×

மகாலட்சுமிக்கு அருளிய மகேஸ்வரன்

சிவ ஸ்தலங்களுள் மிகவும் போற்றப்படுவதும், யோகிகள், சித்தர்கள் மற்றும் ஓசைபடாது ஆழ்வார்களும் தொழும் க்ஷேத்திரம், சிதம்பரம். இங்கே வீற்றிருக்கும் ஆனந்தக் கூத்தன் என நந்தனரால் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் சந்நதியும், ஆழ்வார்களால் போற்றப்படும் அரங்கநாதன் குடி கொண்டிருக்கும் திருசித்திரக்கூடம் என்ற இந்த க்ஷேத்திரம். அதாவது இமயமலையில் கயிலாய தரிசனம் செய்து முடித்தபின் தேவர்களும் சித்தர்களும் ககன மார்க்கமாய் (வான் வெளியில்) ஒரே நேர் அச்சில் தெற்கு நோக்கி வந்தால், சிதம்பரத்தை அடையலாம் என்கிறது நாடி. கயிலாயமும், சிதம்பர நடராஜரும் 180 டிகிரி அச்சில் அமைந்துள்ளன. இங்கு ஆகாய அம்சமாக சிவன் தாண்டவமாடி மகிழ்ச்சியுடன் இருப்பதை ரிஷிகள் அனுபவித்து இங்கு கோயிலை எழுப்பி இருக்கின்றனர்.

ஆகாயத்தை எப்படி பார்க்க இயலாதோ அப்படி சிவனையும் நாம் லிங்க வடிவில் தரிசிக்க இயலாது. அகத்தியர், போகர் வான்மீகி போன்றோர்களால் பூஜிக்கப்பட்ட ஒளி புகும் ஸ்படிகலிங்கம். இங்கு இறைவன் ஆனந்தமயமாக - ஸ்வர்ணமயமாக தாண்டவமாடுகிறார். இதனைப் பார்வதி தேவியும், மகாலட்சுமியும் கண்டு இன்புறுகிறார்கள். வைகுந்தத்தில் திருமகளை காணாத மகாவிஷ்ணு, தாயார் தில்லையில் இருப்பதை அறிந்து அங்கு வந்தார். சிவபெருமானின் ஆனந்த நடனத்தை தன்னை மறந்து ரசித்தவராய் இமை சிமிட்டாமல் வியந்து பார்த்துக் கொண்டிருக்க, கோடானு கோடி தேவர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், அண்டத்து ரிஷியரும், முனிவரும் கூடி தொழ, ஆனந்தமயமானது தில்லை. தனது சகோதரி மகாலட்சுமியின் வேண்டுகோளுக்கு இணங்கி இன்றுவரை முக்கண்ணனார், தன் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டுதான் ஆனந்த நர்த்தனம் புரிகிறார். சிவபெருமானின் கிருபை பூர்ணமாக லட்சுமிக்கு கிடைக்கிறது. சிவபெருமானின் உள்ளத்து உணர்வுகளை நன்கு உணர்ந்தவர்.

பார்வதி தேவியார் அவர் மகாலட்சுமியை நோக்கி சிவனின் ஆசியை கூறுகிறாள். ‘‘நீ எனது ஆனந்த கூத்தை இமை மூடாது பார்த்து மகிழ்ந்தமையால் தேவர்களும், மற்றேனைய தேவ புருஷர்களுக்கும் இனி இமை மூடாது எமது நடனத்தை கண்டு முழுமையான இன்பம் கண்டமையால், நீ இருக்கும் இடத்தில் ஆனந்தத்திற்கு குறை இராது. எமது மேனி, திருமகளே, உன் பார்வையால் தங்கமானது. அதனால் இக்கணம் தொட்டு நீ தங்கத்தில் முழுமையாக வாசம் செய்வாய். வெற்றிலை, மஞ்சள், பட்டு, நவரத்தின கற்கள், மண், உலோகம், கரி எண்ணெய் போன்றவற்றில் உன் ஆட்சி இருக்கும். சுமங்கலி பெண்களின் குங்குமத்திலும், வளையல்களிலும், சிரிப்பிலும் தேவர்கள் உன்னைக் காண்பர். மகாலட்சுமி ஆன நீ, எமைப்போல ரூபமின்றி, பக்தர்கள் வீட்டில் சஞ்சரிப்பாய். புண்ணிய, தர்ம சிந்தை உடையவர்களுடன் அரூபமாக வாழ்வாய்.’’ என சிவபெருமானின் திரு உள்ளத்தை பார்வதி தேவி, திருமகளுக்கு ஓதி ஆசி தந்தார்.

திருமகளும் மகிழ்ந்து தனது பூர்ண கருணா கடாக்ஷத்தை சிவனுக்கும் பார்வதிக்கும் தர, பொன்மயமானது அவர்கள் மேனி. அவர் அணிந்திருந்த வில்வமாலையும் மற்றேனைய பொருட்களும் தங்கமயமாக, அந்தக் கோயில் பொன் அம்பலமானது என்கிறார் அகஸ்தியர். இன்றும் இந்த ஆனந்த நடனத்தை ரசித்தபடியே சக்கரத்தான் கோயில் கொண்டிருக்கிறார். இந்த கோயிலுக்கு சித்திரகூடம் என்று பெயர். இங்குள்ள நந்தீசன் சிவபெருமானை தொழுது கயிலாயம் நோக்கி கை கூப்பினார். அப்போது சிவகணங்கள் யாவும் தென் கோடியில் வேறு ஒருபுறத்தை நோக்கி தொழுது வான்வெளி பிரயாணம் செய்ய கண்டார். அந்த சிவகணங்கள் நாடிச் சென்றது, கோணீஸ்வரம். என்ற கோணமலையில் குடிகொண்டிருக்கும் ஈசனையே. இது இன்று திரிகோணமலை என்று இலங்கையின் வடகிழக்கு புறத்தே விளங்குகிறது.

இதை ‘தக்ஷிணகோடி கைலாயம்’ என்கிறார் அகஸ்தியர். கைலாயம் சிதம்பரம் -கோணீஸ்வரம் மூன்றும் பூமியின் ஒரே அச்சில் அமைந்துள்ளன என பூலோக வல்லுநர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கைலாய தரிசனம் செய்ய வேண்டும். இயலாதவர்கள், தில்லை நடராஜரையும், கோணீஸனையும் தொழுதால் பிறந்த பயனை அடைய செய்யும். மதுமாயி சமேதராய் கோணேசர் அருள் பரிபாலிக்கிறார். சிவகங்கை தீர்த்தமே பூலோகத்தில் சகல பீடைகளிலும் இருந்து நிவாரணம் தரவல்லது.

மேலும், சிவனின் நடன காட்சியானது தீமைகளை அழித்து மக்களை காத்தல், உலகை நடத்திச் செல்லல் என்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்கு 48 நாட்கள் கோயில் வளாகத்தில் தங்கி மதியம் உணவு மட்டும் உண்டு விரதம் இருந்து தேவார திருவாசங்களை பாராயணம் செய்தால் - 16 தலைமுறைக்கு பெரும் நோய் அண்டாது. குறைவில்லாத தனம் சேரும் என்கிறது நாடி சாஸ்திரம். மகாசிவராத்திரி ராப்பொழுது முழுவதும், தில்லை பொற்கூரையடி வீற்றிருக்கும் கயிலாநாதனை மனத்தில் ஒரு முகமாய் எண்ணி அவனை நோக்கி அமர்ந்து ‘’ஓம் நமசிவாய’’ என சொல்லி எழுந்தால் குறைவற்ற செல்வம் சேரும் என்கிறார் அகஸ்தியர்.

- ச.சுடலைகுமார்

Tags : Maheshwaran ,Mahalakshmi ,
× RELATED கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை...