×

திருமண வரம் தரும் மங்கைபாகர் தேனம்மை

சிவகங்கையிலிருந்து 60 கிமீ தொலைவில் பிரான்மலை உள்ளது. இங்கு குன்றக்குடி ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற மங்கைபாகர் தேனம்மை கோயில் உள்ளது. சிவன் கோயில்கள் அனைத்திலும் லிங்க வடிவிலேயே சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இங்கு உருவ வடிவில் மங்கைபாகர் காட்சியளிக்கிறார். மேலும் வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக மங்கைபாகர் மீது திருமண கோலத்தில் சாய்ந்த நிலையில் தேனம்மை காட்சியளிக்கிறார்.

தல வரலாறு

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 14 சிவத்தலங்களில் 5வது திருத்தலமாக இக்கோயில் உள்ளது.  திருவண்ணாமலை ஆதீனம் கட்டுப்பாட்டிலிருந்த இந்த கோயில் 17ம் நூற்றாண்டு முதல் குன்றக்குடி ஆதீனம் கட்டுபாட்டின் கீழ் வந்தது.  மன்னர் பாரிவள்ளல் ஆட்சி காலத்தில் பாரி நாடு, சங்க காலத்தில் பறம்புமலை, திருஞானசம்பந்தர் காலத்தில் கொடுங்குன்றம் என இப்பகுதி அழைக்கப்பட்டது. பின்னர் நரசிங்கராயர் காலம் முதல் பிரான்மலை என அழைக்கப்படுகிறது. இத்திருத்தலம் தென்கயிலாயம், கடோரகிரி என்பது உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறது. மலை அடிவாரத்தில் பாதாளம், பூமி, கயிலாயம் என 3 நிலைகளாக கோயில் அமைந்துள்ளது. இதில் பாதாளம் (கீழ்நிலை) நிலையில் திருக்கொடுங்குன்றநாதர், குயிலமுத நாயகி அம்மன் மற்றும் சுப்பிரமணியர் சுவாமி சன்னதிகள் உள்ளன.  பூமி (நடு) நிலையில் விசுவநாதர், விசாலாட்சியம்மன் மற்றும் வடுகபைரவர் சன்னதிகள்  உள்ளன. கயிலாய (மேல்) நிலையில் தேனம்மை சமேத மங்கைபாகர் சன்னதி உள்ளது. இது குடவரை கோயிலாகும்.

*******
இளம்பெண்கள் வெள்ளைநிற பூக்களை தேனம்மை சமேத மங்கைபாகருக்கு அணிவித்து வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இங்குள்ள சுந்தரபாண்டிய மண்டபத்தின் நடுவில் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தூண்கள் வரிசையாக கட்டப்பட்டுள்ளன. திருக்கொடுங்குன்றநாதர் கோயில் பிரகாரத்தில் உள்ள தூண்கள் அழகிய வேலைப்பாடுகளுடனும், யாளி சிற்பங்களுடனும் காணப்படுகிறது. இங்குள்ள பிரகார மண்டபங்கள் ராமேஸ்வரம் ராமநாதர் சுவாமி கோயிலில் உள்ள பிரகார மண்டபம் போல் காணப்படுகிறது. கோயில் விருட்சமாக பலா மரம் உள்ளது.  கோயில் வளாகம் மற்றும் மலையின் மேல் பகுதியில் தேனாடி தீர்த்தம், குஷ்ட நிவாரண தீர்த்தம், சோமதீர்த்தம், அம்பாள் தீர்த்தம், சித்த தீர்த்தம் என  108  தீர்த்தங்கள் உள்ளன.

 *******

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடக்கிறது. திருக்கார்த்திகையின்போது மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றிய பின்னரே பிரான்மலை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 50 கிராம மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி விரதத்தை முடிக்கின்றனர்.
இங்கு பிரான்மலை, சிங்கம்புணரி பக்தர்கள் மட்டுமின்றி சிவகங்கை மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். 

Tags : Mangaibakar Dhanam ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?