திருவருள் புரியும் தேவியர்

அம்பிகையின் பெருமைகளைப் போற்றும் துதிகளில் தலையாயது தேவி மஹாத்மியம். 700 ஸ்லோகங்கள் அடங்கிய இந்த துதியை பாராயணம்  செய்தால் கிட்டாதது ஏதுமில்லை. பதின்மூன்று அத்தியாயங்களில் பரதேவதையின் பராக்ரமங்களைப் பாடும் இத்துதியை அச்சிட்ட புத்தகத்தை  வைத்திருந்தால் கூட பாராயணம் செய்த பலன் உண்டு என்பார்கள். அந்த 13 அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிதேவதை உண்டு. அந்தந்த  அத்தியாய பாராயண பலன்களைத் தருபவர்கள் அந்த அதிதேவியர்தான். அவர்களை அறிந்து பூஜித்த பின்பே தேவியின் பராக்ரமங்களைக் கூறும்  ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும் என்பது விதி. அந்த 13 தேவியரும் துர்க்கா தேவி திருவருட்பாலிக்கும் ஜெயலோகத்தின் நான்காம்  பிராகாரத்தில் வீற்றிருந்து இந்த லோக பரிபாலனத்திற்கு பராம்பிகைக்கு உதவுகின்றனர். அந்த 13 தேவியரைப்பற்றி அறிவோம்.

1ம் அத்தியாய தேவதை, மகாகாளி த்யானம்

கட்கம் சக்ர கதேக்ஷு சாப பரிகான் சூலம் புசுண்டிம் சிர:

சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்

யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே

ஹரௌ

நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மகாகாளிகாம்.

தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுந்த தலை, சங்கு, போன்றவற்றை ஏந்தியருளும் மஹாதேவி  காளியே, தேவி மஹாத்மியத்தின் முதல் அத்தியாய பாராயண பலனைத் தருபவள். இந்த அம்பிகை பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள்  கொண்டு ஒளிவீசும் தேகத்துடன் திகழ்பவள். சர்வாலங்கார ரூபிணியாய தன் திருமுகங்களில் உள்ள கண்களால் கருணைமழை பொழியும்  இத்தேவியின் திருவருள் கிட்டிவிட்டால் உலகில் கிட்டாதது எதுவுமே இல்லை. இந்த தேவியை வணங்குபவர்கள் புரியும் தொழிலில் முனைப்பு,  ஊக்கம் எல்லாம் தாமே உண்டாகும். தன் பக்தர்களின் பாவங்களைப் போக்கி, அரவணைத்து நல்வழி காட்டுபவள் இந்த அம்பிகை. தன்னை  ஆராதிப்போருக்கு சுறுசுறுப்பு, திடபக்தி, செல்வவளம், முக்காலங்களையும் உணரும் திறன், நீண்ட ஆயுள் போன்றவற்றை அருள்பவள் இவள்.  வேதாந்தத்தின் முடிவான ஸத்ஸ்வரூபிணியும் இவளே. பக்தர்களை சகலவிதமான பயங்களிலிருந்தும் காத்தருளும் பகவதி இவள். விக்ரமாதித்தன்,  ராமகிருஷ்ணபரமஹம்ஸர் போன்றோர் காளியை உபாசித்தே பெயரும் புகழும் பெற்றது வரலாறு. மூச்சுக்காற்றையே காளியாக எண்ணி உபாசனை  செய்தால் மஹாகாளியின் திருவருள் சீக்கிரமே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம்.  

2ம் அத்தியாய தேவதை,

மஹாலக்ஷ்மீ த்யானம்

அக்ஷஸ்ரக் பரசும் கதேக்ஷூ குலிசம்

பத்மம் தனு : குண்டிகாம்

தண்டம் சக்தி மஸிஞ்ச சர்ம ஜலஜம்

கண்டாம் ஸுரா பாஜனம்

சூலம் பாச ஸுதர்சனே ச தததீம்

ஹஸ்தை: ப்ரவால ப்ரபாம்

ஸேவே ஸௌரிப மர்த்தினீ மிஹ

மஹாலக்ஷ்மீம் ஸரோஜஸ்திதாம்.

தேவி மஹாத்மியத்தின் 2வது அத்தியாய பாராயண பலனைத் தரும் தேவி இந்த மகாலட்சுமி. இவள் திருமகளின் நாயகியான திருமகள் அல்ல.  அனைத்துக்கும் ஆதியான சண்டிகா. மகாலட்சுமி, மகாகாளி, மகாசரஸ்வதி போன்றோரின் சரித்திரங்களை விளக்கும் உன்னதமான தேவி  மஹாத்மியத்தின் நடுநாயகமான தேவதை. அக்ஷமாலை, பரசு, கதை, அம்பு, குலிசம், தாமரை, வில், கமண்டலம், தண்டம், வேல், வாள், சங்கம்,  சர்மாயுதம், மணி, மதுபாத்திரம், சூலம், பாசம், சக்கரம் போன்ற ஆயுதங்களை தன் கர கமலங்களில் ஏந்தி அனவரதமும் தன் பக்தர்களைக் காப்பவள்.  மகிஷத்தின் மீது அமர்ந்த தாமரையில் நின்றருள்பவள். இவளுடைய கடைக்கண் பார்வை உலகியல் வாழ்வியல் ஆனந்தத்தையும் என்றும் மாறா  ஆத்மானந்தத்தையும் தரும். தெய்வ நம்பிக்கை கொண்டோரிடம் வாசம் செய்யும் தேவி இவள். இவளே ஞான வடிவினள். மஹிஷாசுரனின்  சைன்யத்தை வதைத்தருளியவள். அதே போல பக்தர்களின் துன்பங்களையும் வதைப்பவள். இத்தேவியை வழிபட பெருஞ்செல்வமும், பேரின்பமும்  கிட்டும்.

3ம் அத்தியாய தேவதை

திரிபுரபைரவி த்யானம்

உத்யத்பானு ஸஹஸ்ரகாந்திம் அருணக்ஷௌமாம் சிரோமாலிகாம்

ரக்தாலிப்த பயோதராம் ஜபவடீம் வித்யாமபீதிம் வரம்

ஹஸ்தாப்ஜைர் தததீம் த்ரிநேத்ரவிலஸத் வக்த்ராரவிந்தச்சியம்

தேவீம் பக்த ஹிமாம்சு ரத்னமுகுடாம் வந்தேரவிந்தஸ்திதாம்.

தேவி மஹாத்மியத்தின் மூன்றாவது அத்தியாய தேவதை இந்த திரிபுரபைரவி தேவி. இத்தேவி ஒரு கையில் அக்ஷமாலையையும் மறு கையில்  புஸ்தகத்தையும் மற்ற இரு கைகள் அபய வரதம் ஏந்தியும் திருக்காட்சி அளிக்கிறாள். இவள் அருள் பெற்றால் எல்லாமே கிடைக்கும். சகலவித  அலங்காரங்களோடு தோற்றமளிக்கும் இந்த அம்பிகை மண்டையோட்டு மாலையை தரித்துக் கொண்டிருப்பதேன்? மண்டையோட்டைப் பார்க்கும்  எவருக்குமே மரணபயம் தோன்றும். பைரவிதேவி ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவாக ம்ருத்யுஞ்ஜயையாக இருப்பவள். பக்தர்களின் மரணபயத்தைப்  போக்கவே அபயம் அளிக்கிறாள். ஆன்ம சக்தியை உணர்பவர்களுக்கு மரணபயமே இருக்காது என்பதை உணர்த்தவே மண்டையோடும் அதன் மேல்  காணப்படும் ரத்தமும்.இதனால் சாகா நிலையிலிருக்கும் உயிர்சக்தியளிப்பவள் தானே என்றும் காட்டுகிறாள். மூலாதாரத்தில் உபாசிக்கப்படுபவள்  பைரவி. ஆதாரம் பலமாக இருந்தால்தான் அதன் மேலுள்ளவைகளும் நிலையாக நிற்கமுடியும். எல்லாவற்றையும் தாங்கும் தேவியின் திருவருளால்  ஆரம்பம் தெய்வீக சக்தியுடனிருப்பின் முடிவும் தெய்வீகத்திலேயே சிறப்பாக முடியும். ஜாதவேதஸே எனும் வேத மந்திரத்தால் இத்தேவியைத் துதிக்க  கிரகபீடைகளிலிருந்து நிவாரணமும், தனலாபமும் சகல சம்பத்துகளும் கிட்டும். இவளின் அருட்கருணையால் எண்ணியது ஈடேறும்.  முக்காலங்களையும் உணரும் ஆற்றலையும் பெறலாம்.  மூன்றாவது அத்தியாய பாராயணபலனைத் தரும் தேவியும் இவளே. சிவந்த பட்டாடை  உடுத்தி, ஆயிரம் சூரிய பிரகாசத்துடன், முக்கண்களுடன், புன்முறுவல் பூத்த முகத்துடன் கூடிய திரிபுரபைரவி நம்மை கண்களை இமைகள் காப்பது  போல் காப்பாளாக!

4ம் அத்தியாய தேவதை

ஜெயதுர்க்கா த்யானம்

காலாப்ரபாம் கடாக்ஷைரரிகுல பயதாம்

மௌலிபத்தேந்து ரேகாம்

சங்கம் சக்ரம் க்ருபாணம் த்ரிசிகமபி கரை

ருத்வ ஹந்தீம் த்ரிநேத்ராம்

ஸிம்ஹஸ்கந்தாதிரூடாம் த்ரிபுவன மகிலம்

தேஜஸா பூரயந்தீம்

த்யாயேத் துர்க்காம் ஜயாக்யாம் த்ரிதசபரிவ்ருதாம்

ஸேவிதாம் ஸித்திகாமைஹி

தேவர்களும் அனைவரும் கூடி இந்த தேவியை துதித்து பேறு பெற்றனர். இத்தேவியின் மந்திரத்திற்கு பிரம்மதேவன் ரிஷியாவார். அன்னை  சிம்மவாஹினியாக காட்சிதருகின்றாள். சங்கு, சக்கரம், வாள், த்ரிசூலம் ஆகிய ஆயுதங்களோடு நான்கு கரங்களாலும் பக்தர்களைக் காத்தருள்கிறாள்.  அஷ்டமா சித்திகளையும் வேண்டும் பக்தர்களுக்கு அதை அருளும் அன்னை இவள். இத்தேவியின் மந்திரம் ரக்ஷாகரமானது. இந்த மந்திர  பாராயணபலனால் பக்தர்கள் தீவினைகள் நீங்கி இன்புறுகின்றனர். இத்தேவியின் மந்திரத்தில் துர்க்கே துர்க்கே என இருமுறை தேவியின் திருநாமம்  வருவதால் எத்தகைய கொடிய துன்பங்களும் பக்தரை விட்டு நீங்கும். இத்தேவியின் அருள் கிட்டிட எங்கும் எதிலும் வெற்றியே கிட்டும். விதியை  சரியாக்கும் அனுகிரகம் செய்யக்கூடிய சக்தியும் கிட்டும். தேவி மஹாத்மியத்தின் 4ம் அத்தியாய பாராயண பலனைத் தரும்

அம்பிகையும் இவளே.

5ம் அத்தியாய தேவதை மகாசரஸ்வதி

கண்டா சூல ஹலானி சங்க முஸலே சக்ரம் தனு: ஸாயகம்

ஹஸ்தாப்ஜைர் தததீம் கனாந்த விலஸச் சீதாம்சு துல்ய ப்ரபாம்

கௌரீ தேஹ ஸமுத்பவாம் த்ரிஜகதாம் ஆதார பூதாம் மஹா

பூர்வா மத்ர ஸரஸ்வதீம் அனுபஜே சும்பாதி தைத்யார்த்தினீம்

மணி, சூலம், உலக்கை, சங்கு, கலப்பை, சக்ரம், வில், அம்பு போன்ற திவ்யாயுதங்களை தன் கரங்களில் ஏந்திய இந்த மகாசரஸ்வதி தேவியே, தேவி  மஹாத்மியத்தின் ஐந்தாவது அத்தியாய பாராயணபலனைத் தருபவள். நல்லறிவு, செல்வங்கள் போன்ற உயர்ந்தவற்றை பக்தர் களுக்கு அளிப்பவள்.  ஐம், ஹ்ரீம், ஹ்ராம் என்ற பீஜ மந்திரங்களில் பிரியமுள்ளவள். ஞானமாகிய மடமையைப் போக்குபவள், மங்களங்களை வாரி வாரி வழங்குபவள்.  வழிபடுவோர் வாழ்வில் மகிழ்ச்சியை அளிப்பவள். பக்தர்களின் உள்ளத் தாமரையில் இந்த தேவியை ஏத்திப் பணிவோர்க்கு சகல கலைகளும்  சித்திக்கும். இத்தேவியின் அருள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும். உண்மையான பக்தர்களின் இதயத்தில் வாசம் செய்வதில்  விருப்பமுள்ளவள் இத்தேவி. பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளையும் சஞ்சலங்களையும் தேவியின் முகத்தில் காணப்படும் மாறா  புன்னகையே ஓட்டிவிடும். இவள் பல்வேறு விதமான தேவியரை தன் உடலிலிருந்து தோற்றுவித்து சும்ப-நிசும்பரை வதம் புரிந்தவள் பார்வதியின்  தேகத்திலிருந்து தோன்றிய கௌசிகி எனவும் இவள்

போற்றப்படுகிறாள்.

6ம் அத்தியாய தேவதை பத்மாவதீ த்யானம்

நாகாதீச்வர விஷ்டராம் பணிபணோத்

தம்ஸோரு ரத்னாவலீ

பாஸ்வத் தேஹலதாம் திவாகரநிபாம்

நேத்ர த்ரயோத் பாஸிதாம்

மாலா கும்ப கபால நீரஜ கராம்

சந்த்ரார்த்த சூடாம்பராம்

ஸர்வக்ஞேச்வர பைரவாங்க நிலயாம்

பத்மாவதீம் சிந்தயே.

தன்னை வணங்கும் பெண்களுக்கு குழந்தை வரம் தருவதில் நிகரற்றவள். ஜைன மதத்தினரால் போற்றப்படுபவள். யக்ஷிணீ தேவிகளுள் உபாசிக்கத்  தகுந்த தேவி இவள். நாகம் குடைபிடிக்க, முக்கண்கள்கொண்டு, கைகளில் சந்திரன், கபாலம், ஜபமாலை, கும்பம் ஏந்தி, நாய் வாகனத்தோடுகூடிய  பைரவரின் தோள்களின் மீது ஆரோகணித்திருப்பவள். சர்வாலங்காரங்களுடன் நான் இருக்க பயமேன் என்று கேட்கும் தோரணையில் திருக்கோலம்  கொண்டுள்ளாள். கர்நாடகத்தில் பத்மாவதி வழிபாடு பிரசித்தி பெற்றது. ஆவணி மாத வெள்ளிக்கிழமைகளிலும் மூல நட்சத்திர தினத்தன்றும் பக்தர்கள்  இவள் திருவுருமுன் தங்கள் கோரிக்கைகளை மனதால் நினைத்து வேண்டி நிற்க, தேவி தன் உடலிலிருந்து பூவைத் தள்ளி உத்தரவு தரும் அற்புதம்  இன்றும் நிகழ்கிறது. பைரவரோடு கூடிய இந்த பத்மாவதி, தேவி மஹாத்மியத்தில் தூம்ரலோசனனை அழித்த ஆறாம் அத்தியாயத்தின் தேவதையாக  கொண்டாடப்படுகிறாள். தேவி மஹாத்மியத்தின் ஆறாவது அத்தியாய பாராயண பலனைத் தருபவளும் இவளே.

7ம் அத்தியாய தேவதை மாதங்கி த்யானம்

த்யாயேயம் ரத்னபீட சுககலபடிதம்

ச்ருண்வதீம் ச்யாமலாங்கீம்

ந்யஸ்தை காங்க்ரீம் ஸரோஜே

சசி சகலதராம் வல்லகீம் வாதயந்தீம்

கஹ்லாரா பத்தமாலாம் நியமித

விலஸச் சோலிகாம் ரக்த வஸ்த்ராம்

மாதங்கீம் சங்கபாத்ராம் மதுர மதுமதாம்

சித்ரகோத் பாஸிபாலாம்.

தேவி மஹாத்மியத்தின் ஏழாவது அத்தியாய தேவதையாக மாதங்கி போற்றப்படுகிறாள். மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக  அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள். எப்பொதும் தவழும் புன்முறுவலுடன், சற்றே சுழன்று மயக்கும் விழியுடையவளாக இவள்  துலங்குகிறாள். கதம்ப மலர்கள் தேவியின் கூந்தலை அலங்கரிக்கும் பேறு பெற்றன. மடியில் வீணையை வைத்துக் கொண்டு தன் இரு கரங்களால்  அதை இசைத்தும், தோள்களில் கொஞ்சும் கிளியையும் ஏந்தி அருட்கோலம் காட்டும் அன்னை இவள். சர்வாலங்கார பூஷிதையாய் தேவி  வீற்றிருக்கிறாள். மரகதமணியின் நிறத்தைப் போன்று ஜொலிக்கும் பச்சை மேனியவள். இத்தேவியின் வழிபாட்டில் உலக இன்பங்கள்  துறக்கப்படுவதில்லை. ஆனால், உலகியல் என்ற சகதியிலும் உபாசகன் வீழ்ந்து விடுவதில்லை. மித மிஞ்சிய செல்வமும், ஞானமும், நல்ல புகழும்,  முக்தியும் தரவல்ல மதங்க முனிவரின் மகளான மாதங்கி அடியவரைக் காப்பாள்.

8ம் அத்தியாய தேவதை பவானி த்யானம்

அருணாம் கருணாரதங்கி தாக்ஷீம்

த்ருத பாசாங்குச புஷ்பபாண சாபாம்

அணிமாதி பிராவ்ருதாம் மயூகை:

ரஹமித்யேவ விபாவயே பவானீம்

தேவி மஹாத்மியத்தின் எட்டாம் அத்தியாய பலனைத் தரும் தேவி இவள். ஆதிசங்கரர் தன் ஸௌந்தர்யலஹரியில் 22ம் ஸ்லோகத்தில் பவானி  என்னும் லலிதையின் அம்சமான தேவியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். பவானி என்று சொல்லும்போதே மும்மூர்த்திகளுக்கும் கிட்டாத  ஐஸ்வர்யங்களையும், அதற்கு மேலான ஜீவன்முக்தியையும் அருள்வாள் எனக் குறிப்பிட்டுள்ளார். அணிமா, லகிமா முதலிய எட்டு வித சித்தி  தேவதைகளால் சதா வணங்கப்படுபவள் இவள். தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், கரும்புவில், புஷ்பபாணங்களேந்தி லலிதாம்பிகையைப்  போன்றே தோற்றப்பொலிவு கொண்டவள். அன்பர்களை அனவரதமும் அரவணைத்துக் காப்பவள். காஞ்சி மகாசுவாமிகள் திருமணவரம் வேண்டி நிற்கும்  கன்னியர்களுக்கு பவானி தேவியை பூஜிக்கும்படி அருள்வாக்குரைப்பார். திருமணவரம் தேவியாகவும் இவள் திருவருள் புரிகிறாள்.

9ம் அத்தியாய தேவதை

அர்த்தாம்பிகா த்யானம்

பந்தூக காஞ்சநிபம் ருசிராக்ஷமாலாம்

பாசாங்குசௌ ச வரதாம் நிஜபாஹு தண்டை:

பிப்ராணமிந்து சகலாபரணம் த்ரிநேத்ர

மர்த்தாம்பிகேசமனிசம் வபுரார்ச்ரயாமி

தேவி மஹாத்மியத்தின் 9ம் அத்தியாயத்தின் அதி தேவதை இந்த அர்த்தாம்பிகா. அந்த அத்தியாயத்தின் பாராயணபலனைத் தருபவளும் இவளே.  சிவனும், சக்தியும், ஐக்கியமான திருவுருவம், அன்பே சிவம் அருளே சக்தி என்போம். சிவனும் சக்தியும் ஒன்றாய் இணைந்திருப்பது பேரின்பமும்,  பேரருளும் ஒன்றாக இருப்பதை உணர்த்தவே. உலகங்களைக் காக்க சிவனும் சக்தியும் ஒன்றாக இணைந்த கோலமே அர்த்தநாரீஸ்வரர். நிலை  சக்தியான ஈசன் பகவதியான தேவியின் திருவருளால் இயக்க சக்தியாகவும் பரிணமிக்கிறான்.ஒரு பெரும் வியாபார நிறுவனத்திற்கு நிலையான  மூலதனம் தேவை. அந்நிறுவனத்தை இயக்க தகுதி வாய்ந்த நபர்களும் தேவைப்படுகின்றனர். இதனை ஆங்கிலத்தில் ஸ்டாடிக் அண்ட் டைனமிக் பவர்  எனலாம். இயல்பானதும் (பாஸிடிவ் எதிரானதும் (நெகடிவ்)  ஆன இரட்டை சக்திகள் கலந்தே உலகை இயக்குகின்றன என்ற கருத்தையும்  உணரவேண்டும்.நமது லட்சியங்களை பூர்த்தி செய்ய உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதன்படி முறையாக  செயல்பட்டால் நல்ல விளைவுகள் ஏற்படும். அதற்கு அன்பும் அருளும் கலந்த அர்த்த நாரீஸ்வரராம் சிவசக்தியின் அருள் நமக்குத் துணை செய்யும்.  அதுமட்டுமல்ல சிவனும், சக்தியும் ஒன்றாய் கலந்துள்ளவாறே நாமும் இப்பிறவியின் முடிவில் இறைவனுடன் ஒன்று கலக்க வேண்டும் என்பதையே  அன்பேசிவமாய், அருளே சக்தியாய் உள்ள தேவியின் அர்த்தாம்பிகா திருவுரு உணர்த்துகிறது.

10ம் அத்தியாய தேவதை காமேஸ்வரி த்யானம்

உத்தப்த ஹேம ருசிராம் ரவி சந்த்ர வஹ்னி நேத்ராம்

தனு: சர யுதாங்குச பாச சூலம்

ரம்யைர் புஜைச்ச தததீம் சிவசக்தி ரூபாம்

காமேஸ்வரீம் ஹ்ருதி பஜாமி த்ருதேந்து லேகாம்.

காம எனில் விரும்பிய வடிவத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்யனைப் போன்று ஜொலிக்கும்  நிறத்தை உடையவள்.  மாணிக்க மகுடம் தரித்து பொன்னால் வேயப்பட்ட மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள்.  முக்கண்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் வில், அம்பு, பாசக்கயிறு, அங்குசம், சாத்தி வைக்கப்பட்ட சூலம் போன்றவற்றை  தரித்தவள். ரத்னகற்கள் இழைக்கப்பட்ட கிரீடத்தை அணிந்த திருமுடியோடு  பொலிபவள். கேட்கும் வரங்களை வாரி வழங்கும் பரம கருணாமூர்த்தினி  இந்த காமேஸ்வரி. ஹயக்ரீவரால் அகத்தியருக்கும், லோபாமுத்திரைக்கும் உபதேசிக்கப்பட்ட மகாமந்திரமான லலிதா த்ரிசதியில் காமேஸ்வரரின்  ப்ராணநாடியே இந்த காமேஸ்வரிதான் எனக் கூறப்பட்டுள்ளதிலிருந்தே இவளின் மகிமை விளங்கும். காமேஸ்வரரின் இடது மடி மீது அமர்ந்தருள்பவள்.  சக்ரத்தின் பிந்துஸ்தானம் எனப்படும் மையப்புள்ளியில் பரமனோடு இணைந்து இந்த உலகை பரிபாலனம் செய்பவள். வாழ்வின் ஆனந்தத்திற்கும்,  தன வரவிற்கும் இந்த அம்பிகையின் உபாசனை பேருதவி செய்யும். மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கையும் இந்த காமேஸ்வரியின் திருவருளால்  கிட்டும். தேவி மஹாத்மியத்தின் 10ம் அத்தியாய பாராயண பலனைத் தரும் அம்பிகை இவள்.

11ம் அத்தியாய தேவதை புவனேஸ்வரி த்யானம்

பால ரவித்யுதிம் இந்து கிரீடாம்

துங்ககுசாம் நயனத்ரயயுக்தாம்

ஸ்மேரமுகீம் வரதாங்குச பாசாபீதிகராம்

ப்ரபஜே புவனேஸீம்.

சகல புவனங்களையும் நிர்மாணித்து வழிநடத்தும் புவனேஸ்வரி, தேவி மஹாத்மியத்தின் பதினோராவது அத்தியாயத்தின் அதிதேவதை.

காலமாக விரிந்தவள் காளி. இடமாக விரிந்தவள் புவனேஸ்வரி. கால வெள்ளத்தில் புவனவெளிகளை பூக்கச் செய்தவள் இவளே. இந்த அம்பிகையின்  பீஜம் ஹ்ரீம். இந்த பீஜம் இல்லாத மந்திரமே இல்லை. இவள் சூரியனைப்போல் பிரகாசிப்பவள். சந்திரப்பிறை போல ஒளிரும் கிரீடமணிந்தவள்.  நிமிர்ந்த மார்பகங்களுடனும், முக்கண்களோடும் கூடியவள். புன்சிரிப்பு தவழும் முகம் உடையவள். இடது கீழ், மேல் கரங்களில் வரமுத்திரையையும்,  பாசத்தையும், வலது கீழ், மேல் கரங்களில் அபயமுத்திரையையும், அங்குசத்தையும் தரிப்பவள். செந்தாமரை மலர், அன்னையின் திருவடிகளைத்  தாங்குகிறது.

பயம் வந்தால் அதைப் போக்க நான் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதை அபய முத்திரையால் அறிவிக்கிறாள் அன்னை. அதை நினைத்த  மாத்திரத்திலேயே சம்சார சூழலில் அகப்படும் பெரிய ஆபத்தினின்றும் விடுபடமுடியும். பிறவித்துன்பமே தொலைந்து விடுகிறது.

பக்தர்களின் இதயத்தில் சுகமாய் வீற்று அருள்பவள். புன்சிரிப்பு தவழும் திருமுகமண்டலம் உடையவள். எல்லாவிதமான ஆபரணங்களாலும்  அலங்கரிக்கப் பட்டவள். மங்களகர மானவள். சங்கநிதி, பத்மநிதி போன்றவற்றால் வணங்கப்படும் திருவடிகளை உடையவள். உலகின் மூலமானவள்  இந்த தேவி.

12ம் அத்தியாய தேவதை அக்னிதுர்க்கா த்யானம்

வித்யுத்தாம ஸமப்ரபாம் ம்ருகபதி

ஸ்கந்தஸ்திதாம் பீஷணாம்

கன்யாபி: கரவால கேட விலஸத்

தஸ்தாபிரா ஸேவிதாம்

ஹஸ்தைச் சக்ர கதாஸி கேட விசிகாம்ச்

சாபம் குணம் தர்ஜனீம்

பிப்ராணா மனலாத்மிகாம் சசிதராம்

துர்க்காம் த்ரிநேத்ராம் பஜே

நன்மைகள் செய்யும் போது லட்சுமியாக அதை பெருகச் செய்பவள் இத்தேவி. நம் வினையின் பயனாக நேரம் மோசமானால் லட்சுமியாகி செல்வத்தை  அழிப்பதும் இவளே. தேவி மஹாத்மியத்தின் 12வது அத்தியாய பாராயணபலனைத் தருவதோடு சரிதம் கேட்ட புண்ணிய பலனையும் தந்தருளும்  பராபரை இந்த அக்னிதுர்க்கா. இவளே ஜாதவேதோ துர்க்கை. இவளை வணங்குவோரின் மாயையை அழித்து ஞானத்தை அருள்பவள். யாக  திரவியங்களை தன்னுள் ஏற்று அவற்றைப் பரிசுத்தமாக்கி அங்கும் அக்னி வடிவாய் அருள்பவள். நம் உடலில் அக்னி சக்தியாகத் திகழ்ந்து நாம்  உண்ணும் உணவை ஆகுதியாக ஏற்று அதை ஜீரணம் செய்பவளும் இவளே. இத்தேவியின் அருள் நின்று போன கட்டிட வேலைகளை முடித்துத்  தரும். நோய்களிலிருந்து நிவாரணம் தரும். முன்னோர்கள் சாபம் தீர்க்கும். நல்ல நினைவாற்றலைத் தரும் என புராணங்கள் கூறுகின்றன.

13ம் அத்தியாய தேவதை சிவா

பாலார்க்க மண்டலாபாசாம்

சதுர்பாஹும் த்ரிலோசனாம்

பாசாங்குச வராபீதீர்

தாரயந்தீம் சிவாம் பஜே

சிவா எனில் மங்களம் என்று பொருள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வாரி வாரி மங்களங்களை வழங்கிடும் தேவி இவள். இந்த அம்பிகையே தேவி  மஹாத்மியத்தின் 13ம் அத்தியாய பாராயண பலனை தருபவள். பூவின் வாசனை போல, அம்ருதத்திலே சுவை போல, அக்னியின் பிரகாசம் போல,  இந்த அம்பிகையும் ஈசனுடன் இரண்டறக் கலந்தவள். காலாக்னி ருத்ரனான ஈசன் நெற்றிக் கண்ணைத் திறந்து உலகங்களை எரிக்கும்போது சமயா  என பெயர் பெற்று தன் குளிர்ந்த பார்வையால் புவனங்களைக் குளிரச் செய்து தழைக்கச் செய்பவள். கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற மூன்று  புண்ணிய நதிகளின் சங்கமம் போன்று விளங்கும் இந்த அம்பிகையின் முக்கண்களையும் தியானித்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிட்டும்.  பாவங்கள் பறந்தோடும். சரஸ்வதியை வசியமாக்கிக் கல்வியையும், மகாலட்சுமியை வசியமாக்கி செல்வத்தையும் எவரும் வசப்படுத்தலாம். ஆனால்  மனோ வாக்கிற்கெட்டாத பரதேவதையான அம்பிகையை எவரும் வசப்படுத்திக் கொள்ள முடியாது. அவள் பரமசிவன் ஒருவருக்கே வசப்பட்டவள்.  அதனாலேயே அவள் சிவா எனப்படுகிறாள்.தேவியின் திருவடிகளை தரிசித்து, சதா சர்வகாலமும் அவளை தியானித்தலுமே பிறவிப்பயன். தேவி  மஹாத்மியத்தின் 13வது அத்தியாய தேவதையாக போற்றப்படுபவளும் இந்த சிவாவேதான்.

Related Stories: