திருமகனின் திருவடி பதிந்த ராம்பாக்கம்

அயோத்தி நகரம் அலைகடலெனத் திரண்டது. ராம - சீதையை வரவேற்றது. ராஜ பட்டாபிஷேகம் நடத்தியது. மூன்று உலகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தன. ராமரும், சீதையும், உலகெங்கும் தமது பேரருள் பரப்ப விருப்பம் கொண்டனர். பாரத தேசம் முழுதும் பயணப்பட முனைந்தனர். அந்த யுகத்தில் கானகமும், நகரமும், கிராமமும் மாறி மாறி இருக்கும். கானகத்தில் ரிஷிகளும், இல்லறம் முடித்து வனப்பிரஸ்தம் ஏற்றோரும் தனிமை வேண்டி தவமிருப்பர். ராமர் கானகத்தை அடைந்து ரிஷிகளை ஆசிர்வதித்து, கிராமம், நகரம் என அடுத்தடுத்து போய்க்கொண்டிருந்தார். நடுநாடு என்றழைக்கப்படும் ராம்பாக்கம் எனும் கிராமத்தை அடைந்தார்.

மக்கள், தம்போலவே மனித ரூபத்தில் வந்திருக்கும் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமரையும், தாயார் சீதையையும், அனுமனையும் தாங்கொணா உவகையும், பேரின்பமும் பொங்கிப் பெருக வரவேற்றனர். அண்ணலும், பிராட்டியும், அனுமனும் அவர்களின் பேரன்பில் கட்டுண்டனர். ராவணனை வதம் செய்தவர் இவர்தானோ, இத்தனை மென்மையாக இருக்கிறாரே என்று பேசிக்கொண்டனர். மக்களின் மனதை அறிந்த ராமர், தான் யுத்தத்தின்போது மட்டும்தான் ராகவ சிம்மனே தவிர அனுக்கிரகம் செய்வதில் அருட் தென்றல் என்பதை நிரூபித்தார். யாவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தாயாரான சீதாப் பிராட்டியை தம் மடியில் அமர்த்தி ஆனந்த அருள் பெருக எல்லோர்மீதும் தம் திருப்பார்வையால் பரவினார். ராமர் அருளிச் செய்த அற்புதங்களை மக்கள் பாக்களாகப் பாடி மகிழ்ந்தனர். ‘ராம...’ நாமத்தை விண்ணதிரும்படி சொல்லி மகிழ்ந்தார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். அந்தப் பிரதேசத்தின் புழுதி மண் கூட ராமநாமத்தை உச்சரித்தவர்களின் பாத தூளியின் மகிமையால் சந்தனமாக மணம் கமழ்ந்தது.

ராமரும் சீதையும் வைகுண்டத்திற்கு தம் மானிட சரீரத்தை விடுத்து திவ்ய சரீரத்தோடு எழுந்தருளும் நிலையினை மக்களுக்குத் திருக்காட்சியாக அருளச் செய்தார்கள். சீதாப்பிராட்டி வைகுண்டத்திற்கு புறப்பட்டுபோகும் ஒரு நிலையினை அடைந்தாள். சீதாப் பிராட்டி பிரம்மபூதை என்று சொல்லும்படியாக ஒரு திவ்ய சரீரம் எடுத்து பேரொளியுடன் மகாவிஷ்ணுவான ராமனின் திருமார்பில் குடி கொண்டாள். அந்த கிராம மக்கள் சிலிர்த்தனர். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் தங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று பிரமித்தார்கள். ராமரின் திருமடியில் அலங்கார பூஷிதையாக சீதாப்பிராட்டி அமர்ந்தாள். ராமர் தனது மூல ரூபமான நாராயண கோலம் காட்டி, தமது மடியில் லஷ்மி தேவியை அமர்த்தியதால், மக்கள் அவரை ‘லஷ்மி நாராயணா...’ என்று அழைத்து ஆனந்தக் கூத்தாடினர்.

   யுகம் தோறும் அந்த அழகிய காட்சியினை மனதில் நிறுத்தி மக்கள் பூஜித்தனர். அதை புறத்திலேயும் வைக்கும் பாங்காக கோயிலாக்கி அழகு பார்த்தனர். ‘ராம...’ நாமத்தை உச்சரித்தும், ராமரை பாக்களால் துதித்தும் பக்தியால் நிறைந்த அந்த மண்ணிற்கு ‘ராம்பாக்கம்’ என்று திருப்பெயரிட்டு அழைத்தனர். இன்றும் இந்த ஊர் ராம்பாக்கம் என்றே அழைக்கப்படுகிறது. ராமனின் தாமரைத் திருவடிகள் படர்ந்த அரிய கோயில் இது. ராம்பாக்கம், கடலூர்-விழுப்புரம் பாதையில் மடுகரையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுச்சேரியிலிருந்தும் மடுகரைக்கு பேருந்து வசதிகள்

உள்ளன.

- எஸ்.கிருஷ்ணஜா

Related Stories: