பிறரை தீர்ப்பிடாதீர்கள்

கிறிஸ்தவம் காட்டும் பாதை

‘‘பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர் ’’ (எபிரேயர் 10:5) மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி. அவ்வாறே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். ஆனால் இது பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.பொறாமை, வஞ்சகம், கோபம், வெறுப்பு, புறம்பேச்சு, வீண்பேச்சு, பழிவாங்கும் எண்ணம், பிறரை குற்றவாளி எனத் தீர்ப்பிடுதல் இவை அனைத்துமே பாவம் தான். ‘‘ஆண்டவரே தம் மக்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்’’.  நம்மை படைத்த ஆண்டவர் ஒருவருக்கே பிறரை தீர்ப்பிடும் அதிகாரம் உண்டு. எனவே மக்களாகிய நாம் பிறரை தீர்ப்பிடுவது ஆண்டவருடைய அதிகாரத்தை நாம் கையில் எடுப்பதாகும். எனவே நாம் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி பெரும் குற்றப்பழியை நம் தலையில் நாமே சுமக்கின்றோம்.

‘‘பழி வாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன’’ (எபிரேயர் 10:30). ஒருவர் நமக்கு தீங்கிழைக்கும் போது அவரை நாம் பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என பழிவாங்கும் என்னத்தோடே அலைவோம். இதுதான் கிறிஸ்து காட்டும் பாதையா? மாறாக நம்மேல் சினங்கொள்பவருக்காக மன்றாடுவோம். நம்மை சபிப்பவருக்காகவும் வேண்டுவோம். ‘‘உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்’’ என்கிறார் இயேசு. பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால் தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம். காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் ரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. இதனால் தான் நம் ஆண்டவர் கூறுவது,’’ எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்’’ அப்பத்தை பிட்டு ‘‘இதைப் பெற்று உண்ணுங்கள், இது எனது உடல்’’ எனவும், பின்பு கிண்ணத்தை எடுத்து நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுத்து, ‘‘இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில், இது எனது உடன் படிக்கையின் ரத்தம். பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் ரத்தம் ’’ (மத்தேயு 26  27) எனக்கூறி தன்னையே கையளித்தார். இவையனைத்தும் நம் பாவத்தை

போக்கவே. எனவே நம் கிறிஸ்துவின் பலியை அறிந்தவர்களாய் நம் பாவங்களைப் போக்குவோம். கிறிஸ்து வழி செல்வோம்.

- ஜெரால்டின் ஜெனிபர்

Related Stories: