சென்னை: பாலியல் புகார் விவகாரத்தில் இளம் நடிகர்கள், சீனியர்களை விட மோசமாக உள்ளனர் என பார்வதி திருவோத்து காட்டமாக கூறினார். பெண் சினிமா கலைஞர்களின் பாதுகாப்புக்காக அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார் பார்வதி திருவோத்து. ஹேமா கமிட்டி அமைவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். தொடர்ந்து பாலியல் புகார்களில் சீனியர் நடிகர்கள் சிக்குவது பற்றி பார்வதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியது: சீனியர் நடிகர்களாவது கொஞ்சம் பரவாயில்லை. இன்றைய இளம் நடிகர்களில் சில பேர் இதைவிட ரொம்பவே மோசமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சீனியர் நடிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பு வசதி தங்களுக்கு கிடைக்கவில்லையே என்கிற வயிற்றெரிச்சலிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்தாலும் அது குறித்து அவர்களுக்கு துளியும் கவலை இல்லை. தரக்குறைவான வார்த்தைகளை சுலபமாக பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் இது போன்ற இளம் நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டி வந்துவிடுமோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். நல்ல வேளையாக அது போன்று நடக்கவில்லை. இவ்வாறு பார்வதி கூறினார்.