துபாய்: துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸ் கார் ரேஸில், அஜித்குமார் ரேஸிங் டீம் 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து அஜித் குமாருக்கு விளையாட்டு துறையினர் மற்றும் திரைப்பட, அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பல வருட இடைவெளிக்கு பிறகு அஜித் குமார் துபாயில் இருக்கும் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு விரிவான பேட்டி அளித்தார். அது வருமாறு: எனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிடிக்கும் என்பதால், அடிக்கடி அதிக தூரம் பயணம் செய்வதை எப்போதும் நான் விரும்புவேன். இதுபோன்ற விஷயங்கள் என்னை பெரிதும் உற்சாகப்படுத்தும். என் வேலையை புத்துணர்ச்சியுடன் தொடர இதையெல்லாம் ரீசார்ஜ் செய்யும். நான் எனது குழந்தைகளிடம் கல்வி கற்க சொல்வேன். தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள சொல்வேன். பயணம் செய்வது வாழ்க்கையில் மிகவும் முக்கிய விஷயம்.
இன்றைய தேதியில் சமூக வலைதளங்களில் நச்சுத்தன்மை நிரம்பி இருக்கிறது. இன்று உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு மென்டல் ஹெல்த் ஒரு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. அவர்களின் மென்டல் ஹெல்த்தை அவர்கள் இழக்கிறார்கள். சிக்ஸ்பேக்ஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை தாண்டி, மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பலபேர் அதை இழக்கிறார்கள். வாழ்க்கை மிகவும் சிறியது என்று என் ரசிகர்களுக்கு சொல்வேன். `எண்ணம் போல் வாழ்க்கை’ என்ற கூற்று இருக்கிறது. நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்களோ, அதுவே உங்கள் வாழ்க்கை என்பதுதான் இதற்கு அர்த்தம்.
உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். உங்கள் லட்சியங்களை அடைய, உங்கள் திறமையை அதற்கேற்ப வளர்த்துக்கொள்ளுங்கள். என் ரசிகர்களே, படத்தை பாருங்கள். `அஜித் வாழ்க, விஜய் வாழ்க’ என்று கோஷம் போடுகிறீர்கள். நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்? நான் உங்கள் அன்புக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். முதலில் உங்கள் வாழ்க்கையை கவனியுங்கள். என் ரசிகர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது, இன்னும் நான் அதிக மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அஜித் குமார் கூறினார். அவரது பேட்டி வைரலாகி வருகிறது.