×

இழந்த பதவி, செல்வத்தை மீட்டுத்தருவார் வாலீஸ்வரர்

சேவூர், அவினாசி, கோவை

குரங்கு இனத்தைச் சேர்ந்த வாலி,சுக்ரீவன் இருவரும் ஒரு தாய் மக்கள். வாலியின் தந்தை இந்திரன். சுக்ரீவனின் தந்தை சூரியன். அடர்ந்த வனம் சூழ்ந்த கிஷ்கிந்தா என்னும் வானர நகருக்கு அரசனாக வாலியும், இளவரசனாக சுக்ரீவனும் ஒன்றிணைந்து நல்லாட்சி நடத்தி வந்தனர். வானர சேனைகளின் தளபதியாக அனுமன், இவர்கள் ஆட்சியின் கீழ் பதவி வகித்தனர்.ஒரு முறை மாயாவி என்னும் அரக்கன் யுத்தத்தால் வாலியை வீழ்த்தவே முடியாது என்பதை உணர்ந்து மதியூகத்தால் வீழ்த்த எண்ணி, வாலியை தாக்கிவிட்டு பாதாள லோகத்திற்குள் ஓடிச் சென்று ஒரு பிலத்துவாரத்திற்குள் (குகைக்குள்) ஒளிந்து கொண்டான். அவனை விடாமல் வாலி துரத்திவர, அவனது நிழல் போன்ற சுக்ரீவனும், வாலி பின்னாலேயே ஓடி வந்தான். வாலி, தம்பியை குகைவாசல் முன்பு வேறு அரக்கர்கள் யாரும் உள்ளே வராதபடி தடுத்து நிறுத்த காவலுக்கு நிற்கச் சொல்லி விட்டு குகைக்குள் ஓடினான்.

28 மாதங்கள் ஆயின. குகைக்குள் வாலியும், அரக்கனும் வெளியே வரவே இல்லை. சுக்ரீவனைக் கண்டு வானரங்கள் மனம் சலித்துப் போயினர். இனி நமது அரசர் வாலி உயிருடன் வரமாட்டார் என யூகித்து, சுக்ரீவனை அரச பதவியை ஏற்குமாறு வானரங்கள் வற்புறுத்தின. ஆனால் சுக்ரீவனோ, தனது அண்ணனுக்குத் துரோகம் செய்ய ஒரு காலும் துணிய மாட்டேன் என மறுத்து விட்டான். சில நாட்கள் சென்ற பிறகு, குகைக்குள் இருந்து ரத்தம் ஆறாக ஓடி வர, வாலி இறந்து விட்டான் என யூகித்து, வானரங்கள், அரக்கன் குகைக்குள் இருந்து வெளியே வந்து தங்களைத் தாக்காமல் இருக்க வேண்டி, ஒரு பெரிய மலையைப் பெயர்த்து வந்து குகையின் வாயிலை இறுக்க மூடிவிட்டனர். வேறு வழி இல்லாமல் சுக்ரீவன் வானரங்களின் அரசன் ஆனான்.

இது இப்படி நடக்க, குகைக்குள் நடந்த சண்டையில் வாலி, அரக்கனை வதம் செய்து விட்டு, வெளியே வர வந்தார். குகையின் வாசல் மூடி இருப்பது கண்டு கடும் கோபத்திற்கு ஆளானார். தான் மீண்டும் வரக்கூடாது. என்பதற்காக இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளான் தம்பி என எண்ணி, அவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில், வாசலை மறைத்திருந்த மலையை உடைத்துவிட்டு குகையில் இருந்து வெளியேறினான் வாலி.அண்ணன் வருவதை அறிந்த சுக்ரீவன் அதீத மகிழ்வுடன் ஓடோடிச் சென்று அவனை எதிர் கொண்டான். வாலி, அவனை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததுடன், அவனது மனைவி ருமையை தனதாக்கிக் கொண்டதுடன் நாட்டை விட்டே துரத்தி அடித்தான். அரசனாக தன்னை அறிவித்துக் கொண்ட வாலியை அரசனாக ஏற்க வானரங்கள் மறுத்து விட்டன.

வாலி, விமோசனம் வேண்டி, வசிஷ்ட முனிவரிடம் அடைக்கலம் ஆனான். சுக்ரீவன், அண்ணனின் அன்பு வேண்டி யாசித்து அதற்கான வழிமுறைகளைக் கூறி அருளுமாறு ரிஷ்யமுகபர்வதத்தில் இருந்து மதங்காஸ்ரமத்தில், மதங்கமாமுனிவரிடம் தஞ்சம் புகுந்தான்.
வாலியை, வசிஷ்ட முனிவர், அரக்கனை அவன் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், மீண்டும் வானரங்களுக்கு அரசனாகும் யோகப் பிராப்தி பெறவும், கொங்கு நாட்டிற்குச் செல்லுமாறும், அங்கு, எங்கு, பசுவும், புலியும், பரஸ்பரம் நட்பு பாராட்டி வாழ்கிறதோ, அந்த ஊரில், எழுந்தருளியுள்ள சிவலிங்கரை வழிபடுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

அறநெறி செழித்து ஓங்கி நிலைத்திருக்கும் சேவூர் தலத்தை வாலி வந்தடைந்தான். அதன்படி சேவூர், மாட்டூர், ரிஷபாபுரி (பசுவும், புலியும் சேர்ந்து வாழும் ஊர்) போன்ற பல பெயர்களை உடைத்தாகி இத்தல மகிமை தன்னை உணர்த்துகின்றது. அறத்தின் இரு முக்கிய கூறுகளான தானம், தர்மம் இங்கு நிலைத்து நின்றிட அறப்பெருஞ் செல்வியாக, அம்பாள், இங்கே கோயில் கொண்டுள்ளாள். ஒரு முறை வேமன் என்ற அரக்கன், இத்தலத்து ஆண் மக்களை தர்மநெறியிலிருந்து வழுவி, அதர்ம வழிக்கு வருமாறு வற்புறுத்தி கடுமையாக தண்டித்தான். இத்தலத்துப் பெண்மக்கள் ஒன்று கூடி அம்மன் திருமுன் மாங்கல்ய நோன்பு இருந்து, தங்களது மாங்கல்யத்தைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்டனர். இத்தலத்து அம்மனும் அவர்களது வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அரக்கனை வதம் செய்து, அவனை ஒரு கையில் தாமரை மலராக ஏந்திக் கொண்டு, தர்மத்தையும், மகளிரின் மாங்கல்யத்தையும் காத்து அருளினாள். எனவே இத்தலத்தில், மார்கழியில் வரும் சுமங்கலி பூஜை வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.

அதர்மம், அநீதி, அக்கிரமம், அராஜகம், போன்ற வற்றுக்கு ஆளாகி, நீதிக்கு தண்டனையை அனுபவிக்கும் நிராதிபதிகள், இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வழிபட தர்மம் அருளப் பெற்று இழந்த செல்வாக்கினை, உரிமைகளை, சொத்துக்களை, பதவிகளை பெற அருளப்படுகின்றனர்.
தானத்திலே சிறந்தது கோ(பசு)தானம். காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கினாலும் தொலையாத பாவ, தோஷங்களை கோ - தானம்(அ) கோ - பூஜை செய்வதால் மட்டுமே தொலைகின்றது. இத்தகைய கோ-பூஜையை முதன் முதலில் இத்தலத்து சிவலிங்கரே தொடங்கி வைத்துள்ளார்.

ஒரு முறை விவசாயத் தொழில் கடும் பாதிப்பிற்கு உள்ளான போது, மூவேந்தர்களும், அவர்களுக்கு கீழ் இருந்து அரசாண்டவர்களும், அதிகார வர்க்கத்தினரும், பொதுமக்களும் சேவூர் சிவாலயத்தில் ஒன்றாகக் கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். அதனால் மனம் கனிந்த சேவூரார் மாட்டு வர்க்கத்தினை (பசு, காளை, எருமை) படைக்குமாறு நந்திக்கு திருக்கட்டளை இட்டார். கணக்கில் அடங்காத அளவிற்கு மாடுகள் படைக்கப் பெற்றன. இனி என்ன செய்வது என நந்தி, இறைவனிடம் விண்ணப்பித்துக் கேட்டுக் கொள்ள, அவைகளை தானமாக வழங்கிட, சேவூர் ஆளுடையார், வள்ளல் குணமும், வெள்ளை உள்ளமும் கொண்ட கோ- புத்திரர் வம்சத்தை படைத்தருளினார்.மாடுகள் பிறந்த ஊர் என்பதால் மாட்டூர் என்னும் பெயரினைப் பெற்றது. மாடுகளை அறக் கொடையாக படைத் தருளியதால் இத்தல ஈசன் மாட்டூர் அறவர் என  அழைக்கப்படலானார்.

மாட்டூர் அறவரை, வாலி வழிபட்டு, இழந்த அரசபதவியை மீண்டும் வரமாகப் பெற்றதால், தான் பெற்ற வரம் அதனை வேண்டி வருபவர்களுக்கு அவ்வரத்தினைத் தந்தருளுமாறும், தான் வழிபட்டதன் நினைவாக வாலீஸ்வரர் என்னும் திருநாமம் தன்னை ஏற்றுக் கொண்டு அருளுமாறும் விண்ணப்பித்துக் கொண்டதாலும் இத்திருவருட் திறன் மிக்கவராகத் திகழ்கின்றார். இத்தலத்து நடராஜப் பெருமாள் அக்னி தாண்டவம் ஆடி அருளியுள்ளார். அதன் வெம்மை தாங்க முடியாமல் முனிவர்களும், தவஞானிகளும் சென்று புகுந்து ஒளிந்து கொண்ட தலமே அவினாசியாகும். பிறகு இறைவன் அங்கு எழுந்தருளியதால் திருபுக்கொளியூர் எனப்படலாயிற்று.

கன்னியாகுமரியில் உள்ள மாத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்த வணிகர், இங்கு வந்து வரம் பெற்றதால் வள்ளி, தெய்வானை சமேத திருமுருகனுக்கு சந்நதி எழுப்பி மூவரையும் பிரதிஷ்டை செய்வித்துள்ளார்.இத்தலம், கோவை மாவட்டம், அவினாசி வட்டத்தில் அமைந்துள்ளது. அவினாசியிலிருந்து, மொண்டிப்பாளையம் வழியாக அன்னூர் செல்லும் வழியில், அவினாசியிலிருந்து 8.கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இறைவி

Tags : Valaiswara ,
× RELATED அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?