்றியவையாகும். திருமுருகன் பூண்டி எனும்  தலத்தில் முருகப்பெருமான் வேலாயுதத்தால் தீரத்தம் உண்டாக்கினார் என்று அவ்வூர்த் தலபுராணம் கூறுகிறது. முருகப்பெருமான் கண்ணாடி போன்ற  தெளிந்த நீரை உடைய குளங்களை உண்டாக்கிய வேலாயுதத்தை உடையவன்  என்பதை அருணகிரிநாதர் வயலூர்த் திருப்புகழில் ‘கண்ணாடியிற்  தடம் கண்ட வேலா’ என்று குறித்துள்ளார். வயலூரில் உள்ள தீர்த்தம் சக்திவேலின் பெயரால் சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

கடலுக்கு வேலை என்பதும் பெயராகும். கடல் பலமுறை வேலை அடக்கி ஒடுக்கப்பட்டதாகும். ஆதியில் சூரசங்காரத்தின்போதும், பின்னர் இந்திரன்  ஏவலால் மதுரையை அழிக்கப் பொங்கிவந்தபோதும் முருகன் வேலை வீசி அதை அடக்கினார். இதனை அருணகிரிநாதர் ‘‘வேலை வற்றி வறண்டு  சுரீல் சுரீல் என’’... வேலெடுத்து நடந்த திவாகர (வேலையாகி கடல் வறண்டு அதன் மணல் சூரிய வெப்பத்தால் சுரீல் சுரீல் என்று சுடும்படியாக  எனும் தொடரால் குறிக்கின்றார். மேலும் ‘‘பாரி (கடல்) சுவறிட (வற்றும் படி) வேலை (வேலாயுதத்தை)’’ விடவல பெருமாளே என்றும்
திருப்புகழில் குறித்துள்ளார்.

வேல் தந்த ஆறுகள்
 
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்துள்ள ஜவ்வாது மலைத்தொடரில் தோன்றி வடாற்காடு செங்கல்பட்டு மாவட்டங்களில் பாய்ந்து,  செங்கல்பட்டிற்குச் சற்று மேற்கேயுள்ள திருமுக்கூடல் எனும் தலத்தில் பாலாற்றுடன் கலக்கும் ஆறே செய்யாறு எனப்படும் சேயாறு ஆகும்.இதன்  கரையில் சப்த கரைகண்டம், சப்த கயிலாயம், பெருநகர், இளையனார்வேலூர், கடம்பர் கோயில், மாகரல் முதலான திருத்தலங்கள் உள்ளன.இந்த ஆறு தோன்றியதை விளக்கும் புராணக்கதை ஒன்று உள்ளது. ஒருசமயம் பார்வதி தேவியார் சிவபெருமானின் உடலில் இடப்பாகத்தைப் பெற  வேண்டி காசி முதலான திருத்தலங்களை வழிபட்டபின்காஞ்சிபுரத்தை அடைந்தாள்.

அங்கு ஏகாம்பரநாதரை மாவடியில் வழிபட்டு அவருடைய அருட்காட்சியைப் பெற்றாள். சிவபெருமான் அவளைத்் திருவண்ணாமலை சென்று தவம்  புரியும்படிக் கூறினார். அதன்படியே அம்பிகை தன் பரிவாரங்களுடன் திருவண்ணாமலையை நோக்கிப் பயணமானாள். நீண்ட தூரம் கடந்து வந்த  அவர்கள், வழியில் உச்சிவேளையில் ஓரிடத்தில் தங்கினர். தேவியார் அங்கே உச்சிவேளை சிவ பூஜையைச் செய்ய விரும்பினாள். கண்ணுக்கெட்டிய  தூரம் வரை தண்ணீரே இல்லை. முருகப்பெருமானை அழைத்து தனது பூசைக்கு வேண்டிய தண்ணீரைக் கொண்டுவரும்படி ஆணையிட்டாள்.முருகன் தன் தாயின் ஆணையைக் கேட்டதும், தன்னுடைய வேலாயுதத்தை மேற்கு திசையை நோக்கி வீசி, ‘நீர் கொண்டு வருக’ என்று அதற்குக்  கட்டளையிட்டார்.

அந்த வேல் பாய்ந்து சென்று ஜவ்வாது மலைத்தொடரில் ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. அந்த இடத்தில் இருந்து ஊற்று வெளிப்பட்டு தண்ணீர்  பொங்கியது. அதன்பின் வேலாயுதம் அவ்வூற்று நீர் பாய்ந்துவர வழியையும் உண்டுபண்ணியது. அவ்வாறு வேலால் உண்டாக்கிச் செலுத்தப்பட்ட ஆறே  இலக்கியங்களில் ‘சேயாறு’ என்றுஅழைக்கப்படுகிறது.அன்னையின் பூசனைக்கு ஆற்றினை தோற்றுவித்த வேலாயுதம், பிறகு அந்த ஆறு பாலாற்றுடன்  கலக்குமிடத்திற்கு  முன்பாக ஓரிடத்தில் அன்பர்கள் வழிபட்டுப் பேறு பெற, கல்லுருவம் பெற்று நிலை பெற்றது. அங்கு அதற்கு கோயிலும் அந்தக்  கோயிலைச்சுற்றி ஊரும் உண்டாயின. இப்படி வேல் நிலை பெற்று உண்டான இடமே இளையனார் வேலூர் என்று இந்நாளில் அழைக்கப்படுகிறது.  இங்கு அழகிய முருகன் ஆலயம் உள்ளது. இது அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமாகும். காஞ்சிபுரத்திலிருந்து  நகரப்பேருந்துகள் இத்தலத்திற்குச் செல்கின்றன.
 
வெற்றிவேல் வீரவேல்

தமிழர்களின் வீர உணர்ச்சியூட்டும் வீர கோஷங்களில் ஒன்று, ‘வெற்றிவேல் வீரவேல்’ என்பது. தென்பாண்டி நாட்டில் வழங்கி வரும் நாட்டுப்புறச்  செய்திகளின்படி வெற்றிவேல் என்பது கொற்கையிலுள்ள வெற்றி வேலம்மன் ஆலயத்திலும், வீரவேல் என்பது செந்திலாண்டவர் கையிலும்  இருப்பதாகும். இந்த ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கத்தைப் பெரிதும் கையாண்ட வீரபாண்டிய கட்டபொம்மன். கொற்கை வெற்றிவேல் அம்மனையும்,  திருச்செந்தூர் முருகன் கையிலிருக்கும் வீரவேலையும் வணங்கிப் போற்றி வந்ததாகக்கூறுகின்றனர்.

கொற்கையில் வெற்றி வேலம்மன் ஆலயம் சிறப்புடன் திகழ்கிறது. இங்கு எட்டு கரங்களுடன் சும்பநிசும்ப மர்த்தினியாக காளிதேவி வீற்றிருக்கின்றாள்.  இவள் சந்நதியில் சூலாயுதத்துடன் வேலாயுதத்தையும் வைத்துள்ளனர். தென்பாண்டி நாட்டில் பல இடங்களில் காளிக்கு வேலாயி, வீராயி என்ற  பெயர்கள் வழங்குகின்றன.காளிதேவியைப் போலவே துர்க்கையம்மனும் நீண்ட வெற்றிவேலை ஏந்துகின்றாள். சிலப்பதிகாரம் இதனை ‘வெற்றிவேல்  தடக்கைக் கொற்றவை’ என்று குறிக்கிறது.

இலங்கையிலுள்ள முருகன் ஆலயங்களில் பலவற்றில் முருகன் இரண்டு வேலுடன் காட்சியளிக்கின்றார். இவை வெற்றிவேல் வீரவேல்  என்றழைக்கப்படுகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் மூலவர் இந்த இரண்டு வேல்களுடன்காட்சியளிக்கின்றார்.வீரமுழக்கம் படை வீரர்கள்  தங்கள் மனதில் வீர உணர்ச்சி கொப்பளிக்கவும், மற்ற வீரர்களை உற்சாகமூட்டவும் பலவிதமான முழக்கங்களைச் செய்வர். இவ்வகையில் தமிழகத்து  வீரர்கள் தங்கள் வீரமுழக்கமாக ‘வெற்றிவேல் வீரவேல்’ ‘வெற்றிவேல் வீரவேல்’ என்ற வார்த்தைகளை முழங்கி வருவர்.

பூசை. ச.அருணவசந்தன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?