காலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்

தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள்.  தேன்காடு எனும் மதுவனத்தில் நுழைந்தாள். இந்திரன்  மகளாயினும் எளியவளாக மாறினாள். பன்னீர் விருட்சத்தின் கீழ் அமர்ந்தாள். தியானத்திற்குரியவரை மனதில் நிறுத்தினாள். உள்ளம் குழைந்தது.  முகத்தில் ஒளி கூடியது. வெகு விரைவில் தவம் கனியும் என்பதாக பன்னீர் மரம் சிலிர்த்தது. இலைகள் முல்லை அரும்பு மழையாக  பொலபொலவென கொட்டியது. தெய்வானை தேவி அழகாக ஓளிர்ந்தாள்.  வெகு ஆழமாக தனக்குள் பயணித்தாள். வேறொருபுறம் இரண்டு அரக்கர்கள்  மதுவனத்தின் வெகுதொலைவே தவமியற்றலாம் என எண்ணி அமர்ந்தனர். அக்னி குண்டங்களின் மத்தியில் அமர்ந்தனர். புறத்திலும், அகத்திலும்  தவத்தீ கொழுந்து விட்டெறிந்தது.

அது தேவர்களை விட அசுரர்கள் கடுந்தவம் இயற்றிய யுகாந்திர காலம். காலம், தேசமெல்லாம் மறந்து சதாகாலமும் ஈசனையும், பிரம்மனையும்  நினைத்து பேய்த்தவம் இயற்றினர். தீ சுடினும் தவம் கலையாது கயிலைநாதன் வரும்வரை காத்திருந்தனர். எதையும் அதீதமாகச் செய்வதில்  வல்லவர்கள் அசுரர்கள். தனக்குள் ஆழ்ந்து சென்றனர். ஆனால், கொடுத்த வரத்தை ரத்தினமாக பாதுகாக்காது மகாபாதகச் செயலாக அடாது செய்து  அழிவைத் தேடிக் கொண்டனர். அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிசக்தி தமது லீலைகளை தேவ, அசுரர்களை முன்னிறுத்தி  நிகழ்த்தினள். பூலோகம் உள்ளவரையில் லீலை நிகழ்ந்த பூமி புண்ணியத் தலமாக பொலிந்தது. மானிட உயிர்கள் மட்டுமல்லாது, மகரிஷிகளும்  தலத்தின் மகாத்மியம் உணர்ந்து சிவசக்தியரின் நிழலொற்றி நடந்தனர். ஓடிச் சென்று சேவித்தனர். பக்தர்களின் மனதில் பதியவைக்க தலத்தின்  மகிமையை பாக்களாக்கி மகிழ்ந்தனர். அந்த ஞான பரம்பரையும், தலத்தின் மகாத்மியமும், சிவசக்தியரின் அளவிலா விளையாட்டுகளும் ஒன்றுக்குள்  ஒன்று பிணைந்த நேரம் ஒன்று நெருங்கி வந்தது. அதில் குமரக் குகனும் அமரும் தலம் ஒன்று உருவாகியது. அதை பார்வதி தேவி காளியாக  மாறும்முன்பு திடமாக தமக்குள் உணர்ந்திருந்தாள்.

குழந்தை குமரன் குமரப் பருவத்தை எட்டியிருந்தான். ஞானத்தோடு கலந்த விவேக வீரத்தையும் சிவசக்தியர் குழைத்து ஊட்டியிருந்தனர். சிவத்தையே  தமது அகத்தில் வைத்து அம்பரன், அம்பன் எனும் அரக்கர்கள் தியானிப்பதாக கேள்வியுற்றான், கந்தன். தந்தையும் அகமகிழ்ந்து கேட்ட வரங்களை  ஒன்று விடாது அளித்ததை அறிந்து மகிழ்ச்சியுற்றான். ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்தவை கந்தனை கோப சிகரத்தில் ஏற்றியது. அசுரர்கள் தேவ குலப்  பெண்களின் கற்பை சிதைத்தனர். காமக் கொடூரர்களாக விளங்கி தேவலோகத்தையே நரகலோகமாக்கினர். இந்திரன் இடிந்து அமர்ந்தான். தேவக்கூட்டம்  விழித்துக் கொண்டு கதறியது. கயிலைக் கதவருகே தடுமாறி விழுந்தனர். ஈசனிடம் கண்ணீர் பெருக்கி அம்பரன், அம்பன் எனும்  சகோதரர்கள் செய்யும்  அட்டகாசங்களை சொன்னது. உடனிருந்த கந்தன் முதலில் எழுந்தான்.

தந்தையளித்த வரங்கள் இப்படி அதர்மம் செய்வதற்கா என வாள் உருவிக் கர்ஜித்தான். பார்வதிதேவி கந்தனை சமனப் படுத்தினாள். ஈசனிருக்க ஏன்  கவலைப்படுகிறாய் குமரா. காலம் பார்த்து கயிலைப்பெருமான் செய்வதைப் பார் என்றாள். தேவர்கள் நிம்மதிப் பெருமூச்சோடு கயிலையின் வாயிலை  விட்டு வெளியேறினர். வானம் முழுதும் கருநீல வண்ணமொன்று ஊறி ஊடுருவி நிற்பதை வெகு தொலைவே நடந்து கொண்டிருந்த தேவர்கள்  கண்டனர். அம்பர சகோதரர்கள் நித்திரையின்போது மஞ்சத்திலிருந்து தவறி விழுந்தனர். அசுர சேவகர்கள் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்று  அவர்களை விட்டு விலகினர். தனிமையாக அசுரர்களை மரணபயம் மெல்ல கவ்வியது. கயிலையில் பார்வதிதேவி தேவர்கள் அகன்றபின்னும்  குமரனை ஆதூரத்தோடு பார்த்தாள். இவனுக்கு எப்போது மணம் செய்விப்பது என மெல்லிய கவலை கொண்டாள். இவனை மணப்பவள்  எங்கிருக்கிறாளோ என ஆவலாக ஈசனைப் பார்க்க மகாதேவன் அந்த திசையை சுட்டிக் காண்பித்தார்.

பார்வதி அந்த அடர்ந்த காட்டின் அழகை கண்டு திகைத்தாள். இவளா என் மருமகள் என மகிழ்ந்தாள். கண் திறந்தாள். சிவன் இப்போது பார்வதியை  நோக்க பார்வதி அசுரர்களை அழிக்க நடக்கத் தொடங்கினாள். கந்தனும் பூவுலகம் வரை தாயுடன் வந்தான். சற்று பின்நோக்கி பார்த்த பார்வதி அன்னை  ‘‘இது என்னால் நிகழ்த்தப்பட வேண்டிய வதம். உனக்கானது அடுத்துள்ளது. அதோ அந்த மதுவனத்தருகே குடி கொண்டிரு. அங்கு சென்றால் தாய்  சொன்னதின் காரணத்தை அறிவாய்’’ என்றாள். தாய் சொன்ன கணத்தில் தன்னை யாரோ அழைப்பது போன்று உணர்ந்தான், கந்தன். ஒருமித்த  சக்தியொன்று அன்பு அலைகளாக தன்னைசுற்றியிருப்பதை உணர்ந்தான். அலைகளின் மேல் செல்லும் ஓடம்போல அன்பின் சக்தியை அகத்தில்  உணர்ந்தவன் அந்த திசை நோக்கி நகர்ந்தான். அந்த காட்டின் விஸ்தாரம் பார்த்து திகைத்தான். தேனடைகளிலிருந்து தேன் தாரையாக வழிந்து  கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் கண்டான்.

தேனும், தினைமாவும் உண்பவன் இன்னும் களிப்புற்றான். தெய்வானை தியான பூர்த்தியின் எல்லையில் நின்றாள். தோளில் அமர்ந்திருந்த கிளி ஒன்று  காதருகே கூவியது. கிளியின் ஓசை கேட்ட குமரன் ஏதோ வீணையின் நாதத்தில் லயித்தவன்போல ஓசை வந்த திசைநோக்கி நகர்ந்தான். மாவும்,  பலாவும் நெடிதுயர்ந்திருந்தன. வேரில் பலா வெடித்து கானகம் முழுதும் வாசம் பரப்பியது. வாழைகுலை மஞ்சள்பூசி நாணி தலைசாய்ந்திருந்தன. காடுகளூடேபோய் கானகத்தில் மையத்தை நெருங்க  வானத்து நிலவின் வட்டம்போல பன்னீர் மரமொன்று இது பச்சை நிலவோ என எண்ணும்படியாக  பிரமாண்டமாக நிழல் பரப்பியிருந்தது. தெய்வானையின் தவத் திரட்சி கந்தனை தன்வயமிழக்க வைத்தது. உள்ளத்தில் அன்பு மடிகனத்த பசு  பாலைப்பொழிவதுபோன்று சுரந்தது. காற்றில் மிதக்கும் இலக்கற்ற சிறகுபோல நடந்து தெய்வானை முன்பு நின்றான், கந்தன். கிளி குமரன்.... குமரன்.....  என்று படபடத்து சிறகை விரித்து பறந்தது. கண்கள் திறந்தாள் தெய்வானை. கந்தனின் கருணைவிழிகள் தேவத்தலைவன் இந்திரனின் தெய்வானை  என இனம் கண்டு கொண்டது. தெய்வக் காதல் காரணமற்று பொங்கியது. உள்ளத்தினிடையே உரையாடல் இருக்க வார்த்தைகளாக என்ன பேசுவது  என கற்சிலையாகி நின்றனர்.

தெய்வானை கந்தனை நமஸ்கரித்து எழுந்தாள். கைகூப்பியபடியே வானவர் உறையும் தேவலோகம் சென்றாள். வெகுதொலைவே அம்பர  சகோதரர்களின் மரண ஓலம் காட்டிற்குள் எதிரொலித்துத் திரும்பியது. தேவர்கள் தேவியை தோத்திரம் செய்வது இனிய கானமாக காற்றினுள் மிதந்து  வந்தது. தேவர்கள் வானுலகிற்கு செல்லும்போது காடுகளூடே நடந்து கொண்டிருந்த கந்தனைக் கண்டனர். அசுரர்கள் கொட்டம் அழிந்ததைச்  சொன்னார்கள். வேறொரு விஷயத்தையும் காதருகே விவரித்தனர். சூரபத்மன் எனும் அரக்கன் வேறொரு பக்கம் அட்டகாசங்கள் செய்வதாகவும் அதை  தேவியிடம் தெரிவித்தபோது குமரன் வதம் செய்வான் என்று அருளிச் சொன்னதை சொன்னார்கள். தேவர்கள் மெல்ல மேலே மிதந்து மேகங்களை  ஊடறுத்து சென்றதை பார்த்தார். காட்டின் நிசப்தம் குமரனை வெகுகாலம் குடிகொள்ளச் செய்தது. இரு வதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தனிமை  தவம்போல ஒரு பக்குவத்தை அந்த தேன்காடு எனும் மதுவனம் தந்தது. கந்தனையே மணம்புரிய விரும்பிய தெய்வானை எனும் கன்னிகையின்  தவத்தை காணநேர்ந்ததும், அடுத்தொரு வதம் இருப்பதை சூட்சுமமாக சுட்டிக்காட்டிய தாயின் திருவடியை மனதுக்குள் நமஸ்கரித்து கானகம் தாண்டி  சென்றார்.

சூரபத்மன் வதத்தை முடித்து தெய்வானை மணந்து, வள்ளித் திருமணம் புரிந்து தான் மிகவும் விரும்பிய இந்த கானகத்தில் வந்து கந்தன் குடிகொண்டு  அடியாகளுக்கு அருளியதால் இன்றும் இத்தலத்திற்கு கந்தன்குடி என்றே பெயர்பெற்று விளங்குகிறது. தவமிருந்து தெய்வானை பார்த்த அந்த தலத்தை நாமும் காண்போமா. அன்று கந்தன் பார்த்த கானகம்போல் அடர்ந்த மரங்கள்மட்டும்தான் இல்லை.  ஆனால், பச்சைபசேலென பரவியிருக்கும் விளைநிலங்கள். சிலுசிலுவென மனதை குதூகலப்படுத்தும் தென்றல் காற்று என இயற்கைழகின் மத்தியில்  அழகுக் குமரன் குடியிருக்கிறான். கிழக்கு நோக்கிய கோயில் அமைப்பு. கோயிலின் வாயிலிலிருந்து நீண்ட நடுமண்டபம் அமைந்துள்ளது. அதன் மேல்  விதானத்தி அறுபடை வீடுகளையும் அழகிய சித்திரமாக வரைந்துள்ளனர். அதனருகேதான் தெய்வானை தெற்கு நோக்கிய தனிச்சந்நதி அமைந்துள்ளது.  நின்றகோலத்தில் கைகளில் கிளியோடு, தவம்முடித்த களை முகமெங்கும் பரவியிருக்க, சாந்தமும், நாணமும் ஒருசேரக் கலந்திருக்க  நின்றகோலத்தில் அருள்கிறாள் தெய்வானை எனும் தேவசேனா. சிறிய திருச்சந்நதியாக இருந்தாலும் நின்று பார்க்கவைக்கும் ஒரு தெய்வீக வசீகரம்  பொலியும்படியாக விளங்குகிறது. இவளை தரிசித்தாலே போதும் திருமணம் கைகூடும் என்பது நிதர்சனம். மகாமண்டபத்தில் நடராஜர் சபையும்  அதனையடுத்து ஸ்நபன மண்டபமும் உள்ளன.

அர்த்தமண்டபத்தை அடுத்து கர்ப்பக்கிரகத்தில் வள்ளி, தேவசேனா, சுப்ரம்ணியசுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். இது என்னுடைய இடம் என்று  மிகுந்த உரிமையோடு கந்தன் குடி கொண்டிருக்கிறான். சொந்த ஊருக்கு வருவோரை எத்தனை அன்பாக உபசரிப்போமோ அதுபோல கந்தனை சகல  உபசாரங்களோடும் அமர்வித்துள்ளனர். சந்தனக் காப்பு, விபூதிக் காப்பு, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம் என வேளைக்கொரு அபிஷேகமும்,  அலங்காரமுமாக செய்து மகிழ்கிறார்கள். கருவறை நெருங்கினாலே ஒரு ஆனந்த ஊற்று அகத்தில் கொப்பளிக்கிறது. இத்தனை நாள்பட்ட துயரங்கள்  இதற்கா இவ்வளவு பயந்தோம் என தூசாக பறந்து போகின்றது. வள்ளியும், தெய்வானையும் வியப்புணர்வோடு காட்சி தருகிறார்கள். கந்தனின்  மேலுள்ள பக்திக்கு சாட்சி பாவனையில் பக்தர்களையும், கந்தனையும் பார்ப்பதுபோன்றொரு உணர்வு அச்சந்நதியில் ஏற்படுகிறது. அழகன் முருகன்  பேரழகுச் சிகரமேறியிருக்கும் அற்புதத் தலமெனில் மிகையில்லை. இந்த கந்தவேளை அருணகிரிநாதர் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார் என வரலாறு  கூறுகிறது.

கந்தன் கொடுத்த களிப்பில் பிராகாரத்தை வலம் வருவோம். உள்பிராகாரத்தில் தெற்கே விநாயகர் வீற்றிருகிறார். அவரை அடுத்து வாகன அறையும்,  பள்ளி அறையும் மடப்பள்ளியும் உள்ளன. ஐராவதம் எனும் தேவேந்திரனின் வெள்ளையானையை தெய்வானைக்கு துணையாக கந்தன்குடிக்கு இந்திரன்  அனுப்பி வைத்தான். அந்த ஐராவதம் திருக்குளத்தில் நீராடி வழிபட்டு புனித வாழ்வு பெற்றது. அது ஐராவதேஸ்வரர் என பெயர் பெற்றது.  இக்கோயிலின் தலவிருட்சம் பன்னீர் மரமாகும். இதனடியில் தெய்வானை தவமிருந்தாள். இந்த ஆலயத்தில் காசியைப்போல விஸ்வநாதர், விசாலாட்சி  தனிச் சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர். கந்த புஷ்கரணி எனும் திருக்குளம் உள்ளது. இதில் நீராடி கந்தனை வழிபடுவோர் மனதின் மாசுக்கள் கரையும்  என்பார்கள், ஆன்றோர்கள். இக்கோயிலின் பைரவர் சந்நதிக்கு எதிரேயுள்ள சன்னலில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து சொட்டிய தேனைச் சேகரித்து  மூலவர்க்கு முன்னாளில் அபிஷேகம் செய்ததாக பழஞ்செய்தி ஒன்று கூறுகிறது. சிறிய ஆலயமனாலும், தொன்மையில் கீர்த்தியிலும், கந்தனின்  புகழ்பாடுவதிலும் ஈடிணையற்ற கோயில். கோயிலிலுள்ள ஒவ்வொரு தெய்வத் திருமேனிகளையும் மிக அழகாக அலங்கரிக்கிறார்கள். கோயில்  முழுவதையும் வலமாக வந்து கொடிமரத்தின் கீழ் வணங்கி நிமிர நம் உள்ளத்திலும் கந்தன் குடி கொண்டுவிடுகிறான். இத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால், மயிலாடுதுறை - காரைக்கால்  பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை கடந்தால் கந்தன்குடியை காணலாம். .

ந. பரணிகுமார்

Related Stories: