×

கவச அத்தியாயங்கள்..!

இஸ்லாமிய வாழ்வியல்

எல்லாவகையான துன்பங்கள், கண்ணேறுகள், நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்குத் திருக்குர்ஆனிலுள்ள இறுதி இரண்டு அத்தியாயங்களை (அத்.113, 114) ஓதிவரும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.ஓதுவதற்கு மிக எளிமையான மிகச்சிறிய அத்தியாயங்கள் இவை. ஆனால் பாதுகாப்பு அளிப்பதில் இந்த இரண்டு அத்தியாயங்களும் சிறந்து விளங்குவதால் இவை ‘கவச அத்தியாயங்கள்’ என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.நபிகளாரின் ஆருயிர்த் தோழர்களில் ஒருவரான உக்பா பின் ஆமிர் என்பவர் கூறுகிறார்:“இறைத்தூதர் அவர்களுடன் நான் நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது நபிகளார் என்னைப் பார்த்து, “உக்பா, நீ ஓது” என்று கட்டளையிட்டார்கள். “இறைத்தூதர் அவர்களே, எதை ஓதுவது?” என்று கேட்டேன். நபிகளார் அமைதியாக இருந்தார்கள்.

சற்றுநேரம் கழித்து மீண்டும் நபிகளார், “உக்பா நீ ஓது” என்றார்கள்.“இறைவனின் தூதரே, என்ன ஓத வேண்டும்?” என்று கேட்டேன். நபிகளார் அமைதியாக இருந்தார்கள். நான் என் மனத்திற்குள்,‘இறைவா, எதை ஓத வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதை அவர் என்னிடம் சொல்ல வேண்டும்’ என்று பிரார்த்தித்தேன்.மீண்டும் நபிகளார் என்னிடம் ‘உக்பா நீ ஓது’ என்றார்.“எதை ஓதுவது” என்று கேட்டேன். ‘குல் அவூது பிரப்பில் ஃபலக் எனும் (113ஆம் அத்தியாயத்தை) ஓது” என்றார்கள். நான் அந்த அத்தியாயத்தைக் கடைசிவரை ஓதினேன். நபிகளார் மீண்டும் என்னைப் பார்த்து, “உக்பா நீ ஓது” என்று கூறினார். “இறைவனின் தூதரே, எதை ஓதுவது? என்று கேட்டேன்.அதற்கு அவர், “குல்அவூது பிரப்பின்னாஸ்(எனும் 114ஆம் அத்தியாயத்தை) ஓது” என்று கூற, நான் அந்த அத்தியாயத்தைக் கடைசிவரை ஓதினேன்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இந்த இரண்டு அத்தியாயங்களை(113, 114) போன்றதைக் கொண்டு இறைவனிடம் யாரும் கேட்டுவிடுவதில்லை. இந்த இரண்டைப் போன்றதைக் கொண்டு யாரும் அவனிடம் பாதுகாப்பு தேடிவிடுவதில்லை.” (ஆதாரம்: நஸாயீ)அதாவது இறைவனிடம் கேட்பதற்கு இந்த இரண்டு அத்தியாயங்களைவிட சிறந்தது எதுவும் இல்லை. இறைவனிடம் பாதுகாப்புக் கோருவதற்கு இந்த இரண்டு அத்தியாயங்களைவிட உயர்ந்தது வேறு எதுவும் இல்லை.தோழர் உக்பாவின் மனத்தில் இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் பதிய வைப்பதற்காகவே நபிகளார் இரண்டு மூன்று முறை “உக்பா நீ ஓது” என்று கூறினார்கள்.ஒருவர் உறங்கச் செல்வதற்கு முன்பாக இந்த இரண்டு அத்தியாயங்களையும் ஓதிவருவாரேயானால் அவருக்கு இறைவனிடமிருந்து அனைத்து வகையான பாதுகாப்பும் கிடைக்கும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அறிவுறுத்தியுள்ளார்கள்.

- சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்