×

எட்டுத் திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே!

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-52

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்

பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே !
பாடல் எண் - 37

உலகிலுள்ளோர் திருமணம் செய்வதற்கு பெண்களிடத்தில் சில பண்புகளையும், ஆண்களிடத்தில் சில தகுதிகளையும், எதிர் பார்க்கின்றார்கள். ஜாதகம் பார்ப்பவர்களோ பத்து விதமான பொருத்தம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்.உலகியலின் இந்த இயல்பை அடிப்படையாகக் கொண்டு மிக உயர்ந்த சிவ, சக்தியை பற்றிய உண்மையை நமக்கு  விளக்க முயல்கின்றார். அபிராமி பட்டர்.சாத்திரம் மிக பெரிய தகவல்களை மிக சிறிய செயல்களில் மூலமாக விளக்க முற்படும். அவற்றை அணுகி ஆராய்து பார்க்க வேண்டும். அன்றி சாதாரணமாக உண்மைகளை உணர்ந்து கொள்ள இயலாது.

சாக்த தந்திரங்களில் தக்ஷிணாசாரம் - வலது வழி, வாமசாரம் - இடது வழி என்ற சொற்களை கையாள்கிறார்கள்.
 (உதாரணமாக) தக்ஷிணாசாரத்தில் உயிர்களை வதைத்து வழிபாடு செய்யமாட்டார்கள்.
 சைவ உணவு வகைகளை மட்டும்
இறைவனுக்கு அன்பாய் அர்ப்பணிப்பர்.

 தக்ஷிணாசாரத்திற்கு நேர் எதிராக உள்ளது வாமாச்சாரம். இந்த வழியில் பிற உயிர்களை துன்புறுத்தி அசைவ படையல்களாகிய மாமிசம், மது இவற்றை வைத்து வழிபாடு செய்வர். இந்த இரண்டு சமயத்தை அடிப்படையாகக் கொண்டு தர்மம், அதர்மம் என்பதை  இடப்பக்கம், வலப்பக்கம் என்ற சொற்களால் உமையம்மையை தாழ்த்துவது போல் உயர்த்துகின்றார். சிவபெருமானை உயர்ந்த சொற்களால் தாழ்த்துகின்றார். இப்படி நமக்கு விளக்குவதன் மூலம் சிவ சக்தி சமம் என்பதை உணர்த்துவது பட்டருக்கே உரிய தனித் தன்மை. அதை காண இனி பாடலுக்குள் நுழைவோமாக.
 
‘‘கைக்கே அணிவது கன்னலும் பூவும் ’’
ஆகமம் மற்றும் சிற்பத்திலுள்ள சாஸ்திரத்தின் படி தெய்வத்தின் பெயரானது அவற்றின் கையில் உள்ள ஆயுதங்கள், அமைப்பு, நின்ற இருந்த, கிடந்த நிலையைக் கொண்டே அறியப்படுகிறது.

  இவற்றை கொண்டே ரூபத்தியானங்களும் அமைகின்றன.
  (உதாரணமாக) யானை தலையிருந்தால் விநாயகர், கத்தி கேடயம் இருந்தால் வீரபத்ரர் என்று அடையாளம் காண்பர்.
 அதே முறையில் ‘‘கைக்கே அணிவது கன்னலும் பூவும்’’ என்ற ஆயுதங்களை வைத்து நோக்கினால் கன்னல் - (கரும்பு) பூ - (மலர்கள்) இவ்விரண்டும் மன்மதனின் ஆயுதங்களாம்.

கரும்பை வில்லாகவும், அம்பை மலராகவும் கொண்டு மன்மதனானவன் வாழும் உயிர்களுக்கு இச்சையை (விருப்பத்தை) தோற்றுவிப்பான். மெய், வாய், கண், மூக்கு, செவி முதலான ஐம்புலன்களும். தீண்டல், சுவைத்தல், காணுதல் நுகர்தல், கேட்டல் என்ற செயல்களின் மூலமாக மனதிற்குள் ஆசையை தூண்டுகின்ற கருவியே ‘‘கன்னலும் பூவுமாகும்’’ இதையே லலிதா ஸஹஸ்ர நாமம் ‘‘மனோ ரூபேக்ஷு- கோதண்டா பஞ்சதன்மாத்ர - ஸாயகா என்கிறது.
மன்மதனுக்கே உரியதான ‘‘கன்னலும் பூவும் ’’
எப்படி உமையம்மையிடத்து வந்தது ?

 சூரபத்மன் என்ற அசுரனை அழிப்பதற்காக, முருகப் பெருமானின் தோற்றம் அவசியமாயிற்று. அதனால் தனியாக இருந்து தவம் செய்யும் சிவனையும், இமவானின் மகளாக பிறந்து மணப்பருவமடைந்த பார்வதிக்கும் திருமணம் செய்ய நினைத்தனர். அதன் பொருட்டு தேவர்களின் தூண்டுதலினால் சிவனின் தவத்தை கலைப்பதற்கு மன்மதனை ஏவினார்கள்.

அப்பொழுது மன்மதன் ‘‘கன்னலும் பூவும் ’’ கொண்டு சிவபெருமான் மீது அம்பு தொடுத்தான். சிவபெருமானானவர் மன்மதனை தனது நெற்றிக் கண்ணால் அழித்தார்- என்கிறது குமார சம்பவம். மன்மதனின் மனைவியான ரதியானவள் அழுது வேண்ட சிவபெருமானானவர் தான் பார்வதியை மணக்கும் போது மன்மதன் உயிர் பெற்று எழுவான் என்று அருள் புரிந்தார். உயிர் பெற்று எழுந்த மன்மதனின் வடிவம் ரதியன்றி வேறு யாராலும் அறிய முடியாது எனவும், உருவமற்றவனாய் திகழ்வான்  எனவும் அருள் புரிந்தார். அதனால் மன்மதனுக்கு அனங்கன் என்று பெயர்.

இறைவனின் திருமணத்தன்று உயிர்த்தெழுந்த மன்மதனானவன் ‘‘கன்னலையும், பூவையும் தனது கிரீடத்தையும் அவர்கள் திருவடியில் சேர்த்து சரணாகதி அடைந்தான். அதனால் உமையம்மையின் ஆயுதமாக ‘‘கன்னலும் பூவும் அமைந்தது. இந்த தோற்றத்தை தந்திர சாத்திரங்கள் காமேஸ்வரன் காமேஸ்வரி என்று அழைக்கிறது.

இந்த ‘‘கன்னலும் பூவும் ’’ மட்டும் தாங்கிய திருமேனியானது எப்பொழுதும் சிவபெருமானுடன் இணைந்தே இருக்கும். இது தம்பதிகளிடம் எண்ண ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும்.‘‘கமலம் அன்ன மெய்க்கே ’’ உமையம்மையினுடைய திருமேனியை கமலம் என்ற தாமரையோடு ஒப்புமை காட்டி பேசுகின்றார். அந்தாதியில் கமலம் என்ற வார்த்தையை ஆறு இடங்களில் பயன்படுத்துகின்றார்.மெய் என்ற வார்த்தையை மூன்று இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார் பட்டர்.
 
‘‘கமலம் அன்ன மெய்க்கே’’
  உமையம்மையினுடைய திருமேனியை கமலம் என்ற தாமரையோடு ஒப்புமை காட்டி பேசுகின்றார். அந்தாதியில் கமலம் என்ற வார்த்தையை ஆறு இடங்களில் பயன்படுத்துகின்றார்.

  மெய் என்ற வார்த்தையை மூன்று இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார் பட்டர்.
  ‘‘கமலம் அன்ன மெய்’’ - என்பதனால்
கமலத்தையும், மெய்யையும் சேர்த்து ஏதோ ஒன்றை சொல்ல விழைகின்றார்.
   அது என்ன என்று புரிந்து கொள்ள அதைப் பற்றிய வரிகளை ஆய்வதனால் தெளிவுற அறியலாம். கமலத்தை பெயராக உடைய ஒரு
உமையம்மையை குறிப்பிடுகின்றார்.

   ‘‘மலர்க் கமலை’’ -1 ‘‘வாசக்கமலம்’’ - 32 என்ற வார்த்தையால் வசிப்பிடத்தை குறிப்பிடுகின்றார். இங்கு வசிப்பிடம் என்பது நம் வீடு போல் அல்ல. தேன் கூட்டில் தேனீக்கள் கூட்டமாக வசிக்கும். அப்படி உமையம்மையின் திருவடியை இருப்பிடமாக கொண்டு வசிக்கும் தூய ஆன்மாக்களை இங்கு நமக்கு சூட்டுகின்றார்.

   ‘‘அளியார் கமலத்தின் ஆரணங்கு ’’ - பாடல் எண்-  82 என்பதனால் கமலத்தை தன் ஆசனமாகக் கொண்டவள்.
‘‘சிறக்கும் கமலத்திருவே ’’- பாடல் எண் - 89 என்பதனால் ஆன்மாக்களை சிறக்கச் செய்கின்ற பண்பை உடையைவள் என்கிறார்.

அஹிம்சா - இன்னை செய்யாமை
இந்திரிய நிக்கிரஹம் - பிரம்மச்சரிய விரதம்.
ஷமா -  புலனடக்கத்துடன் கூடிய பொருமை.
தப - வழவாமை.
ஞான - ஆன்மா மற்றும் இறை அனுபவ அறிவு.
தான -  கொடை.
பாவம்   - இருத்தல் இயல்பு மெய்யுணர்வு.
சத்யம்   - அழியாத மாறு படாத தன்மை.
இந்த எட்டும் ஆன்மாவை சிறக்கச் செய்யும் பண்புகளாகும்.

‘‘கமலத்தின் மீது அன்னமாம் ’’ - பாடல் எண் - 99 என்ற வரியால் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை குறிப்பிடுகின்றார்.
‘‘பத்ம ஹம்ஸோகம்’’  என்பது உமையம்மையை முழுமுதற்பொருளாக கொண்டு வணங்குவது. தன் உடலுக்குள்ளேயே சொல்லுகின்ற மந்திரம். இந்த மந்திரத்தையே.

 ‘‘பத்ம  ஹம்சம் ’’ என்ற வடசொல்லின் தமிழ் மொழி பெயர்பான ‘‘கமலத்தின் மீது அன்னமாம் ’’
பாடல் எண் - 99 என்று குறிப்பிடுகின்றார்.
  ‘‘நின் பாத விரைக்கமலம் ’’- பாடல் எண் - 83 - உமையம்மையின் திருவடியை குறிப்பிடுகின்றார். மெய் என்ற வார்த்தையை உடல் என்ற பொருளில் பயன்படுத்துகின்றார்.

 ‘‘மெய்யில் பதித்தே’’ - பாடல் எண் - 76. ‘‘பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய் - பாடல் எண் - 57 நிலைத்த மாறுபடாத தன்மையை மெய் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். மேலும் பொய்யும் மெய்யும் என்று இணைத்தால். உள்ளது உள்ளபடி என்ற பொருளில்
பயன்படுத்துகிறார் ‘‘கமலம் அன்ன மெய்கே’’ என்ற சொல்லால் சாத்திரங்களில் .‘‘வித்யா தேகம் ’’ எனப்படும் உமையின் உருவத்தன்மையை விளக்குகின்றார். ஆன்மார்க்களை தன் உணர்வு பெறச் செய்கின்றவள், உள்ளது உள்ளபடியே ஆகிற இறைவியின் திருமேனியை ‘‘கமலம் அன்ன மெய்கே’’ என்கிறார்.

‘‘அணிவது வெண் முத்து மாலை ’’ பண்டைய காலத்தில் தூத்துக்குடி, புகார் போன்ற தென்பகுதியில் உள்ள கடற் பகுதியில் முத்து கிடைக்கும். எளிதில் வேறு எங்கும் கிடைக்காது. வடகோடியில் உள்ள இமயமலையில் தெற்கத்திகாரர்கள் கொண்டு சென்று விற்றதனால் அதிக விலையுடையது. வடகோடியில் உள்ள சாமான்யமான பொது மக்களால் விலை கொடுத்து வாங்க இயலாதது. பெரும் மதிப்பிற்குறியதும் ஆகிற இந்த முத்தாரத்தை சிறப்பாக குரிப்பிடுகின்றார்.

  உமையம்மை அணிந்திருந்த பிற அணிகலன்களை விட அதிக மதிப்புடையது என்பதை நமக்கு மறைமுகமாக விளக்குகின்றார்.
  மேலும் முத்து மாலையைக் கொண்டு மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு ஞானம் பெருகும் என்று சொல்வர். அபிராமி பட்டர் அதை தானாக உணர்ந்து பிறருக்கு உணர்த்தவும் விரும்பினார். ‘‘முத்தாரமும் ’’- 53 ஞானம் தேவைப்படுவதாயின் அந்த முத்து மாலையை சிறப்பித்து கூறுகிறார்.

 ‘‘மாத்தவளே’’ - 13, என்பதனால் தவம் செய்வதனால் ஏற்படும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத்  தந்து நன்மை பயப்பது முத்து மாலை.
 மேலும் சிற்பசாஸ்திரம் அமைதி குறிப்பையும், உள்ள மகிழ்ச்சியையும் குறிப்பதற்கு முத்து மாலையை அணிவிப்பர் இதையே வேதம்
‘‘ஆருத்ராம்’’ என்கிறது.

‘‘விட அரவின்  அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் ’’
இடுப்பில் அணியும் உடையை பற்றி குறிப்படும் அபிராமி பட்டர் இருப்பின் வடிவத்தையும் இங்கே குறிப்பிடுகின்றார்.
  சிற்ப சாஸ்திரமானது - உமையம்மையை அமைக்கும் போது பாம்பு, உடுக்கை, வஜ்ரம் என்ற ஆயுதத்தை ஒத்த வடிவை கொண்டதாக அமைக்கப் பட வேண்டும் என்கிறது. உமையம்மையின் இடையின் புறத் தோற்றமானது சிற்ப சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடியே பாம்பு போன்று அமைந்திருப்பதை ‘‘விட அரவின்பை’’ என்று அபிராமி பட்டர் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

  உமையம்மையின் அழகையும், இளமையையும் சூட்டுவதற்காக ‘‘விட அரவின் பைக்கே’’ எனற வார்த்தையை பயன்படுத்துகின்றார். ஸ்ரீ வித்யா வழிபாட்டு நெறியில் ‘‘யெளவனாரம்ப ரூடா’’ இளமை துவங்கும் பருவத்தை கொண்டவளாக தியானிக்கிறார்கள்.

  முதுமையாகவோ, குழந்தையாகவோ தியானிப்பதனால் வெவ்வேறு பலன் உண்டாகும். அந்த வகையில் ‘‘விட அரவின் பைக்கே’’ என்பது இளமையின் துவக்க பருவமே. இப்படி தியானிப்பது என்பது தியானிப்பவனுக்கு புலன் நுகர்வு சக்தியையும், மன மகிழ்ச்சியையும், தரவல்ல சூழலை  உருவாக்கும். அதை அனைவரும் விரும்புவதாலேயே மக்கள் நோக்கில் அந்த பயனை பெற ‘‘விட அரவின் பைக்கே’’ என்று உமையம்மையை குறித்து தியானிக்கிறார்.
பன்மணிக் கோவையும் - என்பது இடையிலே அணிந்து கொள்ளக் கூடிய பல்வேறு மணிகள் வரிசையாக கோர்க்கப் பட்ட அணிகலனாகும். இதை பொற்கொல்லர்கள் மூன்று விதமாக வடிவமைப்பார்கள்.

சிறு குழந்தைகளுக்கு (ஆண், பெண், இரு பாலாருக்கும்) தங்கம் அல்லது வெள்ளியில் மணிகள் ஒன்றோடு ஒன்று உராய்வதனால் ஒலி ஏற்படும் வகையில் அமைந்திருக்கும். இது குழந்தைகள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள உதவும். கதை, சங்கு, சக்கரம், தாமரை, வாள் இவை பொறிக்கப்பட்டகாசை அரையணியாக அணிவிப்பர். பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள், இளம் வயதில் சங்கு, தாமரை கொட்டை துளசி இந்த மூன்றையும் கோர்த்து இடையைச் சுற்றி அணிவர்.

  இளம் வயதில் உள்ள பெண்கள் இதை அணிவதனால் அழகும், பிறந்த வீட்டிற்கு பெருமையும், புகுந்த வீட்டிற்கு வளமையும் கிட்டும். இந்த அணியை விஷ்ணுவை வணங்கி அணிந்து கொள்ள வேண்டும். ஆணுக்கு ஐம்படை என்றும், பெண்ணுக்கு முப்படை என்பது இன்றும் வழக்கில் உள்ளது. அதே போல் பூப்பெய்தினால் இம்மூன்றையும் (தாமரை கொட்டை, சங்கு, துளசி) அணிகலனாக அணிவிப்பர். இந்த அணிகலன் பூப்பெய்தியதை அறிவிப்பதாகும். இது தனி அணிகலன் அல்ல.

பூப்பெய்தினால் தாய்மாமன் வழி வைக்கும் வரிசையில் இடம்பெறும் இடை அணிகலனாகும். இது முதலில் சூட்டப்படும் இடை அணிகலனும், இடையில் உடுத்தும் முதல் ஆடையும் என்பர். இதையும் ‘‘பைக்கே அணிவது பன்மணிக் கோவையும்’’ என்ற வரியால் குறிப்பிடுகின்றார்.

   சிற்பசாஸ்திரம் மணி என்பதற்கு விஷ மணிகளையும் குறிப்பிடுகிறது. காளியைப் பொறுத்தவரை தேள் கொடுக்கில் தோன்றிய மணியையும் (விஷமணி) நாகரத்தினம் என்ற பாம்பின் விஷமணியையும் இடையில் அணிந்திருப்பாள். இதை காளி த்யானமானது ‘‘லூதா விருச்சிக சஞ்சின்னம் நாகாபரண பூஷிதாம் ’’ என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

  ‘‘பன்மணிக் கோவை ’’- என்பது ருத்ராட்அத்தையும் குறிக்கும். ருத்ரசக்தியான கௌரி, ரௌத்ரி, இவர்கள் தலை, தோள், கழுத்து, இடை போன்ற உறுப்புகளில் ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பார்கள். இது ரௌத்ரியின் தியானத்திலும் கூறப்படுகிறது.

  இதை ‘‘அட்ஷமாலா தரம் ’’ என்ற வார்த்தையால் நன்கு உணரலாம்.

குறிப்பாக முத்துக் குளிப்பவர்கள் தனது வம்சத்தில் தோன்றியவர்களுக்கு முத்து மாலையையே இடையில் (இடுப்பில்) அணிவிப்பர்.கோமேதகம் , நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மணிக்கம், வைரம், வைடூரியம். முத்து இந்த மாணிகள் ஒன்பதையும். சரங்களாக கோர்த்து அறை அணியாக பட்ட மகிஷிமட்டும் அணிந்து கொள்வார்கள். இது விலை உயர்ந்ததும் சாமானியர்களால் அணிய முடியாததுமாகும்.

  (சில சின்னங்களை அரசர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். குடிமக்கள் இதை பயன்
படுத்த மாட்டார்கள். உதாரணம் வெண் கொற்றக் குடை, சிம்மாசனம், கிரீடம் ) அரசர்கள் இந்த பன்மணிக் கோவையுடன் விலை மதிப்புள்ள பட்டையும் இணைத்தே அணிவர்.

 இந்த இடத்தில் இமவான் மகளானதால் அவள் அணிந்துள்ள வற்றை ‘‘பன்மணிக்கோவையும் பட்டும் என்று குறிப்பிடுகின்றார்.

  (தொடரும்)

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா