மர வழிபாட்டின் வேர்களைத் தேடி...4

சங்க இலக்கியத்தில் ஒரு மரத்தில் இருந்த காயை சாப்பிட்ட ஒரு இளம் பெண்ணை நன்னன் என்ற மன்னன் கொன்று விடுகிறான். அவனுடைய பெற்றோர் அந்தப் பெண்ணின் எடைக்கு ஒன்பது ஒன்பது அதாவது எண்பத்தொரு மடங்கு தங்கம் தருவதாகச் சொல்லியும் கூட அவன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவளைக் கொன்று விடுகிறான்.

இதற்கு காரணம் அந்த மரம் அவனுடைய தெய்வம்; அவனுடைய குலம் காக்கும் காவல் மரம். அந்த தெய்வ மரத்திலிருந்து விழுந்த காயை அவள் எச்சில் படுத்தியதால் அந்த மரத்தையே அவள் அசிங்கப்படுத்தியதாகக் கருதினான். எனவே அவளை அவனால் மன்னிக்க முடியவில்லை. அவளுக்கு கொலைத்தண்டனை அளிக்கிறான். இவளே இப்போது மாசாணி அம்மனாக வழிபடப் படுகிறாள். குலமுதல்வன் அல்லது தெய்வக் குறியீடாக கருதப்படும் மரங்கள் அதன் இனத்தவர்களால் மிக உயர்வாகப் போற்றப்பட்டன.

சேர, சோழ பாண்டியர்கள் தங்களுடைய அடையாளமாக பணம் பூ, அத்திப் பூ, வேப்பம் பூ ஆகியவற்றை சூடிக் கொண்டதும்கூட இந்த மர வழிபாட்டின் பிந்தைய வடிவங்களே ஆகும். அதுபோல சங்க இலக்கியத்தின் புறத்திணை வடிவங்களில் வெட்சி, கரந்தை, நொச்சி வாகை போன்ற மலர்கள் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அடையாளப் பூக்களாக கொள்ளப்பட்டன. இவற்றையும் மர வழிபாட்டின் எச்சங்களாகவே புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு குழந்தை பிறந்த போது மரம் நட்டு வளர்ப்பதும் கன்றுக்குட்டி வாங்கி விடுவதுமான பழக்க வழக்கங்கள் இருந்துள்ளன.

அவ்வாறு மரங்களை வைத்து வளர்த்து வருபவர்கள் அந்த மரங்களை தங்களுடைய வாழ்க்கையோடு இணைத்து பார்க்கும் ஈரநெஞ்சம் உடையவர்களாக இருந்து வந்தனர். தன் காதலனோடு பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண் ‘புன்னை மரத்திற்கு அடியில்போய் நின்று பேச வேண்டாம் வா; அவள் என் அம்மா வைத்து வளர்த்த மரம் ;எனவே அவள் எனக்கு அக்கா முறை ஆகிறாள்; அக்காவின் முன்பு காதலனோடு பேசுவதற்கு எனக்கு கூச்சமாக இருக்கிறது’ என்று ஒரு இளம் காதலி தன் காதலனிடம் சொல்வதாக சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் உண்டு. ‘நும்மினும் சிறந்தது நுவ்வை யாகும் என்று, அன்னை கூறினள் புன்னையது சிறப்பே’ என்று தன் தாய் அந்தப் புன்னை மரத்தின் சிறப்பைப் பற்றிக் கூறியதை தன் காதலனிடம் அப்பெண் எடுத்துரைக்கின்றாள்.

 ஆதி மனிதனின் அறிவியல் சிந்தனையை வெளிப்படுத்துவதாகவும் இருப்பது ஆலமர அரசமர வேப்பமர வழிபாடுகளாகும். இந்த மூன்று மரங்களும் விஞ்ஞான ரீதியாக மனிதனுக்கு மிகுந்த நன்மையைத் தரக் கூடியவை. அரச மரம், வேப்ப மரம் ஆகியவை அதிக ஆக்ஸிஜனை வெளியேற்றுவதால் அந்த மரத்தடியில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் ரீதியான இருந்த கோளாறுகள் விலகி நல்ல ஆரோக்கியம் உண்டாகிறது. எனவே அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் சுற்ற வேண்டும் என்று ஒரு பழக்கம் மக்களிடையே வளர்க்கப்பட்டது.

 இரண்டு மரத்தையும் தனித்தனியாக சுற்றுவதை விட சேர்ந்து சுற்றலாம் என்ற நோக்கத்தில் தான் அரசமரத்துக்கும் வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உண்டானது. அரச மரம் என்பது ஆணாகவும் வேப்பமரம் என்பது பெண்ணாகவும் கருதி இரண்டு மரத்துக்கும் திருமணம் செய்து வைப்பதாக ஒரு சடங்கினை நிறைவேற்றுகின்றனர். இரண்டையும் அருகருகே வைத்து வளர்த்து அந்த மரத்தை சுற்றி வருவதற்காக பக்தர்களுக்கு அல்லது மனிதர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றனர். வடக்கே துளசிக்கு இவ்வாறு திருமணம் செய்விப்பதுண்டு.

வெளிநாடுகளிலும் மரங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்தது. இதனால் வேளாண்மை செழிக்கும் மரங்கள் நன்கு வளரும் என்று நம்பினர். வேப்ப மரம் என்பது பெண்ணாக கருதப்பட்டதால் வேப்ப மரத்தின் கீழ் மாரியம்மன் வழிபாடும் இணைந்து கொள்கிறது. மாரியம்மன் வழிபாடு பொதுவாக வெயில் காலங்களில் கோடை காலங்களில் நடைபெறுவது உண்டு. இதற்கு முக்கிய காரணம் கோடை காலத்தில்தான் அம்மை நோய் வரும் வாய்ப்பு உண்டு.

இந்த அம்மை நோய்க்கு அக்காலத்தில் இருந்து வந்த ஒரே மருந்து வேப்ப மரத்து காற்றும் வேப்பிலையும் ஆகும். வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து அதனை உண்ணக் கொடுப்பதன் மூலமே அம்மை நோயை சுகப்படுத்த முடிந்தது. எனவே அம்மை நோய் வராமல் இருப்பதற்காக வேப்பமரத்தின் கீழ் மாரியம்மனை வைத்து வழிபட்டனர். வேப்ப மரத்தைச் சுற்றி வருவதற்காகவே இந்த மாரியம்மன் தெய்வ வழிபாடும் தோன்றியது. அதிக நேரம் வேப்ப மரத்தின் கீழ் இருப்பவர்களுக்கு அம்மை வைசூரி போன்ற நோய்கள் வருவதில்லை. அம்மைத் தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு இன்றைக்கு உலகத்திலேயே வைசூரி எனப்படும் பெரியம்மை தடுக்கப்பட்டு விட்டதால் அம்மை நோயின் அபாயங்கள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிவதில்லை.  

வைசூரி எனப்படும் பெரியம்மை தாக்குதல் நடந்தபோது பலருக்கு உடல் முழுக்க அம்மைத் தழும்புகளும் சிலருக்கு கண் பார்வையும் கூட போய் விட்டது. இவர்களை வாழையிலையில் படுக்க வைத்து அவர்களுக்கு குளிர்ச்சியூட்டி வந்தனர். இன்றைக்கு வைசூரி எனப்படும் பெரியம்மை தாக்குதல் உலகில் எங்கும் இல்லை என்று நம்பப்படுகிறது. இந்நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. மரங்களில் உறையும் தெய்வங்கள் அல்லது மரங்களில் உறையும் ஆவிகள் நல்ல ஆவியாக இருக்கும்போது அதனை தெய்வம் என்றும் கெட்ட ஆவியாக அந்த மரத்தின் பக்கம் நடந்து போகின்றவர்களுக்கு அச்சத்தை கொடுக்கக்கூடிய கெட்ட ஆவி அல்லது துஷ்ட ஆவி என்றும் அழைக்கின்றனர்.

மரங்களின் கீழ் உறையும் நல்ல ஆவிகள் அங்கு அம்மனாகக் கருதி சிலை எடுக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படும். வன்னி மரத்தையும் வேப்ப மரத்தையும் அம்மன் பெயரில் வழிபடுகின்றனர். புளிய மரத்தில் பேய் இருக்கும் என்ற நம்பிக்கை புளியமரத்தின் கீழ் ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் ஏற்பட்டது. அங்கு மூச்சுத் திணறல் ஏற்படும். புளிய மரத்தின் கீழ் இரவில் உறங்கும் பொழுது ஆக்சிஜன் குறைவாகக் கிடைப்பதால் மூச்சு விட முடியாமல் நெஞ்சில் யாரோ அமுக்குவது போலத் தோன்றும்.

 இதைத்தான் புளிய மரத்தடியில் இருக்கும் பேய் பிசாசு அல்லது அமுக்கு பிசாசு என்றெல்லாம் அக்காலத்தில் சொல்லி வந்தனர். பொதுவாகவே மரத்தின் கீழ் இரவில் இருப்பது கூடாது. அப்போது இலைகள் கரியமில வாயுவை வெளியேற்றும். இதனால் மனிதர்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் திணறுவர். புளிய மரத்தில் ஆக்சிஜன் மிகமிக குறைவாக இருக்கும்.

மரங்களில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நம்பப்படும் போது அந்த மரத்தில் பேய் இருக்கிறது என்ற நம்பிக்கை உண்டாகி அந்த நம்பிக்கை பரப்பப்படுகிறது. சில பேய் பிடித்தவர்களுக்கு மரத்தில் போய் அந்த பேயை ஆணியடித்து இறக்கி விடும் பழக்கம் இருந்ததால் ஆணியடித்த மரங்களில் பேய் இருப்பதாகவும் துஷ்ட ஆவி இருப்பதாகவும் நம்புகின்றனர். இதனால் மர வழிபாட்டில் நல்ல மர வழிபாடும் உண்டு பேய் மரங்களும் உண்டு.

முனைவர்
செ. ராஜேஸ்வரி


Tags :
× RELATED சிவராத்திரி வழிபாடு