×

திருக்கோஷ்டியூர் - அஷ்டாங்க விமானம்

திருமாலின் 108 திவ்யதேசங்களுள் ஒன்றான இத்தலத்தில் பெருமாள் சௌமிய நாராயணனாகவும், தாயார் திருமாமகளாகவும் அருள்கின்றனர். கருவறையில் பெருமாளுடன் ஸ்ரீதேவி-பூதேவி தவிர, மது, கைடபர், இந்திரன், புரூருப மன்னன், கதம்ப முனிவர், நான்முகன், சரஸ்வதி, சாவித்ரி ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.

கருவறையில் குழந்தை வடிவில் பிரார்த்தனை கண்ணன் எனும் பெயரில் சந்தான கிருஷ்ணர் கொலுவிருக்கிறார். மழலை வரம் வேண்டுவோர் இவருக்கு விளக்கேற்றி வழிபட, குழந்தைச் செல்வம் பெறுகிறார்கள்.இரண்ய வதத்திற்காக இத்தலத்தில் தவம்புரிந்த தேவேந்திரன் தான் பூஜித்து வந்த சௌமிய நாராயணமூர்த்தியின் திருவுருவை கதம்ப மகரிஷிக்கு அளித்தார். அந்த மூர்த்தியே இத்தல உற்சவராக அருள்கிறார். அவர் பெயரிலேயே இத்தலம் உள்ளது.

தல தீர்த்தங்களாக தேவ புஷ்கரணியும், மகாமக தீர்த்தமும் விளங்குகின்றன. புரூருப மன்னன் இத்தலத்தை திருப்பணி செய்தபோது
மகாமகம் வந்தது. அப்போது இத்தல கிணற்றில் கங்கை பொங்கினாள். பெருமாளும் கருடாரூடராய் மன்னனுக்குக் காட்சியளித்தார். இன்றும் 12 வருடங்களுக்கு ஒருமுறை, மகாமகத்தின்போது பெருமாள் இந்த கிணற்றருகே எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார்.

பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலம் இது. மூலவரின் கருவறை மேல் உள்ள அஷ்டாங்க விமானம், உலகப் புகழ்பெற்றது. அந்த விமானத்தின் மீதேறியே ராமானுஜர் அஷ்டாக்ஷர மந்திரத்தை உலகிற்கு உபதேசித்தார். இந்த விமானத்தில் ராமானுஜரை சிலை வடிவில் தரிசிக்கலாம்.

ராமானுஜரின் குரு, நம்பியின் வீடு, ராமானுஜர் சிலைக்கு நேரே இருக்கிறது. அது கல் திருமாளிகை என அழைக்கப்படுகிறது. தேவசிற்பி விஸ்வகர்மாவும் அசுரசிற்பி மயனும் சேர்ந்து இத்தல அஷ்டாங்க விமானத்தை அமைத்தனர். ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது அற்புதம்.விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணன் எனும் பூலோக பெருமாளையும் முதல் தளத்தில் சயனத் திருவுருவில் சௌமியநாராயணன் எனும் திருப்பாற்கடல் பெருமாளையும் இரண்டாவது தளத்தில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணன் எனும் தேவலோக பெருமாளையும் மூன்றாம் தளத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பரமபதநாதன் எனும் வைகுண்ட பெருமாளையும் தரிசிக்கலாம். ஹிரண்ய வதம் நிகழ்வதற்கு முன்னேயே திருமால் தன் நரசிம்ம வடிவத்தை கதம்ப மகரிஷிக்கு காட்டியருளிய தலம் இது! அவருக்கு, தன் கிடந்த, இருந்த, நடந்த, நின்ற கோலங்களையும் காட்டி, அவ்வாறே நிலையும் கொண்டார், திருமால்.

 தேவர்களின் திருக்கை(துன்பத்தை) ஓட்டிய தலம் என்பதால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என்றாயிற்று.  தாயார் குலமாமகள், நிலமாமகள் என்ற பெயர்களிலும் வணங்கப்படுகிறார். இத்தலத்தில் விளக்கு நேர்த்திக்கடன் மேற்கொள்கிறார்கள். ஒரு அகலை ஏற்றி பெருமாளிடம் வைத்து, அது எரிந்து முடியும்வரை காத்திருந்து, பின் வீட்டிற்கு எடுத்துச் சென்று காசும், துளசியும் அதனுடன் சேர்த்து, சிறு பெட்டியில் மூடி பூஜையறையில் வைக்கின்றனர். அதில் பெருமாளும், தாயாரும் உறைவதாக ஐதீகம்.

இதனால் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசிமாத தெப்பத் திருவிழாவின்போது அந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை ஏற்றி தெப்பக்குள கரையில் வைத்து வழிபடுகின்றனர். அஷ்டாங்க விமானத்தில் வடபாகத்தில் நரசிம்ம மூர்த்தியும் அவருக்கு அருகில் ராகு, கேது இருவரும் வீற்றுள்ளனர். இது அபூர்வ தரிசனமாகக் கருதப்படுகிறது.

ஆலய முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று உள்ளதும் இன்னொரு அதிசயம். திருமணத் தடை உள்ளவர்கள் நெய் தீபமேற்றி அத்தடையை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். திருப்பத்தூர் - சிவகங்கை பாதையில் திருப்பத்தூரிலிந்து 9 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

Tags : Thirukkothiyoor - Ashtanga ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?