×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : வால்மீகி

அனுபவம்! தானே அனுபவித்து, நேருக்கு நேராகக் கண்டு, தான் பார்த்தவைகளை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் வெளிப்படுத்தும் தன்மை, எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. அப்படியே வாய்த்தாலும் அவற்றை வெளியிடுவதற்குத் தகுந்த சந்தர்ப்பங்கள் வாய்க்க வேண்டும்.சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும், யாரைப்பற்றிச் சொல்கிறோமோ, அவரே ஒப்புக் கொள்ளும்படியாகச் சொல்லும், சக்தி இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட மாபெரும் சக்தி வாய்ந்தவர் தான் வான் மீகி; பெரும் தவசீலர்; இல்லாவிட்டால், காட்டில் தனியாக விடப்பட்ட சீதை,வால்மீகியின் ஆசிரமத்தில் தங்குவாரா? சீதா-ராமர்களின் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து, அவர்களுக்கு ‘லவன்-குசன்’ எனப்பெயர் வைத்ததும் வால்மீகி தானே? அங்கிருந்தே பார்க்கலாம்!
       
ராவண சங்காரம் முடிந்து, சீதா-ராம பட்டாபிஷேகமும் நடந்து முடிந்தபின் நடந்த வரலாறு இது.பட்டாபிஷேகம் முடிந்து, மக்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ராவண சங்காரம் முடிந்து, சீதையும் ராமரும் சிம்மாசனத்தில் அமர்ந்தால் போதுமா? ராமாயணம் எனும் மகா காவியம் - இதிகாசம் உண்டாக வேண்டுமே! அதற்கான ஏற்பாடுகளை, காலம் தன் கோடுகளால் வரையத் தொடங்கியது.

அயோத்தியில் அனைவரும் அமைதியாக இருந்த வேளையில், ராமரின் மன அமைதியைக் குலைக்கும்படி யான நிகழ்ச்சி அரங்கேறியது; “ராவணன் ஊரில் பத்து மாதங்கள் இருந்தவள்தானே?” என்று சீதையைப்பற்றிய அபவாதங்கள் பரவத் தொடங்கின. அத்தகவல்கள், அரியணை ஏறி அரசாட்சி செய்து கொண்டிருந்த ராமர் செவிகளிலும் விழுந்தன; “அபவாதம் பரவத் தொடங்கி விட்டது வீணாகக் குழப்பங்கள் ஏற்படும். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்றல்லவா ஆகி விடும்” என்று நினைத்த ராமர், ஒரு முடிவுக்கு வந்தார்.

உடனே, லட்சுமணனை அழைத்து, “தம்பி! சீதையை அழைத்துக்கொண்டு போய், உடனே காட்டில் விட்டுவிட்டு வா!” என்று உத்தரவிட்டார்.

லட்சுமணன் பதறினார்; காரணம்? சீதாதேவி அப்போது நிறைமாத கர்பிணியாக இருந்தார். இருந்தாலும், “ தம்பி! உன் எண்ணம் புரிகிறது. சொன்னதைச் செய்! சீதாதேவியைக் கூட்டிப்போய் காட்டில் விட்டுவிட்டு வா!” என்று அழுத்தமாக உத்தரவிட்டார். வேறு வழியின்றி லட்சுமணனும் சீதையை அழைத்துக் கொண்டு காடு போனார்; நடுக்காடு சென்றதும் சீதையை ரதத்தில் இருந்து கீழே இறக்கி விட்டு, அதன்பின் தலையைக் குனிந்தபடி ராமரின் உத்தரவைக் கூறினார்.
            
“அன்னையே! தாங்கள் எந்தவொரு தோஷமும் இல்லாதவர் என்பதை ராமர் அறிவார்; அடியேனும் அறிவேன். உலக அபவாதத்திற்குப் பயந்தே, இவ்வாறு செய்தாரே தவிர, தவறாக எண்ண வேண்டாம். மகரிஷிகளின் ஆசிரமங்களைக் காண வேண்டும் என்று, தாங்கள் விரும்பியதால் அங்கே தங்களைக்கொண்டு போய் விட வேண்டும் என்பது அரசரின் உத்தரவு.
          
‘‘இங்கே உத்தமமான முனிவர்களின் ஆசிரமங்கள் பல இருக்கின்றன. இதோ! அருகில்தான் வால்மீகி மகரிஷி வசிக்கிறார். அவர் தசரதருக்கு மிகவும் வேண்டியவர்; அளவற்ற கருணை உள்ளவர். தாங்கள் அவர் ஆசிரமத்திலேயே இருக்கலாம்” என்று விவரித்து முடித்தார் லட்சுமணன். அதன்பின் சீதையும் லட்சுமணனும் பேசிய பேச்சுக்கள் விரிவானவை. நாம் வால்மீகியிடம் போய் விடலாம்!
        
நிறைமாதமாக இருந்த சீதையைத் தனியே காட்டில் விட்ட லட்சுமணன் அழுதபடியே திரும்பினார். லட்சுமணனுடைய ரதம் பார்வையில் இருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்த சீதை, கதறத் தொடங்கினார்; அலறல் காடு முழுதும் எதிரொலித்தது.
அலறலைக் கேட்ட, அங்கிருந்த ரிஷி குமாரர்கள் மூலம் வால்மீகி தகவல் அறிந்தார்; நடந்தவை அனைத்தும் அவரது ஞான திருஷ்டியில் தெளிவாக விளங்கியது; உடனே புறப்பட்டு வந்தார்; சீதையைக் கண்டார். வால்மீகியின் வருகை, சீதைக்குப் பயத்தைப் போக்கியது; மிகுந்த நம்பிக்கையை உண்டாக்கியது.
        
வால்மீகி பேசத் தொடங்கினார்; “அம்மா! நீ தசரத சக்கரவர்த்தியின் நாட்டுப்பெண்! ராமச்சந்திர மூர்த்தியின் பட்டத்து ராணி! பிரம்ம ஞானியான ஜனகரின் மகள். இம்மூவரும் எனக்கு மிகவும் வேண்டியவர்கள். ஆகையால் நீ கவலைப் படாதே! பயத்தை விடு! நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எனும் அனைத்தையும் நானறிவேன். நீ குற்றமற்றவள் என்பதும் எனக்குத் தெரியும்.
 
“இதோ! என் ஆசிரமத்தின் அருகில் ஏராளமான தவசிகள் இருக்கிறார்கள். அவர்கள் உன்னைத்தங்கள் மகள்போல் பார்த்துக் கொள்வார்கள்.வா!”என்று பேசி,தைரியம் ஊட்டி சீதையை அழைத்துக்கொண்டு
ஆசிரமம் அடைந்தார்.

வால்மீகியின் பராமரிப்பில் சீதை இருந்தார். அந்த நேரத்தில்தான், லவணாசுரன் என்பவனைக் கொல்வதற்காக ராமர் சத்ருக்னனை அனுப்பினார். புறப்பட்ட சத்ருக்னன், வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கினார். அன்று இரவுதான் சீதைக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். சீதைக்கு இரு குழந்தைகள் பிறந்த தகவல், அப்போதே வால்மீகிக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் உடனே சீதை இருந்த பர்ணசாலைக்குச் சென்று, பால சூரியர்களைப்போல விளங்கும் இரு குழந்தைகளைக் கண்டார். உடனே ஒரு பிடிதர்ப்பங்களை எடுத்து, அதை இரண்டாக அறுத்தார்; பூத ராட்சசர்களால் அக்குழந்தைகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் உண்டாகாதபடி மந்திரங்களை ஜபித்தார்.

அதன்பின் அங்கிருந்த பணிப்பெண்களை அழைத்து, அவர்களிடம் தன் கையிலிருந்த தர்ப்பங்களைத் தந்தார். “பெண்களே! முதலில் பிறந்த குழந்தையை, இத்தர்ப்பங்களின் மேல் பாகத்தால் துடையுங்கள்! தர்ப்பங்களின் கீழ்ப்பாகத்தால், இரண்டாவது குழந்தையைத் துடையுங்கள்! இதனால் இவர்களுக்கு ‘குசன்-லவன்’ என்ற பெயர்கள் உண்டாகட்டும்! அவர்கள் பேரும்புகழும் பெற்று விளங்குவார்கள்” என்றார் வால்மீகி.
          
அதன்படியே பணிப்பெண்களும் செய்தார்கள். அவர்கள் எழுப்பிய ஓசையால் கண்விழித்த சத்ருக்னன் எழுந்து, சீதையிருந்த பர்ணசாலையை நெருங்கினார். அங்கிருந்த முனி குமாரர்கள் மூலம், சீதையைப் பற்றிய தகவல்களை அறிந்தார். சத்ருக்னனின் கண்கள் ஆனந்தக்கண்ணீரை சிந்தின; “அம்மா! சூரியகுலம் இப்போதுதான் பெருமை பெற்றது. தாங்கள் க்ஷேமமாக இருக்க வேண்டும் தாயே!” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட சத்ருக்னன்,மறுநாள் காலையில், அங்கிருந்து புறப்பட்டார்.

இவ்வாறு அவதரித்த குசனும் லவனும் வால்மீகியால் மிகுந்த பொறுப்புடன் வளர்க்கப்பட்டார்கள்; கல்வி கலைகள் என அனைத்திலும் சிறந்து விளங்கினார்கள். உத்தமமான குழந்தைகளான அந்த குசன்-லவன் எனும் இருவருக்கும் தான்,தான்எழுதிய ராமாயணத்தை உபதேசித்தார் வால்மீகி.வால்மீகியால் உபதேசிக்கப்பட்ட ராமாயணத்தை, குசனும் லவனும், ராமர் அசுவமேத யாகம் செய்தபோது ராமர் முன்பாகவே பாடினார்கள் என்பது விரிவான வரலாறு.

இனி வால்மீகி, ராமாயணம் பாடிய வரலாற்றைக் காணலாம்.வருண பகவான் ! பிரம்ம வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்; அந்த வருணபகவானின் பிள்ளை ‘பிருகு’. இந்த பிருகுவிற்கும் பிருந்தை எனும் பெண்மணிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஒருவர் ‘வால்மீகி’; அடுத்தவர் அசுர குருவான ‘சுக்கிராச்சாரியார்’. பிருகுவின் மனைவியான பிருந்தை, நாரத மகரிஷியிடம் ஸ்ரீராம மந்திர உபதேசம் பெற்றவர்; அதன் காரணமாக, குரு தியானத்திலும் தலைசிறந்து விளங்கினார் பிருந்தை . எந்நேரமும் குருத்தியானம் தான்.
       
‘கர்பேபிபர்தி ஸத்ருசம் புருஷஸ்ய தஸ்ய’ எனும் சாஸ் திரத்தை அனுசரித்து, பெண்கள் எந்த நினைவாக இருக்கின்றார்களோ அதற்கு சமமான வடிவமுள்ள குழந்தையை உண்டு பண்ணுகிறார்கள் எனும் அர்த்தத்தால்,ஸ்ரீராம மந்திர ஜப காலத்தில் குருவான நாரத தியானத்திலேயே இருந்த பிருந்தைக்குப் பிறந்த வால்மீகி, நாரதரின் முகச் சாயலிலே இருந்தார்.

பிறந்த குழந்தை, தன் சாயலில் இல்லாமல் நாரதர் ஜாடையில் இருந்ததைக்கண்ட பிருகுவிற்கு சந்தேகம் வலுத்தது. யாராகஇருந்தால் என்ன? சந்தேகம் என்னும் பேய், யாரையும் விட்டு வைக்காது போலிருக்கிறது. பிருகுவிற்கு காரணம் இல்லாமல் சந்தேகம் வந்து விட்டது. அப்புறம் என்ன? சாயல்மாறிப் பிறந்த குழந்தையைக் கொண்டுபோய், காட்டில் ஒருமரத்தின் அடியில் விட்டு விட்டார் பிருகு. அந்தக் காட்டில் வேடர்களின் நடமாட்டம் அதிகமாக உண்டு.முனிவர் குழந்தையை விட்டுவிட்டுப் போன சற்று நேரத்தில்,அந்தப்பக்கமாக வந்த வேடர் தலைவர் ஹிம்சகன் என்பவர்,காட்டில் ஆதரவின்றி இருந்த குழந்தையைக் கண்டார்; எடுத்துப்போய், தானே வளர்க்கத் தொடங்கினார்.
       
 வேடர் தலைவர் அக்குழந்தைக்கு ‘பால்யா’ எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்; (வேறு பெயரும் சொல்வதுண்டு). அவர்களுடன் சேர்ந்த பால்யாவும் வேட்டையாடக்கற்றுக் கொண்டார்; நாளாகநாளாக, அக்காட்டின் பக்கமாக வருபவர் களிடம் வழிப்பறியும் செய்தார்; குடும்பஸ்தனாகவும் ஆனார். ஆம்! பால்யாவிற்குத் திருமணம் நடந்து, பெரிய குடும்பியாக ஆகி விட்டார்.
         
ஒருநாள்... சப்தரிஷிகள் அந்தப்பக்கமாக வந்தார்கள்; அவர்கள் மீது,பால்யாவின் பார்வை பதிந்தது; வழக்கம்போல் அவர்களையும் மிரட்டத் தொடங்கினார். ரிஷிகளோ கொஞ்சம்கூடப் பயப்பட வில்லை; மாறாக, “ஏனப்பா எங்களைத் தாக்க முயல்கிறாய்? எங்களிடம் செல்வம் ஏதுமில்லையே! ஆனால் ஒன்று நாங்கள் சொல்வதை நீ செய்தால், பெரும் செல்வந்தனாக ஆவாய்” என்றார்கள்.
          
பால்யாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை; “சொல்லுங்கள்! சொல்லுங்கள்! நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
     
மகரிஷிகள் தொடர்ந்தார்கள்;”நீ உன் குடிசைக்குப்போய், உன் குடும்பத்தார்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். ‘ஏராளமானவர்களைப் படாதபாடு படுத்தி, செல்வத்தைக் கொணர்ந்து உங்களைக் காப்பாற்றுகின்றேனே, அந்தப் பாவத்தில் நீங்கள் பங்கு பெறுவீர்களா?’ எனக்கேள்! அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ, அதை எங்களிடம் வந்து சொல்! உனக்கு வேண்டிய செல்வத்தை, நாங்கள் தருவோம்” என்றார்கள் மகரிஷிகள்.
பால்யா போய்,தன் குடும்பத்தாரிடம் கேட்டார். அவர்கள் சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது; “நீ செய்த புண்ணியத்தில்தான் எங்களுக்குப் பலன் உண்டே தவிர, பாவத்தில் எந்தவொரு பங்கும் எங்களுக்குக் கிடையாது” என்று பதில் சொன்னார்கள்.

‘பக்’கென்று இருந்தது பால்யாவிற்கு; வைராக்கியம் பிறந்தது; ஓடினார் சப்த ரிஷிகளிடம்; “மகரிஷிகளே! எனக்குப்பொருள் வேண்டாம்.இவ்வளவு நாட்களாகச் செய்யக் கூடாத பாவத்தையெல்லாம் செய்து, குடும்பத்தைக் காப்பாற்றினேன். ஆனால் யாருமே, என் பாவத்தில் பங்கேற்கத் தயாராக இல்லை. என் புண்ணியத்தில் மட்டும்தான் அவர்களுக்குப் பங்கு உண்டாம்.

“போதும்! போதும்! இனிமேல் எனக்கு, எந்தவிதமான குடும்ப வாசனையும் இல்லை. என் பிறவி கடைத்தேறும் படியாக, ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்!” எனக் கண்ணீர் மல்க வேண்டினார் பால்யா.முனிவர்களும் ‘மரா’ என்ற இரண்டு எழுத்துக்களை உபதேசித்தார்கள்; கூடவே, “நாங்கள்போய் திரும்பும் வரை, இதை ஜபம்செய்து கொண்டு இரு!” என்று சொல்லி மறைந்தார்கள்.

பால்யாவும் அம்முனிவர்களின் வாக்கை அப்படியே மேற் கொண்டு, ஜபத்தில் ஆழ்ந்தார்; உணவின்றி உறக்கமின்றி இரவு-பகல் என்ற வேறுபாடு இல்லாமல், ‘மரா மரா’ என்று ஜபித்து வந்தார்.அது’ராம ராம’எனும் தாரக மந்திரமாக மாறியது.
மரா மரா மரா மரா-என்று சொல்லிக்கொண்டே வந்தால், அது ‘ராம ராம’ என மாறி வருவதை உணரலாம் நாம்.
      
பல ஆண்டுகளாக ஜபம்செய்து வந்த பால்யாவைச்சுற்றி மண்புற்று வளர்ந்து, அவரை மூடி விட்டது. வெகுகாலம் சென்றபின், சப்தரிஷிகளும் திரும்பி வந்தார்கள். வந்தவர்களை அங்கிருந்த மண்புற்றும் அதிலிருந்து பால்யா செய்து கொண்டிருந்த ‘ராம’ ஜபமும் வரவேற்றன; மகிழ்ந்தார்கள் அவர்கள்; வருணபகவானை அழைத்து, முன் சொன்ன மண்புற்றைக் கரைக்க ஏற்பாடுகள் செய்தார்கள்.

மண்புற்று கரைந்தது; அதிலிருந்து ஜொலிக்கும் திருமேனியோடு ஒரு தெய்வீகமங்கல வடிவம் வெளிப்பட்டது. ஆம்! பால்யா தான், ராமநாம ஜபத்தால் அப்படிப்பட்ட திருமேனியை அடைந்திருந்தார்; வல்மீகம் என்ற சொல்லுக்கு, மண்புற்று என்பது பொருள். மண்புற்றில் இருந்து, அதாவது வல்மீகத்திலிருந்து வெளிப்பட்டதால், ‘வால்மீகி’ என்று அழைக்கப்பட்டார் பால்யா.(நாமும் இனி வால்மீகி என்றே பார்க்கலாம்).

புற்றிலிருந்து வெளிப்பட்ட வால்மீகியைக்கண்ட சப்த ரிஷிகளும் மகிழ்ந்தார்கள்; தங்கள் அருள் பார்வையால், வால்மீகியை முழுவதுமாக நனைத்தார்கள்; ‘சர்வக்ஞத்வம்’ எனும் அனைத்தையும் அறியும் சக்தியை வால்மீகிக்கு வழங்கினார்கள். தங்கள் ஞான திருஷ்டியால்,வால்மீகிக்கு சர்வ கலைகளும் கிடைக்குமாறு அருள் புரிந்தார்கள்.

மகா தபஸ்வியாகவும் மந்திரஸித்தி பெற்றவராகவும்  இருந்த வால்மீகி, ஆசிரமம் அமைத்து தங்கியிருந்த நேரம்! அவருக்குச் சீடர்கள் பலர் உண்டானார்கள்.ராம நாம ஜபத்தால், உள்ளத்தூய்மை பெற்று, தவசீலராக இருந்த வால்மீகியைப்பற்றித் தெரிந்துகொண்ட நாரதர், வால்மீகியைப் பார்க்க வந்தார்; வந்தவரைப் பார்த்த வால்மீகி அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வரவேற்றார்.வால்மீகியைப்பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்த நாரதர், வால்மீகியிடம் பேசத்தொடங்கினார். விளைவு?
    
ராமரைப்பற்றிய விவரங்களையெல்லாம் வால்மீகிக்குச் சொன்னார் நாரதர்.சொல்லிமுடித்த நாரதர் சென்ற பிறகு,  வால்மீயின் மனம் முழுவதும் நாரதர் சொன்ன ராம சரிதத்திலேயே ஆழ்ந்திருந்தது. ஏற்கனவே ராமநாம ஜபம்செய்து, அதில் ஸித்தியும் பெற்று முனிவராக மாறியவரல்லவா? கேட்க வேண்டுமா?
    
ஒருநாள்... வால்மீகி தன் சீடனான பரத்வாஜன் என்பவருடன் ‘தமசா’ நதிக்கு நீராடச்சென்றார். அப்போதுதான், ராமாயணம் உருவாவதற்கான நிகழ்ச்சி ஒன்று அரங்கேறியது.
          
அங்கிருந்த ஒரு மரத்தின் மீது ஆணும் பெண்ணுமாக இரு கிரௌஞ்சப் பறவைகள், கூடிக்குலாவிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்த வேடன் ஒருவன், அம்பை ஏவி ஆண்பறவையை அடித்துக்கீழே தள்ளி விட்டான்; அதைக் கண்ட பெண் பறவை, துணையை இழந்த துயரத்தால் கதறியது.
          
அதைப் பார்த்தார் வால்மீகி; கருணை நிரம்பிய அவர் மனம், “ஹா! கஷ்டம்!” எனப் புலம்பியது; வேடன் செய்த செயலால், பெண்பறவை துயரத்தில் துடித்துக் கதறுவதைக் கண்ட
வால்மீகி, வேடனுக்கு சாபமிட்டார்.
                   
மாநிஷாத ப்ரதிஷ்டாம் த்வம்
அகம : சாச்வதீஸ்ஸமா :
யத்க்ரௌஞ்ச மிதுனாதேகமவதீ :
காம மோஹிதம்
- எனும் பாடல் சாப வடிவில் வெளிப்பட்டது.
கருத்து: வேடனே! நீ எந்தக்காரணத்தால் கிரௌஞ்சப் பறவைகளை நெருங்கி,அதன் இன்பவாழ்விற்குத் தடையாக ஒன்றைக்கொன்றாயோ; அதன் காரணமாக இனி நீ அதிக காலம் ஜீவிக்க மாட்டாய்! அந்தத்துயரம் உனக்கும் உண்டாகட்டும்!  
       
பார்ப்பதற்கு, இது சாதாரணமாக சாபம்
போலத் தோன்றினாலும், பிரம்மாவின் அருளால் வால்மீகியிடம் இருந்து வெளிப்பட்ட வாக்கு இது. சாட்சாத் சரஸ்வதீ தேவியே வால்மீகியின் வாக்கிலிருந்து, இவ்வாறு ஸ்லோக ரூபமாக வெளிப்பட்டார் என்பது மகான்களின் வாக்கு.
             
ஆம்! வால்மீகியிடமிருந்து வெளிப்பட்ட அப்பாடல் வேடனுக்குக் கொடுக்கப்பட்ட சாபம்போல இருந்தாலும்,  மங்கலகரமாக ராமாயணத்தை ஒரு பாடலிலேயே சொல்வதாகவும் அமைந்த பாடல் இது.அதன்படியாக உள்ள விளக்கத்தைப் பார்க்கலாம்!
“லட்சுமியை மார்பில் கொண்ட திருமார்பா! ராவணன்- மண்டோதரி தம்பதியரில், மன்மத வசப்பட்ட ராவணனை எந்தக் காரணத்தால் கொன்றாயோ, அந்தக் காரணத்தால் அனேகமான பல்லாண்டுகள் மேன்மையை அடைவாயாக!” எனும் ஆழ்ந்த பொருளும் உண்டு.

வேடனுக்கு சாபம் கொடுத்த வால்மீகி, அதையே நினைத்துக் கொண்டிருக்கையில், பிரம்மதேவர் வந்தார் ; “வால்மீகியே! எம் விருப்பத்தாலேயே உம் வாக்கிலிருந்து அந்தப் பாடல் வெளிப்பட்டது. அதன்படியே ராம சரித்திரத்தை, நீர் செய்வீராக!” என்று விவரித்துக்கூறி மறைந்தார். பிறகென்ன? ராமாயணம் உருவானது. வால்மீகியால் உருவானதால், ‘வால்மீகி ராமாயணம்’ எனப்படுகிறது.
         
இவ்வாறு பல விதங்களிலும் தான் அனுபவித்ததை எழுதிய வால்மீகி, தொடக்கத்தில் பார்த்தபடி அந்த ராமாயணத்தை, ஸ்ரீசீதா-ராமர்களின் குழந்தைகளான குசன்-லவன் ஆகியோருக்கு உபதேசித்து, அதை ராமரின் திருமுன்னாலே பாடச்செய்தார்.பலவிதமான உபதேசங்களும் அருளுரைகளும் வழிகாட்டுதல்களும் கொண்ட மாபெரும் இதிகாசம் ராமாயணம் ! படிப்போம்!
உணர்வோம்! உயர்வோம்!

(தொடரும்)


Tags : Characters ,Valmiki ,
× RELATED இசைக்கு வயது கிடையாது: வித்யாசாகர்