தெலுங்கில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்ஜர்’ படம் கடந்த 10ம் தேதியும், பாலகிருஷ்ணா நடித்த ‘டாக்கு மகராஜ்’ படம் கடந்த 12ம் தேதியும் திரைக்கு வந்தது. வெங்கடேஷ் நடித்த ‘சங்கராந்திகி வஸ்துனம்’ படம் நாளை ரிலீசாகிறது. அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஹீரோயின்களாக மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.
இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்ற வெங்கடேஷ், ‘ஒரு காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் எனது கன்னத்தில் மாறி, மாறி அறைய வேண்டும். ஆனால், எதிர்பாராவிதமாக அவர் கொஞ்சம் வேகமாகவே அறைந்துவிட்டார். இதனால், ஓரிரு நாட்கள் என் கன்னத்தில் ஏற்பட்ட வலி நீடித்தது’ என்றார். இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘அவரை நான் ரொம்ப மெதுவாகத்தான் அடித்தேன்.
அப்போது அவரிடம் நான், ‘உங்களுக்கு வலிக்கவே இல்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘இன்னும் கொஞ்சம் வேகமாக அடி’ என்று சொன்னார். அவரே இப்படி சொன்னதால், துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவரது கன்னத்தில் மாறி, மாறி அறைந்தேன்’ என்றார். பிறகு வெங்கடேஷிடம் அவர், ‘இதுவரை நீங்கள் யாரிடமாவது கன்னத்தில் பளாரென்று அறை வாங்கியிருக்கிறீர்களா?’ என்று கேட்டார். இதற்கு பதிலளித்த வெங்கடேஷ், ‘உங்களிடம் அறை வாங்கினேனே, இதுதான் முதல்முறை’ என்றார்.