×

செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்

*வைகாசி விசாகம் 4-6-2020

சங்க இலக்கியம் எனப் போற்றப்படும் பாட்டும் தொகையுமாகிய இலக்கியங்களுள் எட்டுத்தொகையில்  ஒன்றாய் அமைந்ததே பரிபாடல் என்னும்  இலக்கியம் ஆகும். இது  ‘ஓங்கு பரிபாடல்’ எனச் சான்றோரால் போற்றப்படும் பெற்றியைத் தன்னுள் கொண்டு அமைந்ததாகும். பரிபாடல் பாடிய  புலவர்கள் பதின்மூவர் ஆவர். பாடல்களால் அமைந்த நூலாதலின் இதற்கு  இசை வகுத்தோர் பதின்மர் ஆவர். இதனுள் செவ்வேளைப் பற்றி  எட்டுப்பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனுள்  612 அடிகள்  அமைந்துள்ளன. இப்பாடலானது தமிழரின் தொடக்ககால வாழ்வியல் தொடங்கி  இன்றளவும் சிறப்புற்றிருக்கின்ற முருகவழிபாட்டினைப் பற்றிக் குறித்துரைக்கின்றது.
 
செவ்வேள் பற்றிய பாடல்கள்

செவ்வேளைப் பற்றிய பாடல்களைக் கடுவனிளவெயினனார், ஆசிரியன் நல்லந்துவனார், குன்றம் பூதனார், கேசவனார், நல்லழிசியார், நப்பண்ணனார்,  நல்லச்சுதனார் போன்ற புலவர்கள் எழுவர் பாடியுள்ளனர். குன்றம் பூதனார் இரு பாடல்களைப் பாடியுள்ளார்.
 
கந்தவேளின் பெயர்கள்

முருகன் என்னும் பெயரும் முருக வழிபாட்டினைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் இடம்பெற்றுள்ளன.  ‘முருகு’ என்னும்  பெயரே அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு போன்ற பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகின்றது. பத்துப்பாட்டில் ஒரு நூல் ‘திருமுருகாற்றுப்  படை’ என்னும் பெயரில் அமைந்துள்ளமை நாம் அறிந்ததே ஆகும். ஆனால் ‘வேள்’ என்னும் சொல்லானது பரிபாடலில் மட்டுமே காணப்படுகிறது.   இத்தகைய சொல்லானது ‘செம்மை’ என்னும் பண்படையைப் பெற்று ‘செவ்வேள்’ எனப் பரிபாடலில் வந்தமைந்தது. இத்தகைய சிறப்புடைமை கருதியே  பரிபாடலில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தொகுத்துரைக்கும் பொழுது ‘செவ்வேள்’ எனக் குறித்தனர் சான்றோர் பெருமக்கள்.
 
முருகனின் திருவிளையாடல்

பரிபாடல் முருகப்பெருமானின்  திருவிளையாடல்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. பெரும்பாலான பரிபாடல் பாடல்கள்   முருகன் சூரபதுமனை  ஆட்கொண்ட தன்மையையே குறிப்பிடுகின்றன. கடுவனிளவெயினனார் என்னும் புலவர் இத்தகைய செய்தியை விரிவாகப் பாடியுள்ளார். முருகன் தன்  ‘பிணிமுகம்’என்னும் யானை மீதமர்ந்து சென்று தன்னுடைய வேலை எறிந்து மாவினை அழித்தார். மலையினையும் அழித்தார்; சூரனின்  சுற்றத்தாரையும் அழித்தார் என்ற செய்தியானது பதிவு  செய்யப்படுகிறது. இதனை,
 
“பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக்  கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை!”
( பரி: 5: 1 - 10 )

என்பதனால் அறிய முடிகிறது.கந்தபுராணத்துள் குறிக்கப்படும் ‘கிரௌஞ்சம்’ என்னும் மலை அத்தகைய பெயரால் பரிபாடலில் குறிக்கப்படவில்லை.  ‘கிரௌஞ்சம்’ என்னும் சொல்லானது ‘அன்றில்’ என்னும் பறவையைக் குறிப்பதாகும். தமிழில் ‘பறவை’ என்பது ‘புள்’ எனக் குறிக்கப்படும். எனவே  இம்மலையானது, “புள்ளொடு பெயரிய பொருப்பு” (பரி:5:9) என்று பரிபாடல் குறிப்பிடப்படுகிறது.
 
செவ்வேளின் செம்மைசேர் அழகு

செவ்வேளின் செம்மைசேர்  அழகினைப் பரிபாடலில் புலவர்கள் பலரும் பாடி மகிழ்ந்துள்ளனர்.கடுவனிளவெயினனார் செவ்வேளின் நிறமானது   கதிரவன் ஒளி ஒத்து அமைந்திருந்தது என விளக்கியுரைப்பார். கனன்று எரியும் தீயின் நிறத்தினை  உவமையாக்கி உரைப்பார்  நப்பண்ணனார்.

“ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!”
(பரி: 5:12, - 13 )

இவ்விரு உவமைகள் தவிர செவ்வேளின் நிறத்துக்கு வேறு உவமைகள் பரிபாடலில் காணப்பெறவில்லை. முருகப்பெருமான்  ஆறு தலைகளையும்  இளங்கதிர் மண்டிலம் போன்ற முகத்தினையும் உடையவர் என்கிற செய்தியினை,

“மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்”
( பரி., 5:11)

எனப் பரிபாடல் குறிப்பிடுகிறது.  செவ்வேள் தன் பன்னிருகைகளிலும் பன்னிரு படைக்கருவிகளைக் கொண்டுள்ளார் என்பதனை,

“ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன்
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு   இகந்தோய்
( பரி: 5: 63 - 70 )

என்ற பரிபாடல் அடிகள் எடுத்துரைக்கின்றன. முருகப்பெருமானின் மார்பானது  மலையினைப் போன்ற ஆற்றலையும் அகலத்தையும் கொண்டதாய்  அமைந்திருக்கும் என்று குறிப்பிடுகிறது பரிபாடல். சந்தனம் முதலிய நறுமணப்புகை கமழ மலர்மாலையும் முத்துமாலையும் கந்தவேள் மார்பினை  அணிசெய்கின்றன என்பதனையும் பரிபாடல் மூலமாக அறிய முடிகிறது. முருகனுக்கு  உரியது கடம்பு ஆதலின், பெரும்பாலான புலவர்கள் அவரைக்  கடம்பமாலை சூடியவராகவே பாடியுள்ளனர்.

“பூண்டதை சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த
உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார்.
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி”
(பரி: 21:10-13)

செவ்வேளைப் பற்றிப் பாடிய பரிபாடல் புலவர்கள் அனைவரும் முருகனது படைகள், கொடி, ஊர்தி பற்றிய சிறப்புகளையும் சுட்டுகின்றனர். அதன்  அடிப்படையில் வேலாயுதமானது  ‘சுடர்ப் படை’ (14-18) ‘ஏந்திலை’ (17-2) எனப் பலபெயரால் வழங்கப்பெறுகிறது. முருகனுக்குரிய கொடிகளாக  சேவலும் மயிலும் எழுதிய கொடிகளே சுட்டப்படுகின்றன.

மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,
( பரி: 17-48)

கடுவனிளவெயினனாரும், நல்லழிசியாரும் முருகனின் யானை ஊர்தியைப்  ‘பிணிமுகம்’ என்னும் பெயரால் சுட்டுகின்றனர்.

“சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி”  (பரி: 5:2, 17:49)     

“பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!” (பரி: 5:2, 17:49)   

முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்:

முருகப்பெருமானை விரும்பி வணங்கி அடைய வேண்டுபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளையும் அடைய இயலாதோரின் தன்மைகளையும்  பரிபாடல் விளக்கமாக எடுத்துரைக்கின்றது.  உருளிணர் கடம்பின் ஒலிதாரோயே! உயிர்களை வருத்தும் தீய நெஞ்சினை உடையோரும், அறத்தின்கண்  சேராத புகழில்லாரும், கூடாவொழுக்கமுடைய பொய்த் தவவேடமுடையோரும், மறுபிறப்பு, சொர்க்கம், நரகம், வீடு முதலியன இல்லை என்னும்  அறிவில்லாதோரும் ஆகிய இன்னோரன்னோர் நினது திருவடி நிழலை அடையார்; இனி இவரல்லாத அறவோரும் மாதவரால் வணங்கப்படும்  மாண்புடையோரும் நின் தாள் நிழலை எய்துவர் என்பது பரிபாடல் குறிக்கும்  செய்தியாகும். இதனை,

“நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
சேரா அறத்துச் சீர் இலோரும்,
அழி தவப் படிவத்து அயரியோரும்,
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்    நின் நிழல்” ( பரி: 5: 71 - 77 )

என வரும் பரிபாடல் அடிகளால் அறியலாம்.எனவே முருகனின் அருளைப்பெற நாம் இத்தகைய தகுதிகளை வளர்த்துக் கொள்ளல்  இன்றியமையாததாகும். இதனையே திருக்களிற்றுப்படியார்,

“அன்பேஎன் அன்பேஎன் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும்--அன்பன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்”  (திருக்களிற்றுப் - 55) என எடுத்துரைக்கும்.

முருகன் அடிதொழ விரும்பும் அடியவர்:

முருகனின் முதற் படைவீடான திருப்பரங்குன்றத்தினை வணங்கி வழிபடும் அடியவர் அவ் இறைவனின் திருவடியில் பொருந்தி அவன் அருள்பெறும்  பேற்றினையே பெரிதெனப் போற்றி மகிழ்ந்துள்ளனர். முருகனை. தன்னோடு போர் புரிந்த அசுரனை வென்ற செல்வக்குமரனே! மாறுபட்டு நின்றாருடன்  போர் செய்யும் வீரனே! வெற்றி தரும் வேலினைச் செலுத்தும் வேலனே! ஆறிரு தடந்தோள்களுடனும் ஆறுமுகத்துடனும் காட்சி தரும் ஆறுமுகனே!  பெரிதும் நன்மையை விரும்புகின்ற எம்முடைய சுற்றத்துடன் உன்னுடைய குன்றிடத்து வந்து உன்னுடைய அடியுறையும் வாழ்வாகிய இன்ப  வாழ்வினை இன்று பெற்றோம். இன்றுபோல் என்றைக்கும் இத்தகைய இன்ப வாழ்வானது கிடைத்தருள உன் அருளை வேண்டி அடிதொழுது  போற்றுகின்றோம் என வேண்டி நிற்கின்றனர். இதனை,

“மாறமர் அட்டவை மறவேல் பெயர்பவை
ஆறிரு தோளவை அறுமுகம் விரித்தவை
நன்றமர் ஆயமொடு ஒருங்குமின் அடியுறை
இன்றுபோல் இயைகெனப் பரவுதும்
ஓன்றமர்த் தேயத்த செல்வநின் தொழுதே” ( பரி -  21: 66 - 70 )

என்பதால் அறியலாம். மேலும் முருகனை வேண்டி நிற்போர் அவன் அருளினையே முதற்கண் வேண்டி நின்றனர்.

“ யாம் இரப்பவை
பொன்னும் பொருளும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்னும் அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதாராயோ” (பரி:  5: 78: 81 )

இன்னல் உற்ற அடியவரின் இடரினைத் தீர்த்து அவர்களுக்கு இன்பத்தினை நல்கும் ஆற்றல் பெற்றது தண்பரங்குன்று. தண்பரங்குன்றின் இத்தகைய  தன்மையைச் சுட்டும் பரிபாடல் தமிழரின் காதல் வாழ்வினையும் எடுத்துரைக்கின்றது. சுனைநீரின் நடுவே தமிழ்ப்பெண் ஒருத்தி நீராடுகிறாள்.  அப்பொழுது அவள் எதிர்பாராத வண்ணம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அதனால் தள்ளாடிய தலைவி கரையில் நின்ற தன் கணவனை  நோக்கி மூங்கில் புணையினைத் தன்னை நோக்கி தள்ளிவிடுமாறு வேண்டுகிறாள். அவள் கணவனோ அவளுக்கு உதவி செய்யாது சாயநீர் நிரம்பிய  வட்டத்தினை அவளை நோக்கி எறிகிறான். அவளோ மூங்கில்புணை கிடைக்காமையால் தண்ணீரில் தள்ளாடுகிறாள். அதனைக் கண்ட கணவன் நீருள்  புகுந்து அவளைக் காப்பாற்றுகிறான். இத்தகைய காதல் கணவனைப் போன்று தண்பரங்குன்றமும் தன் அடியவரைக் காக்கும் என்பதனைப் பரிபாடல்  எடுத்துரைக்கின்றது.

முருகனிடம் அடியவர்கள் வேண்டி நின்றவை பரிபாடல் காட்டும் தமிழர்கள் முருகனின் திருவடிப்பேற்றினை விரும்பி நின்றதுடன் இவ்வுலக  வாழ்வின் சிறப்புகளைப் பெறுதற்கும் வேண்டி நின்றனர் என்பதனைப் பரிபாடல் மூலம் நாம் அறிய முடிகிறது. தங்களின் வளமான  வாழ்விற்குப்  பொருள் வேண்டும் என்பதனை அறிந்த தலைவன் பொருள் தேடிச் சென்றுள்ளான். அவன் சென்ற இடத்தில் பொருள் பெரிதும் கிடைக்க வேண்டும்  எனத் தலைவி வேண்டி நிற்கின்றாள்.

“செய் பொருள் வாய்க்க எனச் செவி சார்த்துவோரும்” ( பரி 8: 16 )

இளம்பெண்கள் தங்களுக்குத் திருமணம் அமைதல் வேண்டி முருகனை வழிபட்டு நின்றுள்ளனர். அவர்கள் வேண்டியவாறே முருகப்பெருமான்  திருமணப் பேற்றினை அருளியுள்ளார். அதனால் மகிழ்ந்த பெண்கள்,

“தருமணவேள் தண்பரங்குன்றத்து” (பரி  8 : 61 - 62 )

எனப் போற்றி வழிபட்டனர். சில மகளிர் தம் காதலனுடன் கனவில் கைசேர்த்து நீர் விளையாடி மகிழ்ந்தனர், அத்தகைய இன்பமானது உண்மையாக  நிகழவேண்டும் என்றும் முருகனை வேண்டி நிற்கின்றனர்.

“பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;
அரு வரைச் சேராத் தொழுநர்,’
கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை      
வரு புனல் அண்க’ என வரம் கொள்வோரும்” (பரி 8 : 101 - 105 )

சங்ககால மகளிர் தம் காதலரைப்  பிரியாது வாழ்தல் வேண்டியும் பிரிந்த மகளிர் காதலரைச் சேர்தல் வேண்டியும் முருகப்பெருமானை  வழிபட்டுள்ளனர். அத்தகைய பெண்கள் முருகனது விழாவிற்குக் கொடியேற்றும் நாளில் முருகனின்  வாகனமாகிய யானை உண்டு மிஞ்சிய  உணவினை உண்டு வழிபட்டனர் என்பதனைப் பரிபாடல் விளக்கியுரைக்கும்.

“பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,
கன்னிமை கனிந்த காலத்தார், நின்
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்” ( பரி: 8: 89 - 94 )

திருமணம் நிகழ்ந்து நெடுநாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கப் பெறாதவர்கள் குழந்தைப்பேறு வேண்டி முருகப்பெருமானை வணங்கி நின்றனர். அவர்கள்  நெடுநாட்கள் எம் வயிற்றில் இல்லாமல் போன குழந்தைப்பேறு இனி நீங்கி கருப்பம் உண்டாகட்டும்.அதற்காகப் பொருள்களைக் காணிக்கை தருவோம்!  எனவும் வணங்கி நின்றனர் என்பதனை,

“கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்” (பரி:  8 : 106 )

 என வரும் பரிபாடல் அடி விளக்கியுரைக்கும்.

செவ்வேளைப் போற்றுதல்

செவ்வேளின்  அருள் வேண்டி நின்றவர்கள் அவர்தம் பெருமையினைச் சொல்லிப் பாடிப் பரவி நின்றனர். குறவர் இனப் பெண்ணை  மணந்தவனே!  எங்களுடைய  வாழ்த்தினை உன்னுடைய  செவிக்குச் சிறப்புணவாக ஏற்று அருள்வாயாக! முருகா! உன்னுடைய  ஆடையும் மாலையும் சிவந்த நிறம்  உடையன. உன்னுடைய  வேலாகிய படையும் பவழம் போன்ற நிறமுடையதே ஆகும். உன் திருமேனியோ செந்தீயை ஒத்த தன்மை உடையதாகும்.  திருமுகம் இளஞாயிற்றை ஒத்திருக்கும். சூரபத்மனை அழித்தவனே! குருகு மலையில் வேலை எறிந்து அதனை உடைத்தவனே! நீ இம் மலையில்  கடப்பமரத்தின்கண் விரும்பிப் பொருந்திய நிலையை உடன்வந்த சுற்றத்தாரொடு ஏத்தித் தொழுது வாழ்த்தினோம். எமக்கு அருள்புரிவாயாக!  என்றெல்லாம் வேண்டி நின்றனர் எனக் குறிக்கும் பரிபாடல். இவ்வாறு சங்ககாலம் தொடங்கி தமிழர்களின் தனிப்பெறும் கடவுளாய்ப் போற்றப் பெற்ற  செவ்வேள் ஆகிய முருகப்பெருமானை இவ் விசாகத் திருநாளில் வழிபடுவதன் வழி அவரின் அருளையும் அன்பையும் பெற்று உயர்வு பெறுவோமாக!!

தொகுப்பு: முனைவர் மா. சிதம்பரம்

Tags :
× RELATED கொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது