×

புவனம் முழுதும் பூத்தவளே

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-54

அறமும் அன்பும் வெவ்வேறு திசையாக இருந்த போதும் கணவன் மீதும் குழந்தைகள் மீதும் மிகுந்த பற்றுடையவளுமாய் உமையம்மை இருக்கிறாள் என்றாலும்  இதிலிருந்து முற்றிலும் மாறார்வளாய், வைராக்யத்தை உடையவளாய், உயர்வர உயர்ந்தவளாய் மாதவத்தை செய்பவளாயும் அவளே இருக்கின்றாள். மாத்தவளே  - 13 உன் தவநெறிக்கே - 59 என்று அவளின் தவ வலிமையை வியந்து கூறுகின்றார்.

‘‘துவளப் பொருது’’ என்ற சொல்லால் பாம்பு பட மெடுத்து ஆடும் போது தன்னை கொண்டதாகவும் அதன் அருகில் யாரும் செல்ல முடியாத படி கடிந்து  (சினந்த) இருக்கும். அதுபோல் கோபமே வடிவான சிவபெருமான் தன் கண்களாலேயே மன்மதனை அழித்தவன்.

 ‘‘விழியால் மதனை அழிக்கும் தலைவர்’’ - 87

 அப்படிப்பட்ட சிவனது கோபத்தை உன் தவ நெறியால் விரத முறைகளால் , பொறுமையால் இந்த உலகமே பழிக்கும்படி
அவனை தன் வயப்படுத்தி தன்னுள் அவனும் தானுமாய் ஆகி ஒரு பாகம் கொண்டு ஆள்பவளே என்று கூறுகிறார்.

‘‘அண்ட மெல்லாம் பழிக்கும்படி, ஒருபாகம் கொண்டாளும் பராபரையே ’’- 87

‘‘துவளப் பொருது’’ என்பதனால் மூன்று தகவலை சொல்கிறார்.
1. இந்த உலகனைத்தையும் ஈன்றதனால் துவண்ட (சோர்ந்த) இடை உடையவளாக இருக்கிறாள்.‘‘பூத்தவளே புவனம் பதினான்கையும் ’’- 13
2. இறைவன் மீது கொண்ட அன்பால் வருந்திய இடை உடையவளாய் இருக்கிறாய் ‘‘வருத்திய வஞ்சி’’ 5
3. சிறுத்த மற்றும் நுண்ணிய மெல்லிடையை உடையதாதலால் பருத்த தன் பாரத்தை தாங்க இயலாது துவண்ட இடையை பெற்றிருக்கிறாள்.
1. படைத்தலையும், 2. காத்தலையும், 3. அழித்தலையும் செய்வதற்கு உதவுவதாக உள்ள சக்தியின் ஆற்றலையே‘‘துவளப் பொருது ’’ என்ற வார்த்தையால்  குறிப்பிடுகின்றார். உலக உயிர்களுக் கெல்லாம் கருணை செய்வதனால் மீண்டும் மீண்டும் செயல்பட்டு, தளர்வால் இடை சோர்ந்தவளாக காணப்படுகின்றாள். அதனாலும் ‘‘துவளப்  பொருது துடியிடை’’ என்கிறார்.
சிவபெருமானுடன் இரண்டறப் பொருந்தி, இருப்பதனாலும் ‘‘துவளப் பொருது துடியிடை ’’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

‘‘துடியிடை- சாய்க்கும் துணை முலையாள்’’

துணை முலையாள்என்ற சொல்லால் மதுரை திருவிளையாடலை நமக்கு நினைவூட்டுகிறார். பாண்டிய மன்னனுக்கு மகளாய் பிறந்த போது மூன்று ஸ்தனங்களை  கொண்டவளாய் உள்ளாள். அவள் திருமணப் பருவத்தை அடைந்த போது யாரைக் கண்டவுடன் நாணப்படுகிறாளோ அப்போது அந்த மூன்றாவது ஸ்தனம்  மறையும் என்றனர். போர் களத்தில் இறைவனைக் கண்டவுடன் இந்த சுழக்கு மாறான உணர்வு தோன்றுகிறது. (கோப உணர்வு மாறி நாணப்படுகிறாள்) அப்போது  அவளின் ஸ்தனமானது (துணைமுலை) மறைகிறது என்கிறது மதுரை தலப்புராணம்.

‘‘அவளைப் பணிமின்’’ கண்டீர் -

அவள் என்ற வார்த்தை உமா, காளி சண்டீ என்று உமையம்மைக்கு பல பெயர்கள் இருந்த போதும் பெயரை சூட்டாமல் ‘‘அவள்’’ என்ற வார்த்தையை ஏன்  பயன்படுத்துகிறார். ஒரு குறிப்பிட்ட சொல்லைக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட பொருளையே உணர்த்த முடியும். ஆனால் வடமொழி இலக்கணத்தின் வழி அவள்,  அவன் என்ற படர்க்கை பொதுப் பெயரை பயன்படுத்துவதால் அனைத்து பரிந்துரைக்கிறது. அவை அத்துனையும் பொதுப் படையாக சூட்ட அவள் என்ற  வார்த்தையை பயன்படுத்துகின்றது.

‘‘பணிமின்’’ என்பதனால் தீக்க்ஷையை பெற்று வழிபாட்டு நூலை (பத்ததியை முறைப்டி) பின்பற்றி வழிபாடு செய்வதையே ‘‘பணிமின்’’ என்ற  வார்த்தையால் குறிப்பிடுகிறார்.

‘‘அமராவதி ஆளுகைக்கே ’’ -

அமராவதி என்பது தேவர் உலகத்தின் தலை நகரம் . அதை ஆள்பவர் இந்திரனாவார். மானுடம் துய்க்க விரும்பிய அனைத்து இன்பங்களையும், துன்பமின்றி  குறைவற வழங்குவதே சொர்க்கம் என்பதாகும். அதை அடைய அனைவரும் முயல்கின்றனர் என்றாலும் இந்திர பதவியினால் மட்டுமே அதை அடைய முடியும்.  அந்த பதவியானது நூறு அஸ்வமேத யாகங்களை செய்வதனால் இந்திர பதவியை அடையலாம். உலகிலுள்ளோர் எண்ணற்ற புண்ணியங்களை தொடர்ந்து  செய்தால் அந்த உலகை அடையலாம்.

போர் முதலியவற்றில்பிறருக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த பின் அந்த ஆன்மார்கள் சொர்க்கத்தை அடைய முடியும். இம்மூன்றுமே செய்ய  இயலாததாகவும், கடுமையாக முயற்சி செய்ய வேண்டியதாகவும் உள்ளது. மிக சிறந்த தியாக பண்பை யாரும் பெற்றிருக்க வில்லை, இத்தகைய சூழலில்  அனைத்து இன்பங்களையும் தரவல்ல மிக எளிமையான உமையம்மையின் பத்ததியை பின்பற்றி வழிபாடு செய்து பெருதற்கரிய அமராவதியை ஆளுதலாகிற  இந்திர பதவியை பெறலாம் என்கிறார் பட்டர்.

நினைத்ததை நினைத்தபடி எந்த வித உழைப்பு மின்றி இடையூறும் இன்றி விரைவாக பெற்றுக் கொள்ளவே அனைவரும் விரும்புவர். அதிலும் கிடைத்த பொருள்  அனுபவிக்கும் போது ஏற்படுகின்ற சலிப்பு நம்மிடத்தில் தோன்றுவது இயல்பு. அத்தகைய இயல்பு நிலை மாறி விரும்பிய பொருள் விரும்பிய படி சலிப்பின்றி  எப்போதும் நாம் துய்ப்பதற்கு உண்டான சூழலை பெற்றுத் தரும். அப்படி பெற்றுத் தருவது சொர்க்கம் அதை அடைய பட்டர் நமக்கு பல எளிய வழிகளை  காட்டுகின்றார்.

தகுதி இல்லாதவர்கள் என்றாலும் அதை அடைய எளிமையான மற்றும் முயற்சி குறைவான வழியில் அடைய அபிராமி பட்டர் வழி சொல்கிறார். அந்த இந்திர  பதவியை அடைவதற்கு உமையம்மையின் திருவடியை சரணடைதலே, வழிபடுதலே சிறந்த சொர்க்கத்தை ஆளும் இந்திரப் பதவியை பெற்றுத் தரும் என்கிறார்,  தான் வேண்டியதை மட்டுமன்றிஅதற்கு மேலும் அருளும் கருணையுடையவள் என்பதை வெளிப்படுத்துகிறார்.
 
அம்மையிடம் சரணம் புகுந்தவர்களுக்கு அவள் அளிக்கும் பரிசு,

‘‘வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
 பெய்யும் கனகம், பெருவிலை ஆரம் . . . ’’ - 52
‘‘தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில் . . . ’’ - 75
‘‘அயிராவதமும் , பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே ’’- 83
 
இவ்வாறு சொர்க்கத்தை வேண்டு வோர்க்கு வேண்டிய படி அருள்கிறாள் அபிராமி. பிறவி எடுத்த நாள் முதல் செய்து வந்த வினைப் பயனால் தனக்கு ஏற்படும்  துயரையும் அவளே தீர்த்து வைக்கிறாள். இன்பதை அனுபவிப்பது மட்டும் ஒருவருக்கு மனநிறைவை கொடுத்து விடுவதில்லை. தனக்கு ஏற்பட்ட துயரத்திலிருந்து  முற்றிலும் விடுபடுவதே மிகுதியான முழுமையான இன்பத்தை தரும்.

‘இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது, வந்து அஞ்சல் என்பாய் …… - 33
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருள் அற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற் பட இருந்தேனை நின் பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலியலைத்து ஆண்டு கொண்டு
நேசத்தை என் சொல்லுவேன்’’….. - 32

‘உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் போது என்முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே -’’ 89

என்று கூறுகிறார். இவ்வாறாக பட்டர் காட்டிய வழியில் உமையின் அருளையும், இந்திர பதவியை பெறுவோம். இனி அடுத்த பாடலுக்கு செல்வோம்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags : earth ,
× RELATED பூமி ஒளிப்பதிவாளர் டட்லி