கன்னியாகுமரியில் சுனாமியின்போது பெற்றோரை இழந்த கோட்டி (அருண் விஜய்), காது கேளாத, வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி. ஆதரவற்ற தேவியை (ரிதா) சிறுவயதில் இருந்து தனது தங்கையாக வளர்த்து வருகிறார். ஆதரவற்றோர் இல்லத்தில் செக்யூரிட்டியாகப் பணியில் சேரும் அருண் விஜய், பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு சமூக விரோதிகளால் ஏற்படும் அநியாயத்தை அறிந்து விஸ்வரூபம் எடுக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
சமூகத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்டு, அதற்கான தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, இயக்குனர் பாலா ஆணித்தரமாகவும், வன்முறையுடனும் சொல்லியிருக்கிறார். தனிநபராக படத்தை தூக்கிச்சுமக்கும் அருண் விஜய், தனது 30 வருட திரையுலகப் பயணத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். சண்டை, ரிதாவுடன் பாசத்தைப் பொழிவது, போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கி அழும் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
கைடு ரோலில் ரோஷிணி பிரகாஷ், பட்டாசு போல் வெடித்திருக்கிறார். தங்கையாக வரும் மலையாள வரவு ரிதா, படத்தை தாங்கி நிற்கும் வலுவான தூண். நீதிபதி குபேரனாக வரும் மிஷ்கின், வசனங்களால் கவனத்தை ஈர்க்கிறார். காவல்துறை சிறப்பு அதிகாரி சமுத்திரக்கனி, நேர்மையான நடிப்பை வழங்கியுள்ளார். சண்முகராஜன், பாடகி கவிதா கோபி, வரலட்சுமி சரத்குமாரின் தாயார் சாயாதேவி, பிருந்தா சாரதி, சிவாஜி கணேசனின் சாயலிலுள்ள பாதிரியார் உள்பட அனைவரும் தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர்.
பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார், பின்னணி இசைக்கு சாம் சி.எஸ் கடுமையாக உழைத்துள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு, இயல்பாகப் பதிவு செய்துள்ளது. வழக்கமான பாலா படங்களின் சாயலும், கேரக்டர்களும், அடுத்து இதுதான் நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சஸ்பென்சை உடைத்துவிடுகிறது.