ரமலான்: இறுதிப் பத்தின் ‘ஒற்றைப்படை இரவுகள்’

தூய ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  வழிபாட்டிற்காக வரிந்துகட்டிக் கொள்வார்கள். அதுவும் குறிப்பாக இறுதிப் பத்து நாட்களின் ஒற்றைப் படை இரவுகளுக்கு மிகுந்த சிறப்புகள் உண்டு. ‘லைலத்துல் கத்ர்’ எனும் மாட்சிமை மிக்க இரவில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. என குர்ஆன் கூறுகிறது:“திண்ணமாக, நாம் இதனை(குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம். மாட்சிமை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன? மாட்சிமை மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அதில் வானவர்களும் ரூஹும் (வானவர்களின் தலைவரும்) தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகிறார்கள். அந்த இரவு

முழுவதும் நலம் பொருந்தியதாகத் திகழ்கின்றது - வைகறை உதயமாகும் வரை.” (குர்ஆன் 97:1-5)

மாட்சிமை மிக்க இரவு என்பதற்கு  இரண்டு பொருள்கள் உள்ளன என்று கூறுகிறார் மாபெரும்  இஸ்லாமிய அறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள்.

ஒன்று: இந்த இரவு விதிகள் தீர்மானிக்கப்படும் இரவு. வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்த இரவில் இந்தத் திருவேதம் இறங்கியது, வெறும் ஒரு நூல் மட்டும் இறங்கியதாகாது. மாறாக, இது அரபு மக்களின் தலைவிதியை மட்டுமல்ல உலகத்தின் தலைவிதியையே மாற்றிவிடக் கூடிய மாபெரும் நிகழ்ச்சியாகும்.

இரண்டு: இது மிகவும் கண்ணியமும் மாட்சிமையும் மிக்க இரவாகும்.  இது ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர் இரவு என்று விவரித்துக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உணர்த்தப்படும் உண்மை வருமாறு: நீங்கள் உங்கள் அறியாமையினால் இந்தத் திருவேதத்தை உங்களுக்கு ஒரு துன்பமாகக் கருதுகிறீர்கள். ஆனால் எந்த இரவில் இதனை இறக்கிட தீர்மானிக்கப்பட்டதோ அந்த இரவு எத்தனை அருள் நலனும் பாக்கியங்களும் நிறைந்த இரவு என்றால் மனித வரலாற்றில் ஆயிரம் மாதங்களிலும் மனிதனின் நன்மைக்காகச் செய்து முடிக்கப்படாத பணி இந்த ஒரே இரவில் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. (ஆதாரம்: தஃப்ஹீமுல் குர்ஆன்)

“ரமலானில் பிந்திய பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவில் அந்த மாட்சிமை மிக்க இரவைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று நபிகளார்(ஸல்) அறிவுறுத்தியுள்ளார்.அதாவது பிந்திய பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவு என்றால் 21, 23, 25, 27, 29 ஆகிய இரவுகளில் அந்தச் சிறப்புக்குரிய இரவைத் தேடிக்கொள்ளுங்கள் என்றார் இறைத்தூதர். இந்த இரவுகளில் விழித்திருந்து தொழுகையில் ஈடுபடுதல், குர்ஆன் ஓதுதல், இறை தியானத்தில் மூழ்குதல், பாவ மன்னிப்புக் கோருதல் போன்ற வழிபாடுகளில் அதிகமதிகம் ஈடுபட வேண்டும்.அன்னை ஆயிஷா அவர்கள் இறைத்தூதரிடம், “இறைத்தூதர் அவர்களே, மாட்சிமை மிக்க இரவில் நான் என்ன ஓத வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபிகளார், “அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃப’ஃபு அன்னீ ” (இறைவா! நீ மன்னிப்பவன்; மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக!)” என்று பிரார்த்திக்குமாறு கூறினார்.  ரமலானின் இறுதிப் பத்து நாட்களிலும் அதிகமதிகம் வழிபாடுகளில் நாமும் ஈடுபடுவோம். அந்த மாட்சிமை மிக்க இரவு நமக்கும் வாய்க்கப்பெற வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.

-சிராஜுல்ஹஸன்

Related Stories:

>