×

பாவங்களை மன்னித்து அருளும் கச்சனம் கைச்சின்னேஸ்வரர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற கைச்சின்னேஸ்வரர் கோயில். மூலவர் கைச்சினேஸ்வரர். தாயார் பல்வளை நாயகி, ஸ்வேதவள நாயகி.

தல வரலாறு:

கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆஸ்ரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் சதி செய்தான். கவுதமர் அதிகாலையில், ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் வழக்கமுடையவர். எனவே சேவலாக உருவெடுத்து ஆஸ்ரமத்தின் உச்சியில் இருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். அகலிகை வழியனுப்பினாள். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். “விடியவே இல்லை, ஏதோ ஒரு சேவல் நேரம் கெட்ட நேரத்தில் கூவியுள்ளது,’ என்று சொல்லி விட்டு, அகலிகையுடன் சேர்ந்து இருந்தான்.

இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞானதிருஷ்டியால் உணர்ந்து, ஆஸ்ரமத்துக்கு திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார். அகலிகை கற்பில் சிறந்தவளாக இருந்தாலும் அவள் ராமரால் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காக கல்லாக மாற்றினார். சாப விமோசனம் பெறுவதற்காக, இந்திரன் சிவனை நினைத்து உருகி வழிபட்டான். சிவன் அவனிடம், விமோசனம் வேண்டுமானால், மணலால் லிங்கம் செய்து அபிஷேகம் செய்து வழிபடும்படி சொன்னார்.

மண்ணில் செய்த லிங்கத்திற்கு எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? எனவே இந்திரன் இன்னும் பல காலம் துன்பப்பட்டான். செய்த தவறை நினைத்து உருகினான். கடும் குற்றம் செய்த அவனை சிவன் மன்னிக்கவில்லை. பின்னர் அம்பாளை நினைத்து தவமிருந்தான். இப்படியாக பல்லாண்டு கழித்தும் பலனின்றி, தான் அமைத்த லிங்கத்தைக் கட்டிப்பிடித்து, “”இனி பெண் வாசனையையே நுகர மாட்டேன்,’’ எனக் கதறினான். அவனது விரல்கள் லிங்கத்தில் பதிந்து விட்டன.

தவறு செய்தவரையும் மன்னிக்கும் அருள் குணமுள்ள சிவன், நீண்ட நாள் கானக வாழ்வில் சிக்கிய அவனுக்கு விமோசனம் கொடுத்தார். அவன் எழுப்பிய லிங்கத்தில் எழுந்தருளி, தவறு செய்யும் யாராயினும் தண்டனை கொடுத்தும், தவறை எண்ணி திருந்தி இனி தவறு செய்வதில்லை என உறுதி எடுப்போருக்கு அருள்பாலித்தும் வருகிறார். இந்திரனின் கைவிரல்கள் லிங்கத்தில் பதிந்ததால், “கைச்சின்னேஸ்வரர்’ எனப்படும் இவர், பல்வளைநாயகி அம்பிகையுடன் இத்தலத்தில் உள்ளார்.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவாலயங்களில் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். இங்கு சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார். தவறு செய்தவர்கள் மனம் வருந்தி கைச்சின்னேஸ்வரரை வேண்டினால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.

Tags : Kachanamnesvara ,
× RELATED தண்ணீர்… தண்ணீர்…