பழனிப் பெருமானின் பூஜைகள்

காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம். துவார விநாயகர் தீபாராதனையும், பள்ளியறை தீபாராதனையும் முடிந்த பின்னர் உள்ளிருக்கும்  பழநியாண்டவருக்கு தீபாராதனை செய்யப்படும். முருகன் சிலையில் சாத்தப்பட்ட ராக்கால சந்தனமும், கோவணத் தீர்த்தமும் பக்தர்களுக்கு  பிரசாதமாக வழங்கப்படுகிறது. விஸ்வரூப வழிபாட்டின்போது முருகனுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடல்களை கோயில் ஓதுவார்கள் பாடுவர்.இதைத்  தொடர்ந்த ஆறுகால பூஜைகளில் முதலாவது, விளாபூஜை: முருகனுக்கு காலை 6.40 மணிக்கு செய்யப்படும் பூஜை இது. ஆத்மார்த்த மூர்த்திகளை  பழநியாண்டவர் திருமுன்பு வைத்து புனிதச்சொல் மொழிந்து நான்கு திசைகளிலும் புனிதநீர் தெளித்து பின்பு அர்த்தமண்டபத்திலுள்ள சொர்க்க  விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்த பின்பு ஆத்மார்த்த மூர்த்தி மற்றும் முருகனுக்கு பூஜை செய்யப்படும்.

கருவறையின் இடது பக்கத்தில் ஸ்படிக லிங்க வடிவில் ஈஸ்வரனும், அம்பிகையும், சாளக்கிராமமும் ஒரு பேழையில் வைக்கப்பட்டுள்ளன.  விளாபூஜையின்போது, ஆண்டவர் ஆத்மார்த்த மூர்த்தியாகி ஈஸ்வரனை பூஜித்து வழிபடுவதாக ஐதீகம். அதனால்தான் அபிஷேகங்கள் முதலில்  ஆத்மார்த்த மூர்த்திக்கும், பின் முருகனுக்கும் செய்யப்படுகின்றன. ஏனைய காலங்களில் ஆத்மார்த்த அபிஷேகம் இல்லை. இப்பூஜையின்போது  முருகனுக்கு காவியுடையோடு வைதீகக் கோலத்தில் அலங்காரம் செய்யப்படும். கோயில் ஓதுவார்கள் விளாபூஜையின்போது பஞ்சபுராணங்கள்  பாடுகின்றனர்.

அடுத்தது சிறுகால சந்தி பூஜை, காலை 8 மணிக்கு நடைபெறும். முருகனுக்கு அபிஷேக, அலங்கார அர்ச்சனைக்குப் பின், நைவேத்தியம், ஏக  தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். சிறுகாலசந்தி பூஜையில் குழந்தை வடிவில் முருகனுக்கு அலங்காரம் செய்யப்படுகின்றது.  மூன்றாவது, காலசந்தி பூஜை, காலை 9 மணிக்கு. முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைக்குப்பின் நைவேத்தியம், ஏக தீபாராதனை காட்டி  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். குழந்தை வடிவில் பழநியாண்டவருக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.நான்காவது உச்சிகால பூஜை, பகல் 12  மணிக்கு. முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைக்கு பின், தளிகை நைவேத்தியம் செய்து 16 வகையான தீபாராதனையும், சிறப்பு  போற்றுதல்களும் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

(அலங்கார தீபம், நட்சத்திர தீபம், 5 முக தீபம், கைலாச தீபம், பாம்பு வடிவ தீபம், மயில் தீபம், சேவல் தீபம், யானை தீபம், ஆடு வடிவ தீபம்,  புருஷாமிருக தீபம், பூரண கும்ப தீபம், 4 முக தீபம், 3 முக தீபம், 2 முக தீபம், ஈசான தீபம், கற்பக தீபம் ஆகியவையே 16வகை தீபங்கள்) இந்த  உச்சிகால பூஜையில் முருகனுக்கு கிரீடத்துடன், வைதீக அலங்காரம் செய்யப்படும். சிறப்பு போற்றுதல்களாக குடை, வெண்சாமரம், கண்ணாடி,  சேவற்கொடி, விசிறி, ஆலவட்டம் முதலியவை முருகனுக்குக் காட்டப்படுகின்றன. இத்தருணத்தில் தேவாரம் பாடப்படும்.

ஐந்தாவது சாயரட்சை பூஜை, மாலை 5.30 மணிக்கு. முருகனுக்கு அபிஷேக, அலங்கார, அர்ச்சனைக்கு பின் 16 வகை தீபாராதனையும், சிறப்பு  போற்றுதல்களும் நடைபெறும். சாயரட்சையில் முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்படும்.ஆறாவது, ராக்கால பூஜை, இரவு 8 மணிக்கு. அபிஷேக  அலங்கார அர்ச்சனைக்கு பின் நைவேத்தியம் செய்து ஏக தீபாராதனை நடைபெறும். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். ராக்கால பூஜையில்  முருகனுக்கு விருத்தன் வடிவில் அலங்காரம் செய்யப்படும். தூயசந்தனம் முருகன் சிலையில் பூசப்படும். இந்த சந்தனம் மறுநாள் காலையில்  விஸ்வரூப தரிசனத்தின் போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தீபாராதனைக்கு பின் சாமியை பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வர்.

- மீனாட்சி

Related Stories: