ஜகம் ஆள அருள்வார் அகத்தீஸ்வரர்

அகத்திய மகரிஷி இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை புரிந்துள்ளார். அகத்தியர் பூஜை செய்ததால் இத்தல ஈஸ்வரர், அகத்தீஸ்வரர் என்று போற்றலானார்.சுகபிரம்ம ரிஷி தனக்கு ஏற்பட்ட தீராத (குன்ம வியாதி) வயிற்று வலி தீர, இத்தல சிவபெருமாளைப் பூஜித்து விமோசனம் பெற்றுள்ளார்.  கிளிமுகம் கொண்ட சுகபிரம்மரிஷி இத்தலத்தில் வழிபட்டதனால் இத்தலம் கிளியனூர் என்றானது. வடமொழியில் சுகபுரி என்றழைப்பர். திருமாலைத் தாங்கும் நாகங்களில் முதன்மையான ஆதிசேஷனும் இத்தல சிவலிங்கமூர்த்தியை வழிபாடு செய்துள்ளார்.

இதையே...

 

‘‘பன்னி நின்ற பனுவல் அகத்தியன்

உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்

மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்

முன்னில் நின்ற கிளியன்ன வூவனே!’’

... என்று  சம்பந்தர் மெய்ப்பினைக்

கூறுகின்றார்.

காலவ மகரிஷி தனது இரண்டு பெண் குழந்தைகளின் தீராதப் பிணி நீங்க, இப்பதி வந்து தங்கி, தவமுடன் பூஜையும் புரிந்து திருவருள் பெற்றுள்ளார். இத்தலத்து அம்பிகையை மஹா சிவராத்திரியின்போது மூன்றாம் காலத்தில் நந்திகேஸ்வரரே பூஜை புரிவதாக தல மஹாத்மியம் தெரிவிக்கின்றது.ஊரின் வடகிழக்கே உள்ள பெரிய ஏரியின் கீழக்கரையில் அமைந்துள்ளது ஆலயம். முதலில் செங்கற்தளியாக இருந்த இக்கோயிலை மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மனாகிய முதலாம் பராந்தகச் சோழன் கருங்கற்த்தளியாக மாற்றியமைத்துள்ளான்.கிழக்கும் - மேற்குமாக இரண்டு வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயிலின் வழியாக உள்ளே நுழைய... கிழக்கு பார்த்து அம்பிகையும், மேற்கு திசை பார்த்து சுவாமி ஸ்ரீ அகத்தீஸ்வரரும் அருட்பாலிக்கின்றனர்.

கிழக்கு முகமாய் நின்ற வண்ணம் மேலிரு கரங்களில் சங்கு- சக்கரமேந்தி, புன்னகைத் ததும்ப அருள் சிந்துகின்றாள் அன்னை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. கரத்தில் சிறு பின்னம் ஏற்பட்டக் காரணத்தால், கும்பாபிஷேகத்தின் போது, இந்த அம்பாள் சிலையை மாற்றிட தீர்மானித்திருந்தபோது, ஆலயப் பொறுப்பாளரின் கனவில் தோன்றிய அம்பாள், ‘கையொடிந்த உன் தாயை தூக்கி எறிந்து விடுவாயா?’ என்று கேட்க, பின் பழைய அம்பாள் சிலைக்கே

குடமுழுக்கு நடத்தினார்கள்.சுவாமியும் - அம்பாளும் இங்கு மாலை மாற்றும் கோலத்தில் எதிரும் - புதிருமாக வீற்றருள்வது சிறப்பு!. நிருருதி மூலையில் கணபதி சந்நதியும், வாயு திசையில் கஜலட்சுமி மற்றும் கந்தன் சந்நதியும் அமைந்துள்ளன.ஆலயத்தின் தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் கண்வ தீர்த்தம் ஆலயத்திற்கு மேற்புறம் அமையப் பெற்றுள்ளது.

அறநிலையத்துறைக்கு சொந்தமான இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.தீராத பிணியில் வாடுபவர்கள் இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து, அதை அருந்திட, உற்ற பலன் உண்டு! இத்தல ஈசனை வழிபட்டால் ஆட்சி அதிகார அமைப்புகளில் வெற்றி பெறலாம். சம்பந்தரும் தனது தேவாரத்தில் இவற்றை பதிவு செய்துள்ளார். சுகபுரி கண்டு சுகம் பல பெறுவோம்! விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவில் உள்ள கிளியனூர், திண்டிவனம்-பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் திண்டிவனத்திலிருந்து 18.கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

M. கணேஷ்

Related Stories: