×

குதிரை வழிபாடு

காளை, கருடன், எலி போன்றவை முறையே சிவபெருமான், திருமால், விநாயகர் ஆகியோருக்கு மட்டுமே வாகனமாக இருக்கும் இவற்றின் பெயரைச் சொன்னாலே இவற்றின்மீது ஏறிவரும் தெய்வங்கள் நம் நினைவுக்கு வந்து விடுகின்றனர். இப்படி தனிப்பட்டதாக இல்லாமல் யானை, குதிரை ஆகிய இரண்டும் அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவான வாகனமாக இருப்பவைகளாகும்.

கலியுக விநாயகர் எனும் வடிவில் பிள்ளையார் குதிரைமீது வருகிறார். சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு அருளும் பொருட்டு குதிரை சேவகனாய் எழுந்தருளியதை மதுரைப் புராணங்கள் கூறுகின்றன. துர்க்கை குதிரைமீது அஷ்வாரூடா எனும் பெயரில் வருகிறாள். பைரவர் துர்க்கா பைரவராகக் கோலம் கொண்டும் வரும்போது குதிரைமேல் பவனி வருகிறார். குதிரை வேகமும் விவேகமும் பெற்ற விலங்காக இருப்பதால் வீரர்கள் அதை மிகவும் நேசித்தனர். குதிரையைப் பழக்கி அதன்மீது அமர்ந்து போரிடுவதை சிறப்பாகக் கருதினர். வீரர்களின் முதன்மை பெற்ற விருப்பம் உன்னத குதிரைகளே ஆகும்.

குதிரைகளை நடத்துவதற்கும் கம்பீரமாகத் தோற்றமளிப்பதற்கும் அவற்றிற்கு சேணம், பார்வை மூடு, அங்கவடி, அம்ருதோல் போன்றவற்றை இட்டனர். குதிரைகள் முரட்டுத்தனமானவை என்பதால் இரும்பு கம்பியை அதன் வாயில் இருக்கும்படி வைத்து இருபுறமும் வளையங்கள் பொருத்தி அதில் வார்களை இணைத்து பிடித்துக் கொள்வர். இதற்கு லகான் என்பது பெயர். இதை அசைப்பதன் மூலம் குதிரையை நிற்றல், ஓடுதல், தாவுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்யும்படி பழக்குவர்.

குதிரையின் முதுகிலுள்ள அமர்விடம் சேணம் எனப்படும். குதிரைமேல் அமர்பவர்கள் இருபுறமும் கால்களைத் தொங்கவிட்டு அமர்வர் அவர்கள் கால் வைத்துக்கொள்ள முதுகிலிலுள்ள சேணத்திலிருந்து தொங்கவிடப்பட்டு வளையங்கள் அங்கவடிகள் எனப்படும். குதிரை தாவிக் குதித்து ஓடும்போது அதன்மீது அமர்பவர்கள் இந்த அங்கவடிகளில் காலை ஊன்றி எழுந்து நிற்பதும் உண்டு. குதிரை மீது பயணிப்பதற்கு ஏற்பஅமர்வதற்கும் இந்த அங்கவடிகள் பயனாகின்றன.

கால்களில் தோன்றும் வியாதிகள் நீங்கவும், வண்டிவசதிகள் நன்கு அமையவும். மனச்சோர்வு நீங்கவும் குதிரை சிலைகளை தெய்வங்கள் சந்நதியில் காணிக்கையாக செய்து வைப்பது வழக்கம்.குலாலர் எனப்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள் மூலம் சுடுமண் குதிரை பொம்மைகளைச் செய்து வண்ணம் தீட்டி வீட்டிலிருந்து ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்று ஐயனார், மாரியம்மன் கோயில்களில் வைப்பர் . இதற்கு குதிரை எடுப்பு என்பது பெயர். இது தனியாகவோ ஊர் கூடியோ செய்யப்படும் நிகழ்வாகும். தென்மாவட்டங்களில் உள்ள சில ஊர்களில் குதிரையெடுப்பு பெரிய கிராம விழாவாகவே கொண்டாடப்படுகிறது. நேர்ந்து கொண்டவர்கள் குதிரைச் சிலையைச் செய்து வைத்துக் கொள்வர். ஊரிலுள்ள அனைவரும் கூடி ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர்.

கோயில்களில் வாகனமாக இருக்கும் குதிரைகளையும் வழிபடுவது வழக்கம். அதன் கண்களில் சூரிய சந்திரர்கள். சேணங்களில் பாம்பரசர்கள், முதுகில் மகாலட்சுமி, வாலில் வாயு, பார்வையில் அக்னி போன்ற தெய்வங்களை நிலைப்படுத்தி வணங்குகின்றனர். இந்த குதிரைகளை வழிநடத்தும் இரண்டு பேரையும் உடன் அமைக்கின்றனர்.

கோயிலில் உள்ள குதிரைகள் பச்சைக் குதிரை, தங்க (மஞ்சள்) குதிரை, (கடல்) நீலகுதிரை அக்னி (சிவப்பு) குதிரை, என பலவகையாக இருக்கின்றன. தெய்வங்களை மகிழ்விக்கும் பொருட்டு அவற்றின் வாகனங்களின் அம்சமாக பூமியில் தோன்றி வாழும் விலங்குகள் பறவைகளை வழிபடுகிறோம் அவ்வகையில் தெய்வங்கள் பவனிவரும் குதிரைகளைப் பூசிக்கிறோம்.

ஆலயங்களில் அதிகாலையில் நடைபெறும் பூசையில் கோபூஜை, கஜபூஜை அசுவபூஜை என்பன இடம் பெற்றிருந்தன. இப்போது கோபூஜை மட்டும் நடத்தப்படுகிறது. பசுவின் பின்புறத்திலும், யானையின் முகத்திலும், குதிரையின் முதுகிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாகக் கூறுகின்றனர். வேள்விச் சாலைகளில் அசுவபூஜை எனும் பெயரில் குதிரையைக் கொண்டு வழிபாடு செய்கின்றனர்.

குதிரைக்கு புல், கொள்ளு ஆகியவற்றைப் படைப்பர்.குதிரை வழிபாடு பரவலாக இருந்து வரும் வழிபாடாக இருந்து வருகிறது. குதிரையின் முதுகில் கேடயம், கத்தி ஆகியவற்றையும் சேணத்தின் இருபுறமும் அம்புப் புட்டிலும் இருக்கின்றன. குதிரையின் உச்சியில் காதுகளுக்கு இடையே கிளி, புறா, பருந்து ஆகியவற்றில் ஒன்று அமர்ந்திருப்பதைக் காணலாம். இவை போர்வீரனுக்கு செய்தியைப் பெறவும் செய்தியைஅனுப்பவும் துணை நிற்பனவாகும்.

தெய்வங்கள் குதிரைமீது அமர்ந்து பவனிவருகின்றனர். குதிரை (பரி) மேல் அமர்ந்து வரும் அழகால் அவை பரிமேல் அழகன் என்றும் பரிமேல் அழகி என்றும் அழைக்கப்படுகின்றன. சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் பரிமேல் அழகர் என்பது பொதுப் பெயராக இருக்கிறது. திருமால் குதிரைமுகம் கொண்டவராக ஹயக்ரீவர் எனும் பெயரில் விளங்குகிறார். மேலும் அவர் குதிரை வடிவுடன் தோன்றி அருட்பாலித்ததையும் புராண வரலாறுகள்
கூறுகின்றன.

விவச்சுவான் எனும் சூரியன் குதிரை வடிவம் கொண்டு திரிந்ததை புராணங்கள் கூறகின்றன. சூரு சமயம் அவனை மணந்த சம்சயை அவனது உடலில் இருந்து வெளிப்படும் சூட்டினால் (வெப்பத்தால்) துன்புற்று அவனைவிட்டு அகன்றாள். அவன் அவளது பிரிவைத் தாங்காமல் பல இடங்களிலும் அவளைத் தேடினான். அவள் அவனுக்குப் புலப்படாமல் யமுனை நதிக்கரையில் ஒரு காட்டில் குதிரை வடிவத்துடன் வசித்து வந்தாள்.

பலவாறு முயன்று அவளது இருப்பிடத்தைக் கண்டறிந்த அவன் அவள் குதிரையாக இருப்பதைத் தெரிந்து கொண்டான். தானும் ஓர் அழகிய குதிரையாக வடிவம் கொண்டு அவளிடம் சென்றான். அவள் அவனை அறிந்து கொண்டாள். இருவரும் சில காலம் அங்கு குதிரையாகவே வாழ்ந்தனர். அப்போது அவர்களிடமிருந்து வெளிப்பட்டவர்களே அஸ்வினித் தேவர்களாவர். அவர்கள் தேவர்களால் தலை சிறந்த மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அவர்கள் இருவரையும் குதிரை முகம் கொண்டவர்களாக அமைத்து வழிபடுகிறோம். இவர்கள் அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதைகளாவர்.

நாரதருக்குப் பிறகு இசைக்கலைக்கு புராணங்கள் தும்புறுவைத்தான் குறிப்பிடுகின்றன. இவர் குதிரைமுகம் கொண்டவர். சிவனின் திருமணக் கோலங்கள். திருமால் பாற்கடலில் இருப்பது போன்ற ஓவியங்களில் நாரதருடன் குதிரை கொண்ட தும்புருவையும் காண்கிறோம். சூரியனுக்குரிய விழாவில் கொடி ஏற்றத்தின்போதுகொடியில் குதிரை வடிவம் எழுதப்படும். அந்த குதிரைக்கு கண் திறப்பும் சிறப்புப் பூசையும் செய்யப்படும். கொடி ஏற்றத்தில் அஸ்வதாளம் இசைக்கப்படும்.

ஐயப்பன் கோயில்களில் குதிரைக் கொடி ஏற்றப்படுவதில்லை என்றாலும் கொடிமரத்தின் உச்சியில் குதிரை வடிவத்தைஅமைத்துள்ளனர்.மணிவாசகருக்கு அருள் புரிவதற்காகச் சிவபெருமான் குதிரை வணிகனாய்பாண்டியன் முன்பு எழுந்தருளினார்.பின்னர் குதிரையை குதித்தல், தாவுதல், பாய்தல் முதலிய ஐந்து கதிகளில் நடத்திக் காட்டினார். அவன் கொடுத்த பரிசை ஏற்றார். இதை நினைவூட்டும் வகையில் குதிரைமீது அமர்ந்த வீரன் வடிவில் அமைத்து சிவபெருமானை வழிபடுகிறோம். இந்த வடிவம் குதிரைச் சேவகன் என்றும் பாண்டிப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறது.

குதிரையின் பேரால் அமைந்த ஊர் புரவிபாளையம் என்பதாகும். இங்கு வாழ்ந்த சித்தர் புரவிபாளையம் சித்தர் என்று அன்பர்களால் கொண்டாடப்படுகின்றார். கோதானம் பூதானம், கஜதானம் ரிஷப தானம் போல அசுவதானமும் ஒன்றாகும். வெள்ளி அல்லது தங்கத்தால் குதிரையைச் செய்து அதற்கு உரிய மந்திரங்களை ஓதி தானம் செய்வதாகும்.

 ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் மோசமாக இருந்தால் அஸ்வ பூஜையும் அஸ்வ தானமும் செய்தால் அது வலுப்பெற்று நன்மைகள் உண்டாகும். சூரிய தசையால் வரும் துன்பம் நீங்க அஸ்வ தானமும் அஸ்வ பூஜையும் செய்யப்படுகின்றன. சாமவேதம் ஓதும் முனிவர்களின் நாவில் இருந்து குதிரைகள் தோன்றியதாகக் கூறுவர்.

ஆட்சி லிங்கம்

Tags :
× RELATED குதிரை வழிபாடு