இந்திரன் சாப விமோசனம் பெற்ற திருத்தலம்

அவர் முன் தோன்றிய மும்மூர்த்திகள் ‘‘கௌதம முனிவரின் கடும் சாபத்தால் தேவேந்திரன் ஊனப்பட்டு தன் தொழிலை செய்யாமல் இருக்கிறான். ஆகவே நீவீர் இமயமலை சென்று இந்திரனை வரவழைத்து உமது கேள்வியை கேளும் என கூறிவிட்டு அவ்விடம்விட்டு அகன்றனர். இந்திரன் தேவலோகத்தில் இருக்கும் போது அவரிடம் சென்ற நாரதர், பூலோகத்தில் கௌதம முனிவர் பத்தினி (மனைவி)  அகல்யையின் அழகை கண்டதை எடுத்துக் கூறினார். அதனைக் கேட்ட இந்திரன், அகல்யாவை காண பூலோகம் வருகிறார். கௌதம முனிவர் சேவல் கூவிய பின்னர் நீராட செல்வார்.

அதனை அறிந்த இந்திரன் சேவல் ரூபம் கொண்டு முனிவரின் குடில் மேல் நின்று கூவினார். கௌதம முனிவர் நீராட சென்றார். அந்த தருணத்தை பார்த்து இந்திரன், கௌதம முனிவர் வேடம் பூண்டு முனிவரின் குடிலுக்குள் நுழைந்தார். பின்னர் அகல்யாவிடம் நெருங்கிய இந்திரன், கௌதம முனிவர் குரலிலேயே ‘‘அகல்யா வா உறவாடுவோம்… தாம்பத்யம் கொண்ட பின்னரே நான் நீராட விரும்புகிறேன்.’’ என்றார். ‘‘கை, கால் அலம்பி வருகிறேன். சற்று பொறுத்திருங்கள் சுவாமி’’ என்று அகல்யா கூறிவிட்டு செல்கையில், இந்திரன் வேகம் கொண்டு அகல்யாவின் வலது கரத்தை பிடிக்க மிடுக்குடன் திரும்பிய ‘‘அகல்யா நீ யார்? ’’என்று கேள்வி எழுப்பினார். ஞானக்கண் மூலம் வந்திருப்பது தனது கணவர் இல்லை என்பதை அறிந்து கொண்டாள்.

அதே வேளை நீராட சென்ற கௌதம முனிவர் பொழுது புலரவில்லை, தாம் தெரியாமல் வந்து விட்டோம் என்பதை உணர்ந்து அவர் குடிலுக்கு வந்தார். அவர் தனது ஞானக்கண் மூலம் வன்திருப்பது இந்திரன் என்பதை அறிந்து கொண்டார். ‘இந்திரா நீ எந்த எண்ணத்துடன் இங்கு வந்தாய்? எதற்கு ஆசைப்பட்டு வந்தாயோ அது உனக்கு அருவருக்கும் வகையில் சாபம் இடுகிறேன். உன் மேனியெங்கும் யோணி யாகட்டும்’ என்று சபித்தார். இந்திரனின் மேனியெங்கும் யோணியாக இருந்தது. தன்னுடலை கண்டு இந்திரன் நாணப்பட்டான், கௌதம் முனிவரிடம் ‘‘சுவாமி என்னை மன்னித்து விடுங்கள், இந்த சாபம் விலக எனக்கு பரிகாரம் இல்லையா’’ என மன்றாடி கேட்க, இந்திரா இந்த சாபம் விலக உனக்கு பரிகாரம் உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை செய்யும் மும்மூர்த்திகளும் ஒரு சேர இருக்கும் நிலையில் அவர்களை பூஜித்தால் இந்த சாபம் விலகும்’’ என்று கூறினார். இந்த சாபத்தால் நாணப்பட்டு இந்திரன் தனது தொழிலான மழை பெய்விப்பதை நிறுத்தி வைத்தான்.

இந்த நிலையில் இந்திரனை காண்பதற்காக அத்திரி முனிவர் இமயமலைக்கு புறப்பட்டார். இந்திரனும், மும்மூர்த்திகளும் வரவேண்டும் என்று இமயமலையில் மாபெரும் யாகம் நடத்தினார். அந்திரி முனிவரின் யாகம் கலைக்கபட வேண்டும் என்று எண்ணிய மும்மூர்த்திகள் நாரதரை அழைத்து ஞானராண்யம் வசித்து வரும் அத்திரிமுனிவர் தற்போது இமயமலையில் யாகம் நடத்தி வருகிறார். அங்கிருந்து அத்திரிமுனிவரை அகற்ற வேண்டும் என்றனர். அதனை கேட்ட நாரதர் அத்திரிமுனிவர் மாபெரும் துறவியாவார். இருப்பினும் தங்கள் அருளால்  என் வேலையை பணிந்து பார்க்கிறேன்  என கூறி சென்றார்.

ஞனராண்யம் வந்த நாரதர் அனுசூயா தேவியின் தர்மம், ஒழுக்கம் முதலானவற்றை கண்டு வியப்புற்றார். கயிலாயம் வந்த நாரதர் முப்பெரும் தேவியர்களை நோக்கி உங்களையெல்லாம் விட சர்வ வல்லமையை கொண்ட அனுசூயா தேவி பூலோகத்தில் இருக்கிறாள் என்று கூறினார். இதனை கேட்ட தேவிமார்களுக்கு முகத்தில் கலக்கம் ஏற்பட்டது. மூவரும் உடனே பூலோகம் சென்று அனுசூயா தேவியின் கற்பை சோதிக்க வேண்டும் என்று கூறினார். இல்லத்தரசிகளின் இனிய வார்த்தைகளை நம்பிய மும்மூர்த்திகள் முதுமை நிறைந்தவர்களாக வேடம் தரித்து அனுசூயா இல்லத்திற்கு வந்தனர். அனுசூயா தேவியிடம் அம்மா, நாங்கள் நல்ல பசியுடன் வந்துள்ளோம். உண்பதற்கு ஏதாவது கொடுங்கள் என்று கூறினார்கள். உடனே அனுசூயா தேவி தலை வாழை இலை விரித்து அறுசுவை உணவை படைக்க தயாரான போது மும்மூர்த்திகள் இருக்கை விட்டு எழுந்தனர்.

காரணம் தெரியாமல் திகைத்தாள் அனுசூயா. அவர்களிடமே கேட்டாள் என்ன ஆயிற்று? ஏன் எழுந்திருக்கிறீர்கள் ? அதற்கு மூவரும் ‘‘நாங்கள் இந்த விருந்தை ஏற்க வேண்டுமானால் நீ பிறந்த கோலத்தில் எங்களுக்கு உணவு பரிமாற வேண்டும்.’’ என்றனர். அதை கேட்ட அனுசூயா சரி அப்படியே ஆகட்டும் என்றாள். பின்னர்  குடத்தில் வைத்திருந்த தனது கணவரின் பாதம் பட்ட நீரை எடுத்து அவரை நினைத்து மும்மூர்த்திகள் மீது தெளித்தாள். சிறிது நேரத்தில் மூவரும் பச்சிளம் குழந்தைகளாக உருமாறினர். அவர்களை கையில் எடுத்து அப்படியே மார்போடு அணைத்து பால் அருந்த வைத்து தொட்டிலில் இட்டு தாலாட்டினாள். அந்த வேளையில் நாரதர் அங்கு சென்றார்.

மும்மூர்த்திகள் குழந்தைகளாக இருப்பதை அறிந்து திடுக்கிட்டார். இந்நிலையில் அத்திரிமுனிவரின் யாகத்தை கலைக்க இதுதான் சரியான தருணம் என கருதிய நாரதர் நேராக இமயமலை சென்றார். ‘‘தங்களுடைய பத்தினியாள் மூன்று தொட்டில் கட்டி மூன்று குழந்தைகளை தூங்க வைத்து கொண்டிருக்கிறாள்’’ என கூறினார். இதனை கேள்விபட்டதும் அத்திரிமுனிவர் தனது யாகத்தை அடுத்த கனமே நிறுத்திவிட்டு ஆசிராமம் விரைந்தார்.

அனுசூயா.  இல்லத்திற்கு வந்த முனிவரிடம் நடந்ததை எடுத்துக் கூறினாள். தனது பத்தினியின் மன ஊக்கத்தையும், கற்பு நெறியையும் கண்டு அத்திரி முனிவர் வியந்தார். நாரதர் மும்மூர்த்திகள் இட்ட கட்டளைப்படி அத்திரிமுனிவரின் யாகத்தை கலைத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மும்மூர்த்திகள் குழந்தைகளாகவே இருந்துவிட்டால் உலகில் படைத்தல், காத்தல், அழித்தல் முத்தொழிலும் நின்று விடும் என கருதி உடனடியாக மேலோகம் சென்று முப்பெரும் தேவியரிடம் இது குறித்து நடந்தவற்றை விபரமாக  கூறினார். அதனை அறிந்த முப்பெரும் தேவியர்களும் பூலோகம் விரைந்தனர். நாரதர் அவர்களிடம் நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் கணவர் மீண்டும் அதே நிலை பெற மார்கழி திருவாதிரை நோன்பு இருக்க வேண்டும் என கூறினர். அதன்படியே மூவரும் திருவாதிரை நோன்பு இருக்கலானார்கள்.

இந்நிலையில் நாரதர் அத்திரிமுனிவரிடம் சென்று நடந்ததையெல்லாம் கூறினார். உங்கள் யாகம் கலைக்க மும்மூர்த்திகள் கட்டளையிட்டனர். அதன்படி நான் நடத்திய கலகமே இந்த விபரீதம். உண்மையறிந்த அத்திரிமுனிவர், அனுசூயா தேவியை அழைத்தார். அவரும் கணவனின் கட்டளைக்கு அடிபணிந்து வந்தார். தனது பதி பாதநீரை அக்குழந்தைகள் மீது தெளித்தார். மீண்டும் சுயரூபம் பெற்றனர் மும்மூர்த்திகள். பின்னர் மும்மூர்த்திகளும் தனது தேவியரோடு காட்சிக்கொடுத்தனர். அவர்களை பணிந்து வணங்கினர் அத்திரிமுனிவரும், அனுசூயா தேவியும். பின்னர் மும்மூர்த்திகள் அருட்கொடையாக எங்கள் மூவர் அம்சமாக சந்திரன், தாத்தாத்திரேயன், துர்வாஸா என பெயர்களுடைய மூன்று குழந்தைகளை அத்திரிமுனிவருக்கு அருளினர்.

பின்னர் அத்திரிமுனிவர் மும்மூர்த்திகளை சாஷ்டாங்கமாக பணிந்து இது போன்ற தரிசனம் இனி இந்த இடத்தில் எப்போது காணலாம் என்று கேட்டார். அதற்கு மும்மூர்த்திகள் ஆண்டுதோறும் மாதங்களில் சிறப்புற்ற மார்கழி மாதம் நட்சத்திரங்களில் முதன்மை நட்சத்திரமான அசுபதி நட்சத்திரத்தன்று அதிகாலை கருட ரூபமாய் வருவோம் வந்து பார்த்து கொள்ளுங்கள் என கூறினர். அதனையடுத்து அத்திரிமுனிவர் மும்மூர்த்திகளும் ஓரிடத்தில் தரிசிக்க தாங்கள் வழிகாட்ட வேண்டும். அதுவும் இந்த ஞானரண்யத்திலே அது நடக்க வேண்டும் என கேட்ட முனிவரிடம் மும்மூர்த்திகளும் தங்கள் விருப்பப்படியே ஆகட்டும் என்று கூறி விடைபெற முயன்றனர். அப்போது நாரதர் மும்மூர்த்திகள் மனமிறங்கி தேவேந்திரனுக்கு அருள்புரிய வேண்டும் அவன் துயர்துடைக்க வேண்டும் என கூறினார்.

அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அத்திரிமுனிவரும் மழைவேண்டி நிற்கிறோம். அத்தொழில் செய்யும் இந்திரனுக்கு சாபவிமோசனம் தாங்கள் அருள வேண்டும் என அவரும் கூறினார். இரண்டு பேரின் பேச்சையும் கேட்டுக்கொண்ட மும்மூர்த்திகள் நாரதரை பார்த்து இந்திரனை ஞானராண்யம் வரச்சொல். நாங்கள் மூவரும் இந்த பிரஞ்ஞாத தீர்த்தக்கரையின் தென்பக்கத்தில் உள்ள மரத்தில் இருக்கிறோம். அசையும், அசையாத உயிர்கள் அயர்ந்து உறங்கும் அர்த்தசாம வேளையில் இந்திரன் பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.

இதை கேட்கப்பெற்ற நாரதர் இந்திரனைக்காண இந்திரலோகம் சென்றார். மும்மூர்த்திகள் கீழிருந்து மேலாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என முறையே வீற்றிருந்தனர். அந்த மரம் கிருதயுகத்தில் அரசமரமாகவும், திரோதயுகத்தில் துளசியமாகவும், துவாபரயுகத்தில் வில்வமரமாகவும், கலியுகத்தில் கொன்றை மரமாகவும் மாறும் என்றும் கூறியிருந்தனர். மும்மூர்த்திகள் அந்த மரத்திலேயே ஒருவர் மேல் ஒருவராக வீற்றிருந்தனர். நாரதர் ஞானாரண்யத்தில் நடந்த சம்பங்களை இந்திரனிடம் கூறினார். உடனே இந்திரன் பூலோகத்திலுள்ள ஞானாரணயம் வந்தான். ஞானாரண்யம் கீழ் திசையிலுள்ள மலைக்குன்றில் தன் குலகுருவாகிய பிரகஸ்பதியை நினைத்து தவம் செய்தான். பிரகஸ்பதி இந்திரன் முன் தோன்றி ‘‘தேவந்திரா நீ நினைத்த காரியம் தடையில்லாமல் முடிவுபெற விநாயகரையும், நந்திதேவரையும் ஒருங்கே பூஜிக்க வேண்டும்.

பின்னர் அம்மரத்தின் எதிரில் ஓர் நெய்க்கொப்பரையில் நெய்விட்டுக் காய்ச்சி அதில் இறங்கி பஞ்சாரட்சர மந்திரத்துடன் ஆயிரத்தெட்டு தடவை அச்சமின்றி மூழ்க வேண்டும். இங்ஙனம் நீ செய்வாயானால் உனது பக்தியின் மாண்பைக்கண்டு மும்மூர்திகள் உனக்கு அருள்புரிவார்கள் உனது உடம்பை புனிதமாக்குவார்கள்’’ என்று கூறிவிட்டு சென்றார். பிரகஸ்பதி கூறியபடியே இந்திரன் செய்தான். மும்மூர்த்திகளின் அருளால் இந்திரன்  சாபவிமோசனம் பெற்றார்.  ஞானாரண்யம் அடுத்த தென்மேற்கு பகுதியில் அந்தணர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு பால், தயிர்,மோர், வெண்ணெய், நெய் முதலானவற்றை ஞானாரண்யம் வனப்பகுதியின் வடக்கிழக்கு பகுதியில் உள்ள நல்லூரை சேர்ந்த இடைகுல பெண்கள் ஞானாரண்யம் வழியாக கால்நடையாக நடந்து கொண்டு விற்று வருவது வழக்கம். ஒருமுறை மாணி என்ற பேச்சியம்மாள் செல்லும் போது நிலத்தில் உடைந்து நின்ற  மூங்கில் தட்டி பால் பானை உடைந்து அந்த மூங்கில் மேல் சிந்ததும். இது சில தினங்களாக தொடர்ந்தது.

இதனை பேச்சியம்மாள் தன் கணவனிடம் கூறினாள். உடனே பேச்சியம்மாளின் கணவன் மற்றும் அவரது உறவினர்களில் சிலர் அந்த இடம் வந்து மண்வெட்டியால் வெட்டினர். வந்தவர்களில் ஒருவர் தனது கோடாரியால் மரத்தில் அடிப்பாக மூட்டில் வெட்டவே அதில் இருந்து (வெட்டப்பட்ட இடத்தில்) ரத்தம் பீறிட்டு பாய்ந்து கீழே வடியத் தொடங்கியது. அதனை கண்ட அனைவரும் திகைத்தனர். மனித ரத்தம் போல் தென்பட்டதால் மரத்தின் பின்புறம் சென்று பார்த்த போது அதன் அடிப்பாகத்தில் லிங்க வடிவில் மூன்று சிறிய கற்கள் ஒன்றன் மீது ஒன்று மூன்றடுக்குகளாய் இருப்பதை கண்டனர். அந்த இடத்தை பணிந்து வணங்கினார்கள்.

மேடாக இருந்த இடத்தில் இந்த அதிசயம் நடந்ததால் மரத்தில் இருந்து வடிந்துக் கொண்டிருந்த இரத்தம் மரத்தின் மேல் இருந்த தாழ்வான ஒரு பகுதிக்கு சென்று தேங்கி நின்றது. அனைவரும் சென்று பார்க்கும் போது சுற்றிலும் முள்செடிகளையும் அதன் நடுவில் சுயம்புலிங்க கல் வடிவத்தையும் (சிலையையும்) கண்டு ஆச்சர்யமடைந்தனர். இதுவே தற்போதைய தாணுமாலைய சந்நதி ஆகும். கருவறைய தோற்றம். உடனே திடுக்கிட்ட அவர்கள் மூங்கில் கிளையின் பின்புறம் சென்று பார்த்தனர். அப்போது ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட 3-கற்கள் லிங்க வடிவில் காட்சயளித்தது.

பின்னர் அஞ்சிய இடையர்கள் பணிந்து வணங்கினார்கள். அந்த மூங்கில் மரக்கிளையிலிருந்து வடிந்த ரத்தம் ஆறாக ஓடி அருகே இருந்த தாழ்வான பகுதியில் லிங்கமாக காட்சியளித்தது. இதனை அந்த மக்கள் மன்னிடம் கூற அந்த இடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டது. ஆசிராமம் இப்போது ஆசிரமம் என்ற பெயரோடு விளங்குகிறது. ஞானாரண்யம் தான் சுசீந்திரம் என்று அழைக்கப்படுகிறது. பிரஞ்ஞாத தீர்த்தம் தான் தெப்பக்குளம்.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related Stories: