×

விண்ணகத்தில் செல்வராய் இருப்பவர் யார்?

கிறிஸ்தவம் காட்டும் பாதை

‘‘மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளுக்கு அப்படியல்ல கடவுளால் எல்லாம் இயலும்’’. (மாற்கு 10 : 27) இயேசு புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்தபோது இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வந்தர் ஒருவர் இயேசுவிடம் ஓடி வந்து முழந்தாள் இட்டு, ‘‘நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’’ என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு உமக்கு கட்டளைகள் தெரியும். அல்லவா என்றுக் கேட்டு, ‘‘கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சான்று சொல்லாதே, வஞ்சித்துப் பறிக்காதே, உன் தாய் தந்தையை மதித்து நட’’ என்றார். (மாற்கு 10 : 19)

அதற்கு அந்த செல்வந்தரான இளைஞர், இயேசுவிடம், ‘‘போதகரே இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைபிடித்து வந்துள்ளேன்’’ என்று கூறினார். இதைக்கேட்ட இயேசு அவரை நோக்கி, ‘‘உமக்கு இன்னும் ஒன்று குறைப்படுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும், அப்போது விண்ணகத்தில் நீர் செல்வந்தவராய் இருப்பாய். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்’’ என்று கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இதைக் கண்ட இயேசு தம் சீடரிடம், செல்வந்தர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்’’ என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டு திகைப்படைந்தனர். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து,  ‘‘பிள்ளைகளே, செல்வந்தர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’’ என்றார். (மாற்கு 10: 24  25)

இதற்கு சீடர்கள் மிகவும் வியப்படைந்து, ‘‘பின் யார் தாம் மீட்புப் பெற முடியும்?’’ என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ‘‘மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் ’’ என்றார்.அப்போது பேதுரு ஆண்டவரிடம், ‘‘பாரும் நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே’’ என்று சொன்னார். அதற்கு இயேசு அவர்களிடம், உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும், வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக இழந்த அனைத்தையும் பெறுவர். மேலும் இவற்றோடு நிலைவாழ்வையும் பெறுவர். ‘‘முதன்மையானோர் பலர் கடைசி ஆவர். கடைசியானோர் முதன்மை ஆவர்’’ என்று அழகாய் கூறி முடித்தார்.

 எனவே நாமும் பல நேரங்களில் ஆண்டவருடைய வார்த்தையை நாடாமல் நம் நேரத்தை வீணாகச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். மண்ணுல வாழ்க்கையை விட விண்ணுல வாழ்க்கையே அழியாதது. மண்ணுல வாழ்க்கையில் ஆண்டவரது வார்த்தையை கடைபிடித்து வாழும் போது விண்ணுலக வாழ்க்கையில் நாம் ஆண்டவரது அரியணையில் அவரது மடியில் வீற்றிருப்போம் என்பதை அறிந்து செயல்படுவோம்! வாழ்வடைவோம்!

- ஜெரால்டின் ஜெனிபர்

Tags : heaven ,
× RELATED பண்டிகை கொண்டாட கரும்புடன் வந்தவர் மின்சாரம் பாய்ந்து பலி