தென் புனவாயில் அமர்ந்தருள் பெருமாளே !

*அருணகிரி உலா 92

புனவாயில் பாடலில் அருணகிரியார்  போகும்  இறுதிக்கால கட்ட காட்சிகளைப் பாடிவிட்டு, மறல் வந்து ஆவிகொளும்  தினம் தன் முன் குஞ்சரி மாருடன் தோன்றி  நிற்கும்படி முருகனை வே ண்டுகிறார். சீதையை ராமன் தேடிச் செல்லும்  ராமாயணக் காட்சிகளும் பாடலின் பிற்பகுதியில் வருகின்றன.

‘‘உரையுஞ்  சென்றது நாவும் உலர்ந்தது

விழியும் பஞ்சு பொலானது கண்டயல்

உழலுஞ் சிந்துறு பால் கடை நின்றது     

கடைவாயால் ஒழுகுஞ் சஞ்சல மேனி

குளிர்ந்தது முறிமுன் கண்டு கைகால்களை

நிமிர்ந்ததுஉடலுந் தொந்தியும்

ஓடி வடிந்தது,  பரிகாரி.

வர, ஒன்றும் பலியாதினி   என்ற பின்

உறவும் பெண்டிரு  மோதி விழுந்தழ

 மறல் வந்திங் கெனதாவி கொளுந் தினம்,    

இயல்தோகை மயிலும் செங்கைகள்

ஆறிரு திண்டிய வரை துன்றும்

கடி மாலையும்  இங்கித் வனமின் குஞ்சரி

மாருடன் என்றன்முன் வருவாயே’’

பொருள் :-  வாய் பேச முடியாமல், நாக்கு வறண்டு போகிறது; கண்களும் பஞ்சடைந்து விடுகின்றன. அயலார்கள் இது கண்டு வாயில் விடும் பால் நாக்கின் அடியில் நின்று பின் வாய் ஓரமாக ஒழுகி விடுகிறது. சுறுசுறுப்பாக இருந்த உடல் சூடு நீங்கி குளிர்ந்து விடுகிறது; கைகால் முடங்கி விடுகின்றன. உடலும் வயிறும் வடிந்து போகின்றன இந்நிலையைப் பார்க்க வந்த வைத்தியர் ‘இனி எதுவும் பயனில்லை’ என்று கூறிவிட, சுற்றத்தார்களும் பெண்களும் உடல் மீது விழுந்து கதறுகின்றனர்.

எமராஜன் வந்து ஆவியைப் பறித்துக் கொண்டு போகும் அத்தருணம், அழகிய  தோகை உடைய உனது மயில் வாகனத்தில், வலிமைமிக்க மலைபோன்ற பன்னிரு புயங்களில் வாசனை உள்ள கடப்பமாலைகள் விளங்க, உனக்கு இன்பத்தைத் தருகின்ற வனத்தில் வாழும் மின்னல் கொடி போன்ற வள்ளியுடனும், தேவ சேனையுடனும் என் முன் தோன்றி அருள்வாயாக. பாடலின் பிற்பகுதியில், மனத்தை உருக்கும் ராமாயணக் காட்சிகள் இடம் பெறுகின்றன.

அரி மைந்தன் புகழ்  மாருதி  என்றுள,

 கவியின் சங்கம் இராகவ புங்கவன்

 அறிவுங் கண்டருள் வாயென  அன்பொடு தரவேறுன்

அருளுங் கண்ட தராபதி வன்புறு

 விஜயங் கொண்டெழு போது புலம்பிய

அகமும் பைந்தொடி சீதை மறைந்திட   வழிதோறுங்

  மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள்

 கடகந் தண்டை பொன் நூபுர மஞ்சரி

மணியின் பந்தெறிவாயிது பந்தென்  முதலான மலையுஞ் சங்கிலி போல மருங்குவிண்

முழுதுங் கண்ட நராயணன் அன்புறு  மருகன் தென் புன வாயிலமர்ந்தருள் பெருமாளே ’’

அரி மைந்தன் புகழ் மாருதி:-

சூரிய புத்திரன் சுக்ரீவன்  புகழம் மாருதி

என்றுள கவியின் சங்கம் :-

அவர்களைப் போன்ற மற்றுமுள்ள வானரக் கூட்டத்தைப் (பார்த்து)

இராகவ புங்கவன் :- தூய மூர்த்தியான ராம பிரான்

அறிவும் கண்டருள்வாய் என அன்பொடுதர :-

    நீங்களனைவரும் சென்று உங்கள் புத்தியைப் பயன்படுத்தி சீதையின் இருப்பிடத்தைக் கண்டு வாருங்கள் என்று சொல்லி, பின்னர் தன் கணையாழியை அனுமனிடம் அன்புடன் தர,

வேறு உன் அருளும் கண்ட தராபதி

வேறு உனது அம்சமான சிவபிரானின் அருள்பெற்ற, பூலோகத்திற்கு அரசனான ராவணன்.வன்புறு விஜயங் கொண்டு எழுபோது :-

வன்முறையினால் (சீதையைக்) கவந்து செல்ல

புலம்பிய அகமும் பைந்தொடி சீதை

மறைந்திட - அழுது கொண்டே சீதை ஆகாயத்தில் மறைந்திட,

வழிதோறும் மருவும் குண்டலம், ஆழி, சிலம்புகள், கடகம், தண்டை பொன் நூபுர மஞ்சரி மணியின் பந்தெறிவாய் இது பந்தென முதலான :-

வழி நெடுக அவள் தன் நகைகளையும், மணியால் செய்யப்பட்ட பந்தையும் அனைத்தையும் சேர்த்து ஒரு பந்து போல் சுருட்டி எறிந்திருந்ததைப் பார்த்து ( ராமபிரான்)

மலையுஞ் சங்கிலி போல மருங்கு விண்

முழுதுங் கண்ட நாராயணன் அன்புறு மருகன் :-

அவள் சென்ற மலைப்பாதையையும், சங்கிலி போன்று படர்ந்திருந்த மலைகளையும் தாண்டிச் சென்று கொண்டே ஆகாயத்தில் அவள் போன சுவடு தெரிகிறதா என்று பார்த்த வண்ணம் இருந்தான். இந்நாராயணனின் அன்புக்குப் பார்த்திரமான மருகனான முருகப் பெருமான்….

தென் புன வாயிலமர்ந்தருள் பெருமாளே !

தென் புனவாயில் எனும் பதியில்

அமர்ந்திருக்கும் பெருமையனே !

   

புனவாயிற் கோயிலில் ஓரிடத்தில் பாண்டிய நாட்டுச் சதுர்தச [ 14] லிங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இப்பதினான்டு பாண்டியப் பதிகளையும் தரிசித்த புண்ணியத்தை திருப்புனவாயிலை மட்டுமே தரிசிப்பதால் பெறலாம் என்பது அன்றோர் வாக்கு.

[ அவையாவன :- 1. மதுரை, 2. திருப்புனவாயில், 3. திருக்குற்றாலம், 4. ஆப்பனூர் 5. திருவேடகம், 6. திருநெல்வேலி, 7. ராமேஸ்வரம், 8. திருவாடானை, 9. திருப்பரங்குன்றம், 10. திருச்சுழியல் , 11. திருப்புத்தூர் , 12. காளையார் கோயில், 13. பிரான்மலை, 14. திருப்புவனம்]. சண்டிகேஸ்வரரை வணங்கி கோயிலை விட்டு வெளியே வரும்போது அயராமல் உழவாரப்பணி செய்து கொண்டிருந்த அடியார்களையும் மானசீகமாக வணங்குகிறோம். திருப்புனவாயிலிருந்து புறப்படும் நாம், 20 கி.மீ தொலைவிலுள்ள திருவாடானைத் திருத்தலத்தை நோக்கிச் செல்கிறோம். [ காரைக்குடியிலிருந்து செல்வதானால் 40 கி.மீ பயணிக்க வேண்டும்.]

இறைவன் - ஆதி ரத்னேஸ்வரர். இறைவி - சிநேகவல்லி. துர்வாசர் தவம் செய்து கொண்டிருந்த போது, வருணனுடைய மகனான வாருணி அவருக்குப் பல இடையூறுகள் செய்தான். முனிவரின் சாபத்தினால் ஆனை உடலும், ஆட்டுத் தலையும் கொண்ட விநோத உருவத்தினனாக மாறினான் வாருணி. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதி ரத்னேஸ்வரரை வணங்கி வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். இதனால் தலத்தின் பெயர் ஆடானை என்றாயிற்று.

130 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே போகும் போது கலையம்சம் மிக்க தூண்களைக் கொண்ட நூற்றுக்கால் மண்டபத்தைக் காண்கிறோம். உள்வாயிலின் இருபுறமும் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர். கொடி மரம், பலிபீடம், நந்தி இவற்றின் முன்பு மிகப் பெரிய மணி ஒன்று உள்ளது. உட்பிராகார கிழக்குச் சுற்றில் அகஸ்திய விநாயகர், தேஜ சண்டேஸ்வரர், தேவியராகிய உஷா - பிரத்யுஷா இருவருடன் கூடிய சூரியன் ஆகியோரைக் காணலாம். தேர்ச்சக்கரம் தடைப்பட்டு பயணிக்க முடியாமல் போன சூரியன், இறைவனை வழிபட்டு, மணிமுத்தாற்றின் கிழக்குக் கரையில் நீலரத்தினத்தால் லிங்கப் பிரதிஷ்டை செய்தான்.

பின் முன்னிலும் அதிக ஒளியுடன் தன் பாதையில் தொடர்ந்து பயணித்தான். எனவே இறைவன் ஆதிரத்னேஸ்வரர் என்று பெயர் பெற்றார். பிராகாரத்தைச் சுற்றி வரும்போது, வருண விநாயகர், மார்க்கண்டேய விநாயகர், சனீஸ்வரர் - சனீஸ்வரி, அறுபத்துமூவர் ஆகியோரைத் தரிசிக்கலாம். நுழைவாயில் கதவருகில் கார்த்திகை தேவி, சந்திரன், ரோஹிணி, பைரவர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். (உலா தொடரும்)

உலா தொடரும்

தொகுப்பு: சித்ரா மூர்த்தி

Related Stories: