சென்னையில் ஆர்கிடெக்ட்டாக நித்யா மேனன், பெங்களூருவில் கட்டிடக்கலை பொறியாளராக ரவி மோகன் பணியாற்றுகின்றனர். குழந்தை வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் நித்யா மேனன், நிச்சயம் செய்யப்பட்ட ஜான் கொக்கேனை விட்டு பிரியும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. பெங்களூருவில் தற்செயலாக ரவி மோகனை சந்திக்கிறார். நேரெதிர் குணம் கொண்ட அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை. ‘சமூகத்துக்கு பயப்படாமல், சுயபுத்தியுடன் துணிந்து நட’ என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ள இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் துணிச்சலுக்கு பாராட்டு. கத்தி மேல் நடக்கக்கூடிய கதையை கலகலப்பாக, கமர்ஷியலாக, நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். காதலனால் ஏமாற்றம் அடைந்து துடிக்கும் நித்யா மேனன் எடுக்கும் தைரியமான முடிவு, அவரது கேரக்டரை உச்சத்தில் வைக்கிறது.
வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து மாறும் ரவி மோகன், இயல்பான நடிப்பில் இதயத்தை தொடுகிறார். தன்பாலின ஈர்ப்பாளராக விநய் ராய் துணிச்சலாக நடித்துள்ளார். யோகி பாபு சிரிக்க வைக்கிறார். டிஜே பானு பார்வையாலேயே வசீகரிக்கிறார். ரவி மோகனின் தந்தையாக லால், நித்யா மேனனின் பெற்றோராக பாடகர் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், சித்தியாக வினோதினி வைத்தியநாதன், மாஸ்டர் ரொஹான் சிங் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரியின் கேமரா, காட்சிகளை இயல்பாக படமாக்கியுள்ளது. லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் கச்சிதம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம். முற்போக்கு சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ள படம் இது.