×

சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம் என்பது ஆண்டுதோறும் இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களில். மகா சிவராத்திரி அன்று நடைபெறும் திருவிழாவை குறிப்பதாகும். சிவ வழிபாடு பல்வேறு வித வழிபாடுகளை கொண்டது. பன்மையில் ஒற்றுமை ஒற்றுமையில் பன்மை எனும் பாரத பண்பாட்டின் ஒரு சிறந்த வெளிப்பாடாக திகழ்கிறது சிவ வழிபாடு. அத்தகைய வழிபாட்டு முறைகளில் ஒன்று சிவாலய ஓட்டம். சிவனின் இரவான மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் சிவராத்திரி விழா -  கன்னியாகுமரி மாவட்ட சிவாலய ஓட்டம்! நிகழும் இந்நிகழ்வில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர்.நாடு முழுவதும் கொண்டாடப்படும் சிவராத்திரி விழா குமரி மாவட்டத்தில் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. கல்குளம், விளவங்கோடு தாலுகாவில் 110 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள 12 சிவாலயங்களை விரதமிருந்து சிவராத்திரி நாளில் பக்தர்கள் ஓடி சென்று வழிபடுகின்றனர்.

இதன் வரலாறு :
 
கடும் தவம் இருந்து , தான் எதை தொட்டாலும் சாம்பல் ஆகிவிட வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்ற சூண்டோதரன் என்ற அரக்கன், சிவனை தொட முயன்ற போது சிவன் ஓடி ஒளிந்ததன் நினைவாக நடைபெறும் ஓட்டம் என்பது இதன் வரலாறு. சிவாலய ஒட்டமானது திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து மதியம் ஓட்டம் தொடங்குவர் காவி உடை உடுத்து, கையில் விசறி, இடுப்பில் திருநீற்று பையுடன் பக்தர்கள் கோபாலா, கோவிந்தா என்று அழைத்தவாறு ஓடி செல்வர் அங்கிருந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனைக்கு நள்ளிரவில் வந்து சேர்வர். அதிகாலையில் பன்றிபாகத்திலிருந்து பயணம் தொடங்கும் இவர்கள் கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு கோயில்களில் வழிபட்டு விட்டு இரவில் திருநட்டாலம் சிவன் மற்றும் விஷ்ணு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சங்கர நாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

சிவாலய ஓட்டம் தொடங்கும் திருத்தலம் முன்சிறை எனும் அழகிய கிராமத்தில் உள்ள  திருமலை மகாதேவர் கோயில்.  இங்கு சிவ சந்நதிக்கு இடப்புறமாக விஷ்ணு சன்னிதி உள்ளது. கோயில் தமிழக மலையாள கட்டிட அமைப்புகளுடன் அமைந்தது. பொதுவாக கேரள கட்டிட அமைப்பில் சில சீனத்தன்மைகளை காணலாம். சின்ன குன்றின் மீது எழிலுற அமைந்த இத்திருக்கோயிலில் ஒரு சிறு நீர்தேக்கமும் உள்ளது.
 
இரண்டாவது திருக்கோயில் திக்குறிச்சி. இக்கோவில் தாமிரபரணி என்னும் குமரிமாவட்ட நதி அருகே உள்ளது. இக்கோவில் தூண் சிற்பங்களில் சில ராமாயணக் காட்சிகளைக் காணலாம். இக்கோவிலில் நந்தி இல்லை. நந்தி தாமிரபரணி நதி நீருக்குள் இருப்பதாக ஐதீகம். மூன்றாவது கோயில் திற்பரப்பு  இயற்கை அழகு நிறைந்த அருவியோடணைந்து ஓடும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இப்பழமையான கோயில். கேரள பாணியில் அமைக்கப்பட்ட இக்கோவிலில் சிவன் வீரபத்திர மகாதேவராக கோயில் கொண்டுள்ளார். கோயில் வெளிப்பிரகாரத்தில் பாம்பு தவளையை பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ள ஒரு சிற்பம் தரையில் உள்ளது. இது ஒரு சுரங்கவாசலின் திறப்புக்குறியீடு. அவசர காலங்களில் அரசகுடும்பம் அரண்மனை கோட்டை ஆகியவற்றிலிருந்து தப்பி வரும் சுரங்க பாதை திறக்கும் வாசல் இங்கிருப்பதற்கான குறியீடு. புனிதப் பயணியர் இளைப்பாற கட்டப்பட்ட கல் மண்டபம் இங்கு இயற்கை சூழலுக்கு மேலும் மெருகேற்றுகிறது.
 
சிவாலய ஓட்டத்தில் நான்காவது சிவத்தலம். திருநந்திக்கரை. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் கோபுரமும் கேரள பாணியில் அமைந்ததுதான். இக்கோயிலின் தென்புறம் மலைக்குகையில் குடைவரை சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள சிவன் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. இக்கோயில் கல்வெட்டுக்கள் சோழப் பேரரசு இக்கோயில் திருப்பணிகளுக்கு சேவை செய்ததை பறைசாற்றுகின்றன. தமிழகத்தின் தென் மூலையில் கானகங்களுக்கிடையே உள்ள இந்த கோயிலுக்கு சோழர்கள் திருப்பணி ஆற்றியுள்ளனர் என்றால் அவர்களின் சிவபக்தியை இன்றைய தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இக்கோவிலுக்கு நிரந்தர கொடிமரம் இல்லை. சிவராத்திரி அன்று மட்டுமே கோயிலுக்கு கொடிமரம் இங்கு அமைக்கப்படுவது தொன்றுதொட்ட வழக்கம்.

அடுத்த சிவாலய ஓட்ட திருக்கோயில்  பொன்மனை. இத்திருக்கோயில் சிவபிரானை கண்டெடுத்தவர் ஒரு வனவாசி. அவர் பெயர் தீம்பிலான். எனவே அவரது பெயரிலேயே இங்குள்ள குடி கொண்டுள்ள குலங்கள் ஏதுமற்று அனைத்து குலங்களுக்கும் சொந்தமான மகாதேவர் தீம்பிலான்குடி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். நாகலிங்க பூக்கள் வனப்புடன் பூத்துக்குலுங்க அமைந்திருக்கிறது  இத்திருக்கோவிலில். ஆறாவது கோயில் பன்னிப்பாகம். வயல்களும் குன்றுகளும் சூழ இயற்கையுடன் இணைந்து அழகாக எழும்புகிறது இக்கோயிலின் சிறு கோபுரம். இங்கு கோயில் கொண்டுள்ள சிவன் கிராதமூர்த்தியாக இருக்கிறார். அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்க சிவன் வேடனாக வந்து பன்றியைக் கொன்ற இடம் இதுவென்பது ஐதீகம்.

ஏழாவதான திருக்கோயில் கல்குளம் எனும் புராதன ஊரில் உள்ளது. 12 திருக்கோயில்களில் இந்த கோயிலில் மட்டும்தான் திராவிட கட்டிடக்கலை பாணி கோபுரம் நெடிதுயர்ந்து நிற்கிறது. இங்கு சிவராத்திரியன்று கோயில் குளத்தில் நீராடி ஈரம் சொட்ட சொட்ட பனையோலை விசிறியுடன் தெய்வ தரிசனம் செய்ய வரும் இளங்காளைகளாக கோவிந்தன்மார். எங்கும் கோபாலா கோவிந்தா எனும் கோஷம். பிராகாரங்களில் காணலாம். எட்டாவது சிவாலயம் இது குன்றும் வயல்களும் சூழ்ந்த மேலாங்கோடு எனும் அழகிய கிராமத்தில் உள்ளது இங்கு சிவபெருமான் சுயம்புலிங்கமாக கோயில் கொண்டுள்ளார். அவரது திருநாமம் காலகாலர் என்பது. பத்மநாபபுரம் கோட்டையின் ஒரு எல்லையில் இத்திருக்கோயில் உள்ளது.

அடுத்த சிவாலயம் வில்லுக்குறி என இன்று அழைக்கப்படும் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்த மகாதேவர் ஆலயம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுற்றிலும் அழகிய வாய்க்கால்களும் கால்வாய்களும் வயல்வெளிகளும் நிறைந்த பிரதேசம் ஆகும். அடுத்த சிவாலயத் திருத்தலம். திருவிதாங்கோடு பொதுவாக இதிலிருந்து இரவு நேரமாகியிருக்கும். இத்திருக்கோவிலிலும் நாராயணருக்கு சந்நதி உண்டு. இங்கு வெளிப்பிராகாரத்திலில் உள்ள விளக்குப் பாவையரின் சிற்பங்கள் சுற்று வட்டாரங்களில் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாகவும் ஒவ்வொரு பருவத்திலும் அதை விட முக்கியமாக சமுதாயத்தின் அனைத்து தளங்களிலிருந்துமாக இவ்விளக்குப் பாவையர் அமைக்கப்பட்டுள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.

அடுத்த பதினொன்றாவது கோயில் திருப்பன்றிக்கோடு. இங்கு மொகலாயப்படைகள் வேணாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. அவ்வெற்றிக்கு ஈஸ்வரனும் குளவிகள் மூலம் உதவினார் என்பது ஐதீகம். இங்குள்ள சிவனின் பெயர் மகாதேவன். இங்குள்ள மிகப் பழமையான குளமும் அதனைச் சுற்றி அமைந்துள்ள மரங்களும் ஒரு மிக அமைதியான சூழலை உருவாக்குகின்றன. கடைசியாக செல்லும் கோயில் திருநட்டாலம் இங்கு தான் சிவாலய ஓட்டம் நிறைவுபெறுகிறது ஓட்டமாக மட்டுமல்லாமல், வாகனங்களிலும் திரளாக பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் அதிகாலை இந்த பயணத்தை தொடங்குவர். சிவராத்திரிக்காக குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்

Tags : Shivalaya ,
× RELATED கன்னியாகுமரி சிவராத்திரியை ஒட்டி 12...