சோதனைகளை களைவார் சுயம்புலிங்க சுவாமி

கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும், ஒரே நேர் கோட்டுப் பார்வையில் அமைந்துள்ள புண்ணியத் தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில். முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால், கடம்பவனம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர், பால் வியாபாரத்திற்காக சென்ற போது கடம்பக் கொடி காலில் பட்டு பால் சிந்தியது.

Advertising
Advertising

இவ்வாறு பல நாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதையறிந்த அந்தப்பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது கடம்பக் கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது ஊர் பெரியவர், சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார்.

‘ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால், ரத்தம் வடிவது நின்று விடும்’ என்றார். மேலும் அந்த வனப்பகுதியில் சந்தன மரம் இருக்கும் இடத்தையும் அடையாளம் காட்டினார்.

அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற மக்கள் அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கிளைக் கம்பை எடுத்து அரைத்து ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். இதையடுத்து ரத்தம் வழிவது நின்றது. உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன், இந்த ஆலயத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர்.

சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம் மற்றும் விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள். இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு 10 நாள் பிரமோற்சவம் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக, சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார்.

இங்கு இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படும். தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரைவிசு, வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, தீர்த்தவாரி, நவராத்திரி கொலு, விஜயதசமி, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை தீபம் போன்ற விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்

படும். சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோயில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், சுடலை மாடசாமி ஆகியோருக்கும் சந்நதிகள் உள்ளன. விநாயகர் கோயிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்திப் பெற்ற வன்னிய சாஸ்தா கோயில் உள்ளது.

உவரி கோயிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 7 மணிக்கு சாயரட்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாமபூஜை நடைபெறும். இக்கோயில் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மண் சுமக்கும் பக்தர்கள்

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்று பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட படலம். இதை நினைவு  கூறும் வகையில் பக்தர்கள் உவரியில், கடல் மண் சுமக்கிறார்கள். மண் சுமப்பதாக நேர்ந்து கொள்ளும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக உவரி வந்து, கடலில் நீராடி கடல் அலையில் இருந்து ஓலைப்பெட்டியில் கடல் மண்ணை நிரப்பி அதை தலையில் சுமந்து கோயில் அருகே சேர்த்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.

வியாதிகளில் இருந்து குணமடைய வேண்டியும், குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, கல்வி ஞானம், மாங்கல்ய பாக்கியம், வேலை வாய்ப்பு பெற வேண்டியும் பக்தர்கள் 5,11, 21, 101 என்ற எண்ணிக்கையில் ஓலைப்பெட்டிகளில் மண்ணை நிரப்பி அதை தலையில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தொகுப்பு; ச.சுடலை குமார்

Related Stories: