சென்னை: நடிகர் அஜித், ‘துணிவு’ படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வந்தார். ‘மங்காத்தா’ என்ற ஹிட் படத்திற்கு பிறகு அஜித்-திரிஷா இருவரும் இப்படம் மூலம் ஜோடி சேர்ந்துள்ளனர். மற்றும் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விடாமுயற்சியை 800 திரைகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் மகிழ்திருமேனி பேசும்போது, ரேஸிங் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு அஜித் ஒரு வார்த்தை கூறினார். ‘நான் ரேஸிங் செல்வதற்கு முன் என் பட வேலைகளை முடித்து விட வேண்டும். ரேஸிங்கில் எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், நான் கார் ஆக்ஸிலேட்டரை அழுத்தும் போது 100 சதவீதம் அழுத்த வேண்டும், 90 சதவீதம் அழுத்தி நான் விளையாட விரும்பவில்லை. இந்த வேலை இருக்கு, அந்த வேலை இருக்கிறது என நான் யோசிக்க கூடாது’ என கூறினார். அதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என இயக்குனர் பேசியுள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.