×

மயிலை கபாலீஸ்வரர் எண்ணற்ற சுதைச்சிற்பங்கள்

கயிலையே மயிலை; மயிலையே கயிலை’. அதாவது கயிலைக்குச் சமமான தலம் சென்னையிலுள்ள மயிலை என்று பொருள்.

சென்னை கோயில்களிலேயே இந்த மயிலை கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரத்தில்தான் அதிக அளவு சிற்பங்கள் இடம் பெற்றிருக்கும் சிறப்பு பெற்றது இத்தலம்.  பிரணவத்திற்கு ஈசன் பொருள் சொன்னபோது அதில் மனத்தை செலுத்தாமல் தன்னருகில் ஆடிய மயிலின் அழகில் மனதைப் பறி கொடுத்தாள் உமையன்னை. இதனால் கோபமுற்ற ஐயன், அன்னையை மயிலாக மாற சாபமிட்டார். உமை, மயிலாக மாறி ஈசனை பூஜித்ததால் இத்தலம் மயிலாப்பூர் என்றானது. தல கணபதி பொதுவாக அமர்ந்த நிலையில் காணப்படுவார். ஆனால் இத்தலத்தில் அவர் நர்த்தன கணபதியாக வணங்கப்படுகிறார்.

அன்னை இங்கே கற்பகாம்பாள் எனும் பெயரில் அருள்பாலிக்கிறாள். கற்பகத் தரு போல விரும்பியதையெல்லாம் நிறைவேற்றும் பேரன்பு மிக்கவளாக அன்னை திகழ்கிறாள். கோயிலில் முதலில் கற்பகாம்பாளை வழிபட்டு அதன் பின்னரே மூலவர் கபாலியை வணங்குவது மரபு. அம்பிகை சந்நதி பிராகாரத்தில் சோமாஸ்கந்தரும், நடராஜரும் அருள்கின்றனர். அஞ்சனை மைந்தனான அனுமன் இத்தலத்தில் தனி தூணில் சிறப்பாகக் காட்சியளிக்கிறார். இவருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

கபாலீஸ்வரர் சந்நதியின் கோஷ்டத்தில் அருளும் துர்க்காம்பிகையும், தட்சிணாமூர்த்தியும் வரப்பிரசாதிகளாகத் திகழ்கின்றனர். செவ்வாய்க்கிழமை துர்க்காம்பிகைக்கும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை ராகுகால வேளைகளில் இந்த துர்க்காம்பிகைக்கு பக்தர்கள் மாதுளை முத்துகளால் அர்ச்சித்து திருமண வரம் கிட்டப் பெறுகின்றனர். இத்தலத்தில் வாழ்ந்த சிவநேச செட்டியாரின் பெண் பூம்பாவை பாம்பு கடித்து இறக்க, ஞானசம்பந்தர் பதிகம் பாடி, எரித்த சாம்பலிலிருந்து அந்தப் பெண்ணை மீண்டும் உயிரோடு எழுப்பிய அற்புதம் இங்கே நிகழ்ந்தது. கபாலீஸ்வரர் சந்நதி பிராகாரத்தில் முப்பெருந்தேவியரும் தனி சந்நதியில் வீற்றிருந்து அருள்கின்றனர். சனிப்பிரதோஷ தினத்தன்று சென்னை நகரிலிருந்து மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குழுமுகிறார்கள்.

அதிகார நந்தி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் நடக்கும் இவ்வைபவம் உலகப்புகழ் பெற்றது.ஆலயத்தில் உள்ள திருக்குளம் ததும்பத் ததும்ப நீரோடும் ஏராளமான மீன்களோடும் செழிப்புடன் திகழ்கிறது. இங்கு தெப்பத் திருவிழா அதி அற்புதமாக நடைபெறுகிறது. நவராத்திரி வைபவம் இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பொம்மைகளுடன், கொலு அனைவரையும் ஈர்க்கிறது.

ஆலய பிராகாரத்தில் மயிலுருவாய் தேவி ஈசனை பூஜிக்கும் தலபுராண சிற்பத்தை புன்னை மரத்தடியில் தரிசிக்கலாம். ஈசன் கையில் கபாலத்தை ஏந்தியதால் கபாலி என இத்தலத்தில் போற்றப்படுகிறார். இத்தல முருகன், வரமருளுவதில் நிகரற்றவர். குறிப்பாக நோயுற்றவர்களுக்கு, வைத்தீஸ்வரன் கோயில் முருகன் போல தண்ணருளை வாரி வழங்குகிறார்.

இந்த முருகன் குப்பத்து சாமியாக, வருடத்துக்கு ஒருநாள் மந்தைவெளியிலுள்ள ஏழை, எளியவர் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு தரிசனம் தருகிறார். இத்தல அறுபத்துமூவர் திருவிழா உலகப் புகழ் பெற்றது. சிவனடியார்களான நாயன்மார்கள் அறுபத்து மூவருக்கும் பல்லக்கு ஊர்வல மரியாதை செலுத்தி ஈசன் அவர்களைப் போற்றும் விழா இது. சென்னை நகரின் மையப்பகுதியில் திருமயிலை ரயில் நிலையம் அருகே உள்ளது இக்கோயில்.

Tags :
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா