பாவம் போக்கும் ராமநாதர்

ராமேஸ்வரத்தில் எழுந்தருளச்செய்வதற்காகச் சிவலிங்கம் கொண்டுவர காசிக்குச் சென்ற அனுமன் திரும்பிவரத் தாமதமானதால், சீதாபிராட்டியார் மணலால் குவித்துச் செய்த லிங்கத்தை ராமபிரான் பூஜித்தார். அந்த சிவலிங்கமே  ராமநாதர். பிறகு, அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை மூலலிங்கத்தின் வடக்கே எழுந்தருள்வித்தார். இந்த லிங்கம், விசுவலிங்கம் எனப்படுகிறது. முதலில் இவருக்குத்தான் இத்தல பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்களின் பாவங்களை பாதாளத்தில் தள்ளிவிட்டு அவர்களைக் காப்பாற்றுவதால் இங்குள்ள பைரவர் பாதாள பைரவராக கோடி தீர்த்தம் அருகில் அருள்கிறார். ராமநாதர் சந்நதியில் வைணவ ஆலயங்களைப் போல தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது. ஆலயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ராமாயண கதாபாத்திரங்கள் சிவனை வழிபடுவதுபோன்ற சிற்பங்கள் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன.

Advertising
Advertising

அவற்றைத் தரிசிக்க கட்டணம் செலுத்த வேண்டும். இத்தலத்தில் திருமகளை மணந்த திருமால் சேதுமாதவராக தனிச் சந்நதியில் அருள்கிறார்.

சுந்தரபாண்டியன் எனும் மன்னனின் பக்தியை மெச்சி திருமகளை அவருக்கு மகளாகப் பிறக்கச் செய்து பின் திருமால் மணந்து கொண்டதாக ஐதீகம். இக்கோயில் நந்தியம்பெருமான் பன்னிெரண்டு அடி நீளமும் ஒன்பதடி உயரமும் கொண்டவராய் சுதை வடிவில் அருள்கிறார். இங்கு அருளாட்சி புரியும் அம்மன், பர்வதவர்த்தினி. இந்த அம்பிகையின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம் சேதுபீடம் ஆகும். அம்பாளின் உருவம் அடி முதல் முடி வரை நேரியதாய் நெளிவின்றை அமைந்திருக்கிறது. இதை “நிர்பங்க வடிவம்” என்றழைப்பார்கள். அம்பாள் சந்நதிக்கு கிழக்கு மூலையில் கண்ணாடியாலான மாடத்தைக் கொண்ட பள்ளியறை அமைந்துள்ளது.

இங்கு ராமநாதரும், அம்பாளும் இரவில் திருப்பள்ளி கொள்வதையும், காலையில் திருப்பள்ளி எழுச்சி பெற்று மீள்வதையும் பூஜையாகவே தினமும் கொண்டாடுகின்றனர். அம்பாளின் காலுக்கு பாஸ்கர சேதுபதி மன்னர் காணிக்கையாக கொடுத்த வைரக் கொலுசு அணிவிக்கப்படுகிறது. ஒருமுறை பாஸ்கர சேதுபதி தன் மகளுக்கு வைரக்கொலுசு அணிவித்து இக்கோவிலுக்கு அழைத்து வந்தாராம். அன்று கனவில் மலைவளர் காதலி சேதுபதியிடம், “உன் மகளுக்கு மட்டும் தான் கொலுசா?” என்று கேட்டிருக்கிறாள். தான் கடவுளுக்கு வைரக்கொலுசு பூண வேண்டும் என விரும்பியது தான் கனவாக வந்துள்ளது என சேதுபதி முதலில் நினைத்தாராம்.

ஆனால் மறுநாள் காலையில் தன் மகள் தடுக்கி விழுந்ததைக் கண்டதும் தன்னிடம் மலைவளர் காதலி தான் கனவில் வந்து கேட்டிருக்கிறாள் என முடிவு செய்து தன் மகளுக்கு அணிவித்த வைரக்கொலுசையே சேதுபதி காணிக்கையாக கொடுத்து விட்டாராம். ராமநாதருக்கு வலப்புறம் பர்வதவர்த்தினி இருப்பதைப் போல இடப்புறம் அன்னை விசாலாட்சி இருக்கிறாள். இந்த இருலிங்க கோயில் இங்கு மட்டும் என்பது சிறப்பு.

அம்பாள் சந்நதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தை அபிஷேகம் செய்து, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்வது வழிபாட்டு மரபு.

ஆலய முதல் பிராகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சந்நதி அமைந்துள்ளது. பின்னர் பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சந்நதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு நிரந்தரமாக எரியும் நெய் விளக்கில் நெய் ஊற்றி வழிபட அவை நீங்குகின்றன. இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்க சந்நதிகள் அமைந்துள்ளன.  

திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்கள்: 1. மகாலட்சுமி தீர்த்தம் 2.சாவித்திரி தீர்த்தம் 3.காயத்திரி தீர்த்தம், 4.சரஸ்வதி தீர்த்தம் 5.சங்கு தீர்த்தம் 6.சக்கர தீர்த்தம் 7.சேது மாதவர் தீர்த்தம் 8.நள தீர்த்தம் 9.நீல தீர்த்தம் 10.கவய தீர்த்தம் 11.கவாட்ச தீர்த்தம் 12.கெந்தமாதன தீர்த்தம் 13.பிரமஹத்தி விமோசன தீர்த்தம் 14.கங்கா தீர்த்தம் 15.யமுனா தீர்த்தம் 16.கயா தீர்த்தம் 17.சர்வ தீர்த்தம் 18.சிவ தீர்த்தம் 19.சாத்யாமமிர்த தீர்த்தம் 20.சூரிய தீர்த்தம் 21.சந்திர தீர்த்தம் 22.கோடி தீர்த்தம். இத்தலத்தில் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் வழிபட்டார் என்பது நம்பிக்கை. இவற்றில் 14 தீர்த்தங்கள் திருக்கோயிலின் உள்ளேயே உள்ளன. அவற்றில் கற்புக்கரசியான சீதாதேவியை சோதித்த பாவம் நீங்க அக்னி தேவன் நீராடிய அக்னி தீர்த்தக் கட்டம் புகழ்பெற்றது. தல விருட்சமாக வில்வமரம் விளங்குகிறது.

பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில். சிவன் கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும்  தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர். ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.

ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிராகாரத்தில், ராமநாதர் சந்நதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார். மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சந்நதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சந்நதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர். விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு “கோதண்டராமர்’ என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன்

வணங்கியபடி இருக்கிறான். அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து கிழக்கே 161 கி.மீ., தொலைவில் ராமேஸ்வரம் எனுமிடத்தில்  கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்கு 1.5  கி.மீ.தொலைவில் உள்ளது.

Related Stories: