வெற்றியை அருள்வார் ஜெயந்தீஸ்வரர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ளது தாழக்குடி. இங்கு அழகேஸ்வரியுடன் அமர்ந்து அருட்பாலிக்கிறார் ஜெயந்தீஸ்வரர்.

தேவேந்திரனுக்கு  சாச்சி தேவி என்கிற மனைவி மூலம் ஜெயந்தன் மகனாக பிறந்தான். நற்குணங்களைப் பெற்ற சாச்சி தேவியின் மகனான ஜெயந்தன், தேவலோக கன்னியர்களுடன் கேளிக்கைகளில் மூழ்கிக் கிடந்தான்.

ஒருமுறை வனவாசத்தில் இருந்த ராமர்- சீதை இருவரும் தமது பரிவாரங்களுடன் சித்ரகுடா எனும் இடத்தில் தங்கி இருந்தார்கள். அப்போது ராமபிரான்  களைப்பில் சீதாபிராட்டியின் மடியில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். சீதா பிராட்டியோ கண் அயர்ந்து தூங்கும் கணவனை விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்நேரம் அவ்விடம் வந்த ஜெயந்தன் காகம் உருக் கொண்டு, சீதா பிராட்டியின் தோளில் வந்து அமர்ந்து கொண்டு அவள் மார்பில் நிறைந்த துகிலை தனது அலகால் விலக்கி கண்ணுற்றான்.

காகத்தின் சீண்டலில் சினம் கொண்ட சீதா தேவி, ஜெய் ஸ்ரீராம் என்று நாமம் கூறி சிந்தை தெளிந்தாள். வந்தது ஜெயந்தன் என அறிந்தாள். வார்த்தைகளை வேகமாக உதிர்த்தாள். அந்த சத்தத்தில் தூக்கம் தெளிந்து எழுந்தார் ராமபிரான். காகம் உருக்கொண்டிருந்த இந்திரன் மகன் ஜெயந்தன் மீது பிரும்மாஸ்திரத்தை ஏவினார். அந்த பிரும்மாஸ்திரம்  ஜெயந்தனின் வலது கண்ணை குத்தி எடுத்து விட்டு   திரும்பியது. இதனால் ஜெயந்தன் வலது கண்ணை இழந்தான். வலது கண்ணை இழந்த ஜெயந்தன், மீண்டும் கண் பார்வை பெறவும் தன் பாவம் போக்கவும் வேண்டி, தாழக்குடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அதன் பயனாக சாபவிமோசனம் பெற்றான்.

ஜெயந்தன் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால், இத்தல மூலவர் ஜெயந்தீஸ்வரர் என வணங்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வீரகேரளன் என்ற அரசன் இருந்தான். அவன் வேணாட்டு மரபைச் சேர்ந்தவன். அவன் பலநாட்கள் குழந்தையின்றி வருந்தியபோது அகத்தியர் அவனது கனவில் தோன்றி தாடகை மலையின் தென்மேற்கு அடிவாரத்திலுள்ள தாழக்குடி ஊரில் குடிக்கொண்டிருக்கும் ஜெயந்தீஸ்வரருக்கு கோயில் எடுக்கக்கூறினார். அவனும் அப்படியே செய்தான். இதன் காரணமாக அந்தக் குறை நீங்கினான். இங்கே ஒரு குளமும் வெட்டினான். இது வீரகேரளப் பேரேரி என அழைக்கப்படுகிறது.

இத்தல இறைவனை வழிபடுவோர் வாழ்வில் எல்லா வகையிலும் வெற்றிகளை பெறுகிறார்கள். மேலும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் வந்து வேண்டினால் அக்குறைகளிலிருந்து நிவர்த்தி பெறலாம். குழந்தை வரமும் வழங்குகிறார் ஜெயந்தீஸ்வரர். இக்கோயில் முகப்பு மண்டபம் கேரளபாணியில் அமைந்து ஓடு வேயப்பட்டது. இரண்டு பிராகாரங்கள் உள்ளன. கருவறையின் வலப்புறம் அம்பாளுக்குத் தனிக்கோயில் அமையப்பெற்றுள்ளது. அம்மை அழகம்மன் என அழைக்கப்படுகிறாள். சுவாமியின் இடதுபுறம் தேவியை அமைப்பது வழக்கம். ஆனால் பாண்டிய நாட்டு மரபின்படி அம்மன் வலதுபுறம் இருக்கிறாள். அம்மன் நின்ற கோலம்.

கருவறைச் சுற்றில் தென்திசையில் தட்சிணாமூர்த்தி, வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், பிராகாரத்தின் வடக்கே சனீஸ்வரர், யாகசாலையை அடுத்து நடராஜர், காலபைரவர், சந்திரன் ஆகியோர் அமைந்து அருள்கின்றனர். நமசிவாய மண்டபத்தில் காகம், சிவனை வழிபடும் சிற்பம் உள்ளது. இது தலவரலாறு தொடர்பானது. சிவனை யானை வழிபடும் சிற்பம், ஜராவதம் சிவனை வழிபட்ட வரலாறு தொடர்புடையது. தாழக்குடி ஊர் மிகவும் பழைமையானதாக கி.பி. 1161- ஆம் ஆண்டு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக்கோயில் நாகர்கோவிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தாழக்குடியில் அமைந்துள்ளது.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related Stories: