×

வி ம ர் ச ன ம்

சென்னையில் வசித்து வரும் ஷேன் நிகாம், தனது காதலி நிஹாரிகாவை திருமணம் செய்ய, தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வருகிறார். திருமணத்துக்கு முன்பு நிஹாரிகாவை பார்க்க கார் ஓட்டிக் கொண்டு செல்லும் ஷேன் நிகாம், நிறைமாத கர்ப்பிணி ஐஸ்வர்யா தத்தா மீது ேமாதிவிடுகிறார். ஏற்கனவே ஷேன் நிகாமுடன் பகை ஏற்பட்ட வெறியில் இருக்கும் கலையரசனின் மனைவிதான் ஐஸ்வர்யா தத்தா. மருத்துவமனையில் உயிருக்கு போராடும் தனது மனைவிக்காக பகை தீர்க்க அலையும் கலையரசன், குழந்தை இறந்ததை அறிந்து துடிக்கிறார். பதிலுக்கு ேஷன் நிகாம் மற்றும் குடும்பத்தை அழிக்க கிளம்பும் கலையரசன், இறுதியில் என்ன ஆனார்? ஷேன் நிகாம், நிஹாரிகாவின் திருமணம் நடந்ததா என்பது மீதி கதை. `மெட்ராஸ்காரன்’ என்று பெயரிட்டு, ஹீரோ ஷேன் நிகாமை மலையாளத்தில் இருந்து வரவழைத்து, மலையாள வாடையிலேயே பேசவிட்டுள்ளனர். படத்தில் அவர் புதுக்கோட்டைக்காரர் என்பதை ஏற்க முடியவில்லை.

மற்றபடி கொடுத்த கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளார். முரடனாக இருந்தாலும் கூட, தனது மனைவிக்காக தவித்து உருகும் கலையரசன் நன்கு நடித்துள்ளார். நிஹாரிகா பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டுள்ளார். வித்தியாசமான கெட்டப்பில் ஐஸ்வர்யா தத்தா, தாய்மாமனாக கருணாஸ் மற்றும் பாண்டியராஜன், கீதா கைலாசம், தீபா சங்கர், சூப்பர் சுப்பராயன் ஆகியோர், தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவு விறுவிறுப்புக்கு உதவி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், திருமணம் மற்றும் ஆக்‌ஷன் காட்சி களில் கடுமையாக உழைத்துள்ளார். வாலி மோகன்தாஸ் இயக்கியுள்ளார். திரைக்கதை உருவாக்கத்தில் அதிக கவனத்தை செலுத்தி, பிற்பகுதியின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

Tags : V M R Sanam ,Shane Nigam ,Chennai ,Pudukkottai ,Niharika ,Aishwarya Dutta ,
× RELATED ஈகோ பிரச்னையை பேசும் மெட்ராஸ்காரன்