சென்னை: சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிக்க, சுசீந்திரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘2K லவ் ஸ்டோரி’. இதை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் சார்பில், வரும் பிப்ரவரி 14ம் தேதி தனஞ்செயன் வெளியிடுகிறார். வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் இசை அமைப்பாளர் இமான், ஹீரோ ஜெகவீர், ஹீரோயின் மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் இயக்குனர் எழில், நடிகைகள் லத்திகா, வினோதினி வைத்தியநாதன், திவ்யா துரைசாமி, நடிகர்கள் பாலசரவணன், அருள்தாஸ், முருகானந்தம், ஆண்டனி பாக்யராஜ், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கலந்துகொண்டனர்.
அப்போது சுசீந்திரன் பேசுகையில், ‘இது எனக்கு மிகவும் முக்கியமான படம். ‘பிரேமலு’ படம் ரிலீசான அன்று, அதுபற்றி யாருக்குமே தெரியாது. அடுத்த காட்சியில் உலகத்துக்கே தெரிந்தது போல் இப்படமும் பெரிய வெற்றி பெறும். வெட்டிங் போட்டோகிராபி குழு இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. நானும், இமானும் இணைந்துள்ள 10வது படம் இது’ என்றார்.
அடுத்து இமான் பேசும்போது, ‘ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜானரில் கதை சொல்லி அசத்தும் சுசீந்திரன், இப்படத்தில் 2கே கிட்ஸ் உலகத்தை மிக இயல்பாக வடிவமைத்துள்ளார். இது அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இருக்கும். விஷூவல் சிறப்பாக இருந்தால்தான் இசையும் நன்றாக வரும். பாடல்கள் இளமைத்துள்ளலுடன் உருவாகியுள்ளது. கார்த்திக் நேத்தாவுக்கு வாழ்த்துகள். இப்படத்தின் ஆடியோவை முதல்முறையாக எனது ஆடியோ லேபிள் நிறுவனம் வெளியிடுகிறது’ என்றார்.