×

குருவினை வணங்கி வர குறையேதுமில்லை! என்ன சொல்கிறது என்ன ஜாதகம் ?

?23 வயதாகும் என் மகள் பி.காம். முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே படிக்க எம்பிஏ சேர்ந்துள்ளார். இரண்டு வருடங்களாக வரன் தேடியும் எதுவும்  சரிவரவில்லை. சொந்தத்தில் திருமணம் நடக்குமா? நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்வாரா? சுத்த ஜாதகம் சரிவருமா? இவரது  திருமணம் எப்போது நடைபெறும்?
 - சிந்தாமணி, கோவை.

உங்கள் மகளின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடாகிய களத்ர ஸ்தானம் சுத்தமாக உள்ளது.   என்றாலும் ஏழாம் பாவக அதிபதி சுக்கிரன் நீசம் பெற்றுள்ளார். புனர்பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில்  பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தை சுத்தவாக்கிய பஞ்சாங்கப்படி கணிதம் செய்து பார்த்ததில் சொந்தத்தில் திருமணம் முடிவதற்கான வாய்ப்பு  என்பது இல்லை. தற்காலம் நடந்து வரும் சனி தசையில் புதன் புக்தியின் காலமும் அதற்கு துணை புரியவில்லை. உங்கள் மகளின் ஜாதகத்தில்  ஜீவன ஸ்தானம் என்பது நன்றாக உள்ளது.

அதாவது உத்யோகம் என்பது பலமாக உள்ளது. அவரது கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசாங்க உத்யோகத்திற்கான தேர்வுகளை எழுதி வரச்  சொல்லுங்கள். பத்தாம் பாவகத்தில் இணைந்திருக்கும் சூரியனும் ராகுவும் உயர்ந்த உத்யோகத்தை உருவாக்கித் தருவார்கள். திருமணம் குறித்த  கவலையை விடுத்து முதலில் அவருடைய உத்யோகம் அமைவதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். திருமண வாழ்வு என்பது  அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைந்தாலும் அது எந்தவிதத்திலும் உங்கள் கௌரவத்திற்கு குறைவினைஉண்டாக்காது. வேலைபார்க்கும்  மாப்பிள்ளையாக அமைவார். தற்போது திருமணம் குறித்த கவலை வேண்டாம். 26வது வயதில் அவரது திருமணம் நல்லபடியாக நடந்தேறும் என்பதை  அவரது ஜாதகம் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

?நான் தற்போது பி.ஏ., ஆங்கிலம் படித்து வருகிறேன். மேலும் படிக்க ஆர்வமாக உள்ளேன். அரசாங்க வேலை கிடைக்குமா, என் எதிர்காலம் எப்படி  இருக்கும்?
 - கமலேஸ்வரி, திருவாரூர்.

நீங்கள் இளங்கலை படிப்பு முடித்த கையோடு முதுகலைப் படிப்பையும் தொடர இயலும். உங்கள் ஜாதகப்படி நீங்கள் அரசுக் கல்லூரியில்  விரிவுரையாளராக பணிபுரியும் வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. எம்.ஏ., எம்.ஃபில்., என்று உங்கள் படிப்பினைத் தொடர ஏதுவாக ஏதேனும் ஒரு வழியில்  நிதியுதவி கிடைக்கக் காண்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் கேதுவும், ராசியில் ராகுவும் இணைந்திருப்பதால் தேவையற்ற பயம் அவ்வப்போது  உங்கள் மனதிற்குள் எட்டிப்பார்க்கிறது. அநாவசிய சந்தேகத்தால் உண்டாகும் மனக்குழப்பத்தினை விடுத்து முழு கவனத்தினையும் படிப்பினில்  செலுத்துங்கள். சிறந்த ஆசிரியராக பல மாணவர்களை உருவாக்கும் சமூக பொறுப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. இருபத்திநான்காவது வயது  முதல் உங்களுடைய சம்பாத்யம் குடும்பத்தைக் காப்பாற்றும். தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து குரு பகவானை வணங்கி  அவருக்குரிய குருப்ரஹ்மா என்று துவங்கும் துதியினைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குருவினை வணங்கிவருவதால் குறையேதுமின்றி சிறப்பாக  வாழ்வீர்கள். இறைவனின் அருளால் ஒரு மிகச் சிறந்த குருவாக உயர்ந்து பலருக்கும் வழிகாட்டுவீர்கள் என்பதை உங்கள் ஜாதகம் இந்த உலகத்திற்கு  மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும்.

?இரட்டைப் பிறவிகளான எனது மகள்களுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை. இருவருக்கும் இடையே சிறிது மனஸ்தாபம் உள்ளது.
இருவருக்கும் மணம் முடிந்து நல்லபடியாக குடும்பம் நடத்துவதற்கு ஒரு வழி சொல்லவும்.
 - பிரபாகரன், சேலம் மாவட்டம்.

உங்கள் குமாரத்திகளின் ஜாதகப்படி அவர்கள் இருவருக்கும் நீங்கள் தனியாக வெளியில் மணமகன் தேடவேண்டிய அவசியம் இல்லை. இரட்டைப்  பிறவிகளில் ஒருவருக்கு தாய் வழி சொந்தத்திலும், மற்றொருவருக்கு தகப்பனார் வழி சொந்தத்திலும் மாப்பிள்ளைகள் காத்திருக்கிறார்கள். உறவினர்  இல்லத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சி ஒன்றினில் சம்பந்தம் பேசி முடிப்பீர்கள். 29.08.2020க்குப் பின்னர் இவர்களின் இருவரின் திருமணமும் மூன்று மாத  கால இடைவெளியில் நடந்துவிடும். குடும்ப ஸ்தானாதிபதி குரு லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் இருவரின் குடும்பமும் சிறப்பாக வாழும். அவர்கள்  இருவருக்கும் இடையே உள்ள மனஸ்தாபம் கூட தற்காலிகமானதே தவிர நிரந்தரமானது அல்ல.

அது குறித்து கவலைப்படாதீர்கள். உங்கள் இரு மகள்களையும் சிறிது காலத்திற்கு வெவ்வேறு இடங்களில் வசிக்கும்படிக்கு பிரித்து வையுங்கள்.  ஒருவரை உங்கள் வழி உறவினர் வீட்டிலும் மற்றவரை உங்கள் மனைவியின் வழி உறவினர் வீட்டிலும் சிறிது காலம் தங்கியிருக்கச் செய்யுங்கள்.  வெளியுலகத்தில் நிகழ்ந்து வரும் பிரச்சினைகள் மற்றும் நிகழ்வுகளை அவர்கள் அறிந்துகொள்ளாமல் இருக்கும் அளவிற்கு மிகவும் செல்லமாக  வளர்த்துவிட்டீர்கள். வெளியுலகம் புரிந்தால் நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போன்ற சிறு சிறு தவறுகளை செய்யமாட்டார்கள். உங்கள்  மனைவியிடம் தினமும் காலை மாலை இருவேளையும் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து அம்மனுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி  வணங்கிவரச் சொல்லுங்கள். உங்கள் குடும்பத்தில் இந்த வருட இறுதியில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கும்.

?நான் எம்.சி.ஏ., முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணை மனதார விரும்புகிறேன். பெற்றோர்  சம்மதத்துடன் அந்தப் பெண்ணையே திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். அரசு வேலை
கிடைக்குமா, எங்களது திருமணம் நடக்குமா?
 - விஜய்கிருஷ்ணா, பெங்களூரு.

உங்கள் ஜாதகப்படி 12 அக்டோபர் 2020க்கு மேல் நிரந்தர உத்யோகம் என்பது கிடைத்துவிடும். அரசுப் பணிக்காக காத்திராமல் கிடைக்கின்ற  வேலையை முதலில் ஏற்றுக்கொண்டு பணியாற்றி வாருங்கள். உங்களுடைய சம்பாத்தியமும் எதிர்கால வாழ்க்கையும் சிறப்பாக அமைந்துள்ளது.  நீங்கள் ஒரு பெண்ணை விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தப் பெண் கடக ராசியில் பிறந்தவர். நீங்கள் ரிஷப ராசியைச் சேர்ந்தவர். இரண்டு  ராசிகளுக்கும் இடையே வசியப் பொருத்தம் உள்ளதால் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஈடுபாடு தோன்றியுள்ளது. உங்கள் இருவரின் ஜாதகப்படி,  இருவரும் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவது என்பது எதிர்பார்க்கும் அளவிற்கு சிறப்பான வாழ்க்கையைத் தராது. பரஸ்பரம் பேசி  நண்பர்களாகவே பிரிந்துவிடுவது எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. அந்தப் பெண்ணிற்கும் சிறப்பான மண வாழ்க்கை என்பது அமையும். உங்களைப்  பொறுத்த வரை உறவு முறையில் இருந்தே பெண் அமையும். உங்களது மண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். ஞாயிறு தோறும் அருகில் உள்ள  சிவாலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவதால் உங்களுக்கு கூடிய விரைவில் நல்ல உத்யோகம் கிடைத்துவிடும். வீண் குழப்பத்திற்கு  ஆளாகாமல் தெளிவாக முடிவெடுத்து வெற்றி பெற முயற்சியுங்கள். நல்ல எதிர்காலம் அமையும் என்பதையே உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது.

?எம்.சி.ஏ., பட்டதாரியாகிய என் மகனுக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலைகளும் ஆறு மாதத்திற்கு மேல்  நிலைப்பதில்லை. நிலையான வேலை இல்லாததால் 35 வயது ஆகியும் திருமணம் தடைபட்டுக்கொண்டே செல்கிறது. உத்யோக அமைப்பும்  எதிர்காலமும் எவ்வாறு உள்ளது?
- கிருஷ்ணகுமார், சென்னை.

    பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு லக்னாதிபதி புதன் 12ல் அமர்ந்திருப்பதால் எதிலும் ஒரு  ஸ்திரத்தன்மை என்பது அமையாமல் சிரமப்பட்டு வருகிறார். மேலும் தொழில் ஸ்தானத்திற்கும், அவரது ஜென்ம ராசிக்கும் அதிபதியாகிய குரு  பகவான் வக்ர கதியில் அமர்ந்திருப்பது அவரை ஒரே இடத்தில் தொடர்ந்து பணி செய்ய விடாது. மற்றவர்களோடு உங்கள் மகனை ஒப்பிட்டுப்  பார்க்காதீர்கள். எல்லோரையும் போல் ஒரே நேர்க்கோட்டில் எண்ணாமல் சற்றே மாற்றி யோசித்தீர்களேயானால் மாற்றம் நிச்சயம் உண்டாகும்.  லக்னத்தில் இருக்கும் ராகு அவரது முன்னேற்றத்திற்குத் துணை புரிவார். அடுத்தவர்களிடம் சென்று பணி புரிவதைவிட சொந்தமாக தொழில்  செய்வதே நல்லது. கன்சல்டன்சி அலுவலகம் ஒன்றைத் துவக்கி அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தொழில் அவருக்கு கைகொடுக்கும்.  அவரது மனதிற்கு பிடித்த பெண்ணே வாழ்க்கைத்துணைவியாக அமைவார். 25.11.2020 ற்குள் தொழில் அமைந்து அதன் பின் உடனுக்குடன்  திருமணமும் நடந்துவிடும். திருமணத்திற்கு பின் தொழில் மேலும் முன்னேற்றம் அடையும். எதிர்காலம்வளமாக உள்ளது.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம்.  கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது,
என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

சுபஸ்ரீ சங்கரன்

Tags : priest ,horoscope ,
× RELATED கோயில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலத்தில் பூசாரி உயிரிழப்பு