கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில், திடீரென்று கடுமையான காட்டுத்தீ பரவியது. இதில் பலத்த உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்ததுடன், காட்டுத்தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பாலிவுட் முன்னணி நடிகை பிரீத்தி ஜிந்தா, அதுபற்றிய பதிவை வெளியிட்டுள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்து வரும் அவர், மணிரத்னத்தின் ‘உயிரே’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர்.
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற அவர், காட்டுத்தீ பரவலை நேரில் பார்த்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘நாங்கள் இருந்த பகுதிக்கு மிக அருகிலேயே காட்டுத்தீ மளமளவென்று பரவியது. நாளை என்ற ஒரு நாளை மீண்டும் நான் பார்ப்பேனா என்று என் மனதிற்குள் அச்சம் தோன்றியது. எனது நண்பர்களும், அருகில் இருந்த குடும்பத்தினரும் சாம்பலின் தாக்கம், புகை ஆகியவற்றில் இருந்து தப்பிக்க அங்குமிங்கும் ஓடினர்.
குழந்தைகளும், பெரியவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டனர். காற்று அமைதியாக இல்லாமல் பலமாக வீசி, காட்டுத்தீயை தீவிரப்படுத்தியது. இதையெல்லாம் பார்த்து நான் மனமுடைந்து விட்டேன். எனினும், தற்போது நாங்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்’ என்றார். அவரது பதிவை படித்த ரசிகர்களும், நெட்டிசன்களும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.